கடந்த 2025–26 ஆம் நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ₹46,767 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ஒதுக்கீடு ₹2,240 கோடிக்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது. இது சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் கடந்த 2025ஆம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரூ. 46,767 கோடி ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைந்த தவெக அரசு 2026 – 2027 நிதியாண்டிற்கான கல்வித் துறைக்கு ரூ. 44,527 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டிற்கும், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள முழு பட்ஜெட்டிற்கும் உள்ள வித்தியாசம் ரூ. 2,240 கோடி குறைவாக இருக்கிறது.
நிதி ஒப்பீடு (கடந்த ஆண்டு vs இந்த ஆண்டு)
- 2025–26 நிதி ஒதுக்கீடு: ₹46,767 கோடி
- 2026–27 நிதி ஒதுக்கீடு: ₹44,527 கோடி
- குறைக்கப்பட்ட நிதி: சுமார் ₹2,240 கோடி
அரசு மற்றும் நிதியமைச்சர் தரப்பில் இதற்குக் கூறப்படும் முதன்மையான காரணங்கள் மற்றும் விளக்கங்கள்:
1. உள்கட்டமைப்பு பணிகளின் கட்டமைப்பு மாற்றம் (Capital Expenditure Shift)
கடந்த நிதியாண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைப் பட்ஜெட்டின் கீழ் ஒரே அடியாக மேற்கொள்ளப்பட்ட வகுப்பறை மற்றும் கட்டிடக் கட்டுமானப் பணிகள் (பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் போன்றவை) பல இடங்களில் நிறைவடைந்துள்ளன.
இந்த ஆண்டு பள்ளி நவீனமயமாக்கல் திட்டங்கள் (₹2,132 கோடி மதிப்பில் 3,734 பள்ளிகள்) மற்றும் விடுதிகள் அமைக்கும் திட்டங்கள் (₹3,200 கோடி) 'தமிழ்நாடு மாணவர் விடுதிகள் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனம்' (TNSHIC) போன்ற பிரத்யேக பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாகவும், சிறப்பு மூலதன நிதி மூலமாகவும் பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன.
2. பிற துறைகள் மூலம் கல்விச் சார்ந்த திட்டங்கள் அமலாக்கம்
கல்வி சார்ந்த பல திட்டங்களுக்கான செலவுகள் உயர்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மற்றும் சமூக நலத்துறை (₹9,818 கோடி) ஆகியவற்றின் கீழ் பகிர்ந்தளிக்கப்பட்ட நிதியில் இருந்து செயல்படுத்தப்படுகின்றன.
உதாரணமாக, கல்லூரி மாணவர்களுக்கான வெற்றி மடிக்கணினி திட்டம் (₹2,000 கோடி) மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் உயர்கல்வி மற்றும் இளைஞர் நலத்துறை கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ளன.
3. நிர்வாக நடைமுறைச் சீரமைப்பு & டிஜிட்டல் முறைகள்
பள்ளிகளில் தேவையற்ற பராமரிப்பு விரயங்களைத் தவிர்க்க 'சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ்' (₹139 கோடி) போன்ற ஒருங்கிணைக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட பராமரிப்பு முறைகள் கொண்டுவரப்படுவதால், துறை சார்ந்த நேரடிச் செலவுகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
4. மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதிச் சுமை மேலாண்மை
மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறையைச் சீர்செய்வதற்கும் (Fiscal Consolidation), மூலதன முதலீடுகளுக்கு நிதி திருப்புவதற்கும் மேற்கொள்ளப்பட்ட துறை சார்ந்த நிதிச் சீரமைப்பே (Budget Realignment) தவிர, கல்வித் திட்டங்களை முடக்குவது நோக்கமல்ல என அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்துள்ள இன்றைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், “வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது.
2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.46,767 கோடி. இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை செலவிடப்பட்ட தொகை 42,351 கோடி மட்டும்தான். திமுகவின் இடைக்கால பட்ஜெட்டில் பல ஊதிய வரம்புகளையும், செலவினங்களையும் மிகை மதிப்பீடு செய்துள்ளனர். திமுகவின் கடைசி பட்ஜெட்டான 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி என அதிகரிக்கப்பட்டது.
பட்ஜெட்டில் உண்மையாக செலவு செய்யப்பட்டதைவிட சுமார் ரூ. 6,003 கோடி காரணமே இல்லாமல் உயர்த்தப்பட்டது. காரணமற்ற இந்த உயர்வுக்கு பின்னால் இருந்தது தவறான கணக்கீடுகளும், தேவையற்ற நிதி உயர்வுகளும் மட்டுமே. திமுக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு செலவிடப்பட்டதைவிட சுமார் ரூ.2176 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித் துறை நிதி விமர்சனங்கள் குறித்து பதில் அளித்த நிதித் துறை செயலாளர் சித்திக், “பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரை எந்தத் திட்டங்களும் குறைக்கப்படவில்லை, புதிய திட்டங்கள்தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறையில் ஊதிய செலவின மதிப்பீடு அதிகரிக்கப்பட்டிருந்தது. அதனை நாம் சரி செய்துள்ளோம். கடந்த ஆண்டு கல்வித்துறையின் சரியான செலவினம் ரூ. 42,351 கோடி. ஆனால், இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 48,534 கோடி என ஒரு வருடத்தில் எந்தவித புது திட்டங்களும் இன்றி சுமார் ரூ. 6,000 கோடி அதிகரிக்கப்பட்டிருந்தது. எனவே கடந்த ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை செலவினமான ரூ. 42,531 கோடியில் இருந்து அதிகரிக்கப்பட்டு தற்போது ரூ. 44,527 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அதாவது கடந்த திமுக ஆட்சியில் 2025ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ. 46,767 ஒதுக்கப்பட்டாலும், ரூ. 42,531 கோடி மட்டுமே செலவிடப்பட்டது எனவும், ஆனால், தற்போது கூடுதல் செலவினத்தையும் கணக்கில் கொண்டு சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி அதிகரிக்கப்பட்டு, பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ. 44,527 கோடியாக உயர்த்திருப்பதாகவும் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment