குழந்தைகள் தினத்தையொட்டி, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 61,84,566 கேக்குகளைக் கொள்முதல் செய்ய ரூ.9.27 கோடி மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது தமிழக அரசு.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினமாக (Children's Day) கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்டிருந்த நேருவை, குழந்தைகள் அன்புடன் 'நேரு மாமா' என்று அழைத்தனர். அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், இத்தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளின் உரிமைகள், கல்வி, நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே குழந்தைகள் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிலையில், இந்த ஆண்டு குழந்தைகள் தினத்தையொட்டி, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.9.27 கோடி மதிப்பில் கேக் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மொத்தம் 61,84,566 ஸ்பாஞ்ச் கேக் துண்டுகள் வழங்கப்பட உள்ளதாகவும், ஒவ்வொரு கேக்-கும் 45 கிராம் எடை கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மிக்ஸ்டு ஃப்ரூட், கிளாசிக் வெனிலா, ரிச் சாக்லேட் மற்றும் பட்டர் அல்லது மில்க் என நான்கு வகைகளில் கேக்குகள் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு கேக்குகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள ஒப்பந்தப்புள்ளியில், “கலப்பு பழங்கள் (மிக்ஸ்டு ஃப்ரூட்), கிளாசிக் வெனிலா, ரிச் சாக்லேட், வெண்ணெய் அல்லது பால் சுவைகளில் கேக்குகள் வழங்கப்பட வேண்டும். ஒப்பந்தப்புள்ளி மதிப்பீட்டின்போது, ஒவ்வொரு வகையான கேக்கின் மாதிரியும் ஆய்வுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கேக்குகள் தரமானதாகவும், மென்மையாகவும், இனிமையான மணத்துடனும் இருக்க வேண்டும். பூஞ்சை, கெட்டுப்போன கொழுப்பின் துர்நாற்றம் மற்றும் செயற்கை ரசாயனத்தின் பின்சுவை ஆகியவை இருக்கக்கூடாது. மேலும், டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட நிறமூட்டிகள் இல்லாத கேக்குகளாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று கேக்குகள் விநியோகம் செய்யப்படும்போது, அவற்றின் காலாவதி காலத்தில் குறைந்தபட்சம் 30 நாட்கள் எஞ்சியிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவுப் பாதுகாப்புக்கு ஏற்ற வகையில், ஈரப்பதம் புகாத உறைகளில் கேக்குகள் தனித்தனியாகப் பேக் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
கேக்குகளைத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான செயல்பாட்டில் உள்ள அனைத்து கிடங்குகளுக்கும் ஒப்பந்ததாரர்கள் நேரடியாக விநியோகம் செய்ய வேண்டும். போக்குவரத்துச் செலவு, சரக்குக் காப்பீடு, இறக்குதல் மற்றும் கிடங்குகளில் அடுக்கி வைப்பது உள்ளிட்ட செலவுகளையும் ஒப்பந்ததாரர்களே ஏற்க வேண்டும்.
ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்கும் நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் விநியோக தன்மை கொண்டிருக்க வேண்டும். மேலும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) உரிமங்கள், ISO/HACCP தரச் சான்றிதழ்கள், பிராண்ட் பதிவு மற்றும் வர்த்தக முத்திரை ஆவணங்கள், பட்டயக் கணக்காளரால் (CA) சான்றளிக்கப்பட்ட விற்றுமுதல் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கேக்குகளின் தரம் மற்றும் காலம் கெடாமல் இருக்கும் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலைத்தன்மைச் சோதனை அறிக்கைகளையும் சமர்ப்பிக்க வேண்டும். இதுதவிர, நிதி நிலைத்தன்மைக்கான சான்றிதழ், முந்தைய ஒப்பந்தப் பணிகள் மற்றும் அனுபவத்துக்கான சான்றுகள், தொழில்நுட்ப நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கான உறுதிமொழிகள் ஆகியவையும் அவசியம்.
இந்த ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்கும் நிறுவனங்கள் ரூ.9,27,685-யை முன்வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். ஒப்பந்தத்தைப் பெறும் நிறுவனம், மொத்த ஒப்பந்த மதிப்பில் 5 சதவீதத்தைப் பாதுகாப்பு வைப்புத்தொகையாகச் செலுத்த வேண்டும்.
ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்கும் நிறுவனங்கள், www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் இரண்டு தனித்தனி மின்னணு உறைகளில் தங்களது ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
முதல் உறையில், முன்வைப்புத் தொகை செலுத்தியதற்கான ஆதாரம், பிராண்ட் பதிவு ஆவணங்கள், விநியோக வலையமைப்புக்கான சான்றுகள், உணவுப் பாதுகாப்பு உரிமங்கள், தரச் சான்றிதழ்கள், ஆய்வக அறிக்கைகள், விற்றுமுதல் மற்றும் நிதி நிலைத்தன்மைக்கான சான்றிதழ்கள் உள்ளிட்ட தொழில்நுட்பம் மற்றும் வணிகம் சார்ந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இரண்டாவது உறையில், மாவட்டக் கிடங்குகளுக்குக் கேக்குகளை விநியோகம் செய்வதற்கான போக்குவரத்து, காப்பீடு, இறக்குதல் மற்றும் பிற செலவுகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு கேக்குக்கான இறுதி விலையைக் குறிப்பிட்டு, நிர்ணயிக்கப்பட்ட மின்னணு விலைப்புள்ளிப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கியமாக, முதல் உறையில் விலை தொடர்பான எந்த விவரத்தையும் குறிப்பிடக்கூடாது. அவ்வாறு குறிப்பிட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தப்புள்ளி தகுதி நீக்கம் செய்யப்படும்” என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment