Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, September 28, 2026

அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் உயர்கல்வியில் 7.5% இடஒதுக்கீடு - தீர்மானம்




அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் உயர்கல்வி 7.5% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் (TNASTF) மாநில பொதுக்குழுக் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள ஐசிஎஸ்ஏ(ICSA) திடலில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஜெ. கண்ணன் தலைமை வகித்தார். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் வரவேற்புரையாற்றினார். மாநில கௌரவத் தலைவர் புலவர் மா. கணபதி தொடக்கவுரையாற்றினார்.

பொதுச் செயலர் அ. அமலராஜன் வேலை அறிக்கையையும், மாநிலப் பொருளாளர் ஒய். தயாளன் வரவு–செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

கூட்டத்தில் துணைப் பொதுச் செயலர் சிவ ஸ்ரீ ரமேஷ், தென் மண்டலச் செயலாளர் சாந்தசீலன், வடக்கு மண்டலச் செயலர் எஸ். ராஜா ஜெயசிங், அமைப்புச் செயலர் வ. செல்வம், தலைமையிடச் செயலர் ஆர். ஆனந்தன், துணைத் தலைவர்கள் என். பழனி, எஸ்ஆர். சகாயமேரி, எஸ். சவரிமுத்து, பி. ஐசக் சாம்ராஜ், இணைச் செயலர்கள் டி. துரைசாமி பாண்டியன், குழந்தை ஆரோக்கிய மேரி, அப்துல் ரஜாக் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்று கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் ரேமண்ட், மாவட்டத் துணைத் தலைவர் பிரேம், தூத்துக்குடி மாவட்டச் செயலர் மோகன், மாவட்ட நிர்வாகிகள் வேளாங்கண்ணி, வினோத், மோகன், முன்னாள் தலைமையிடச் செயலர் பழனிவேலு மற்றும் சென்னை மாவட்டப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாநிலச் செயல் தலைவர் த. கனகராஜ் நிறைவுரையாற்றினார். சென்னை மாவட்டச் செயலர் புஷ்பராஜ் நன்றி கூறினார்.

கூட்டத்தில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:

1. காலை உணவுத் திட்டம்:

விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவதுபோல், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் செயல்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

2. 7.5% உயர்கல்வி இடஒதுக்கீடு:

மாணவர் நலனைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% உயர்கல்வி இடஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தப்பட்டது.


3. ஆங்கில வழிப் பிரிவுகள் மற்றும் ஆசிரியர் பணியிட நிர்ணயம்:

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படுவதுபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழிப் பிரிவுகளைத் தொடங்க அனுமதி வழங்க வேண்டும். மேலும், EMIS பதிவுகளின் அடிப்படையில் அனைத்து மாணவர்களையும் ஆசிரியர் பணியிட நிர்ணயத்தில் கணக்கில் எடுத்துக்கொண்டு, மாநிலம் முழுவதும் நிலவும் உபரி ஆசிரியர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

4. நிலுவைக் கோப்புகளுக்கு விரைந்து தீர்வு:

பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்களில் நிலுவையில் உள்ள, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் விதிகளுக்கு உட்பட்டு பணப்பலன் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் பள்ளி அங்கீகாரம் புதுப்பித்தல் தொடர்பான கோப்புகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். தேவையற்ற காலதாமதம் ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதால், தமிழக அரசு இவ்விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

5. பழைய ஓய்வூதியத் திட்டம்:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஓய்வூதியப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme – OPS) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


6. மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி:

இரண்டாம் கட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளை தேர்தல் காலங்களில் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், இப்பணிகளில் ஈடுபடும் பள்ளி ஆசிரியர்களின் உயிருக்கும் உடைமைக்கும் உரிய பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேற்கண்ட தீர்மானங்களைச் செயல்படுத்துவதற்காக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் உயர் அலுவலர்களையும் நேரில் சந்தித்து முறையீடு அளிப்பதுடன், தேவை ஏற்படும் பட்சத்தில் பள்ளி நிர்வாகிகளையும் ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து மாநிலம் தழுவிய போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் பொதுக்குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


No comments:

Post a Comment

LightBlog