Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, September 7, 2026

ஆசிரியர்கள் பெயருக்கு முன்பு இனி ‘Tr’ என பயன்படுத்தலாம்




கர்நாடகாவில் ஆசிரியர்கள் தங்களது பெயர்களுக்கு முன்னால் ‘Tr’ என பயன்படுத்திக் கொள்ளலாம் என அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவித்தார்.

கர்நாடக மாநிலம், பாகல்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற வறட்சி நிலவரம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் பங்கேற்றார். இந்த கூட்டத்துக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

இன்று (சனிக்கிழமை) ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி ஆசிரியர்கள் இருக்கின்றனர். கர்நாடகாவில் சுமார் 4.5 லட்சம் ஆசிரியர்களும், இந்நாட்டின் எதிர்கால தலைமுறையை உருவாக்கும் பணியில் தியாக மனப்பான்மையுடன் செயலாற்றி வருகின்றனர்.

நம்முடைய உயிரை காப்பாற்றும் மருத்துவர், நாம் வாழும் கட்டிடத்தை கட்டும் பொறியாளர், நமக்கு உணவளிக்கும் விவசாயி, சேவை செய்யும் அதிகாரி, புதுமையை உருவாக்கும் தொழில்முனைவோர், நமக்கு வழிகாட்டும் தலைவர் ஆகிய அனைவரையும் உருவாக்குவதில் ஆசிரியருக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர்கள்தான் நம்முடைய தனித்திறனை கண்டறிந்து ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்கின்றனர்.

இந்த ஆசிரியர் தினத்தில், ஆசிரியர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை கவுரவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி க‌ர்நாடகாவில் ஆசிரியர்கள் தங்கள் பெயர்களுக்கு முன்னால் 'Tr' என்ற முன்னொட்டைப் பெருமையுடன் பயன்படுத்தலாம்.

மருத்துவர்கள் ‘Dr’, பொறியாளர்கள் ‘Er’ பேராசிரியர்கள் ‘Prof’ போன்ற தொழில்முறைப் பட்டங்களை முன்னொட்டாக பயன்படுத்துகின்றனர். அதுபோல ஆசிரியர்களும் இனி இந்த முன்னொட்டை பயன்படுத்தலாம். இந்த இரண்டு எழுத்து அவர்களுடைய வாழ்நாள் சேவையின் அடையாளம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

LightBlog