சும்மா பெருமை பேசினால் போதுமா? அரசுப் பள்ளி மாணவன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் நீ, உன் பிள்ளைகளை ஏன் தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறாய்? அரசுப் பள்ளிகள் தரம் குறைந்தவை என்ற எண்ணத்திலா?” எனச் சிலர் கேட்கிறார்கள்.
முகத்தில் அறையும் இந்தக் கேள்விக்கு என் அகத்தை திறந்து விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளேன்; - இயக்குனர் சீனு ராமசாமி
என் மீது அன்பும் உரிமையும் கொண்ட நண்பர் ஒருவர் கேட்ட இந்தக் கேள்வி, மேலோட்டமான ஒன்றல்ல; அது ஆழமான சமூக நியாயத்தைக் கொண்டிருக்கிறது.
இதற்கு என்னால் ஒரு வரியில் பதில் சொல்லிவிட முடியாது. நான் எத்தனையோ தர்க்கரீதியான விளக்கங்களை அடுக்கினாலும், என்னை உற்று நோக்கும் என் நண்பர்களின் ஆழ்மனதில் இந்தக் கேள்வி ஒரு தார்மீக உறுத்தலாகவே இருக்கும் என்பதையும் நான் உணர்கிறேன்.
என் சிறு வயதில் நான் சார்லஸ் கான்வென்ட் பள்ளியில் தான் படிக்கத் தொடங்கினேன்.
ஆனால், அதன் பிறகு எங்கள் குடும்பப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட கடுமையான மாற்றங்கள் மற்றும் என் தந்தையின் தொழிலில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, நாங்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளானோம்.
அந்தச் சூழலில் எனக்கான கதவுகளைத் திறந்து வைத்து, எனக்குக் கல்வியையும், வாழ்க்கையையும் அளித்து, ஏந்திப் பிடித்தது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தான்.
முதலில் மதுரையில் உள்ள சவிதாபாய் மேல்நிலைப் பள்ளி,
பிறகு சௌராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளி,
அதன் பிறகு பழங்காநத்தம் டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளி
என நான் பயின்ற அந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் யாவும் எங்களை அன்போடு அரவணைத்துக் கொண்டன.
இன்று நம் சமூகத்தில் நிமிர்ந்து நிற்கும் பெரும்பாலான முதல் தலைமுறைக் கல்வியாளர்களையும், கலைஞர்களையும், ஆளுமைகளையும் உருவாக்கிய தாய் வீடு அரசுப் பள்ளி என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இங்கு ஒரு உண்மையை நான் மிக வெளிப்படையாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஒருவேளை எனக்கு திரைப்பட இயக்குநராகும் வாய்ப்பு கிடைக்காமலோ, என் பொருளாதாரச் சூழல் மாறாமலோ இருந்திருந்தால், என் பிள்ளைகள் நிச்சயம் அரசுப் பள்ளியில் தான் படித்திருப்பார்கள்.
அன்று அரசுப் பள்ளி எனக்குக் கொடுத்த கல்வியும் வாழ்வாதாரமும் தான், இன்று என் பிள்ளைகளின் கல்விக்கான ஒரு தேர்வை எடுக்கும் பொருளாதார வலிமையை எனக்கு வழங்கியது.
தாயின் கையைப் பிடித்து நடந்த குழந்தை, தான் வளர்ந்து ஆளான பிறகு தன் பிள்ளைகளைத் தன் தோளில் தூக்கி வைத்து உலகத்தைக் காட்டுவதைப் போன்றது தான் இது.
தோளில் தூக்கி வைப்பதால் தரையின் தரம் குறைந்ததாகிவிடாது; அந்தத் தரை கொடுத்த பலத்தில் தான் என் தோள்களே வலுவடைந்தன. இது அரசுப் பள்ளி உருவாக்கிய ஒரு தலைமுறையின் இயல்பான வளர்ச்சி.
ஆனால், இந்தத் தனிப்பட்ட முடிவுக்குப் பின்னால் இருக்கும் சமூகச் சூழலை ஆழமாகச் சிந்தித்தால், தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் நிலவும் மிக முக்கியமான ஒரு பிரச்சினை வெளிப்படும். அது தான் கல்வியில் இருக்கும் வேறுபாடுகள்.
சமூகத்தில் நிலவும் சாதிய, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை வீழ்த்துவதற்கான ஆகப் பெரிய ஆயுதம் ‘கல்வி’தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால், அந்த சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்க வேண்டிய கல்வியிலேயே ஏற்றத்தாழ்வுகள் உறைந்திருந்தால் நாம் என்ன செய்வது? இதுதான் இன்று நம் சமூகத்தின் முன் நிற்கும் முதன்மையான கேள்வி.
சமூக நீதியை முதன்மை அரசியலாகப் பேசும் ஒரு நாட்டில், அடிப்படையான கல்வியிலேயே சமூக நீதி முழுமையாகச் சாத்தியமாகவில்லை என்பது தான் கசப்பான நிதர்சனம்.
ஏழைகளுக்கு ஒரு கல்வி, பணக்காரர்களுக்கு ஒரு கல்வி என்ற நிலை மாற வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் அரசு செயல்படுத்தி வரும் காலை உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம், மாலை உணவுத் திட்டம் ஆகியவை உண்மையில் மிகவும் வரவேற்கத்தக்க மற்றும் பாராட்டுக்குரிய திட்டங்களாகும்.
இவை எளிய குடும்பத்துக் குழந்தைகளின் பசியைப் போக்கி அவர்களைப் பள்ளிக்கு வரவழைக்கின்றன.
அரசுப் பள்ளி நம்மைத் தேர்வு செய்கிறது; ஆனால், பொருளாதாரத்தில் சற்று வளர்ந்து, பள்ளியைத் தேர்வு செய்யும் இடத்திற்கு ஒரு மனிதன் வரும்போது, பாடத்திட்டங்களிலும் வசதிகளிலும் நிலவும் போதாமைகள் அவனைத் தனியார் பள்ளியை நோக்கித் தள்ளுகின்றன.
இது ஒரு தனிநபரின் கொள்கை விலகல் அல்ல; மாறாக, கல்வி அமைப்பில் நிலவும் ஏற்றத் தாழ்வு ஒரு சராசரிப் பெற்றோருக்குள் உருவாக்கும் பயத்தின் வெளிப்பாடு.
ஒரு பெற்றோர் தன் பிள்ளையைத் தனியார் பள்ளியில் சேர்ப்பது, அரசுப் பள்ளியை நிராகரிப்பதற்காக அல்ல; மாறாக, வருங்காலப் போட்டி உலகிலும், நுழைவுத் தேர்வுகளிலும் தன் குழந்தை பின்தங்கி விடுவானோ என்ற அச்சத்தினால் மட்டுமே.
அரசும் சமூகமும் இந்த அச்சத்தைப் போக்காத வரை, பெற்றோர் தனியார் சூழலைத் தேடி ஓடுவது தொடரவே செய்யும்.
நான் படித்தது அரசுப் பள்ளியில், என் பிள்ளைகள் படிப்பதோ தனியார் பள்ளியில்.
நான் செய்தது தவறா, சரியா என்று எனக்குத் தெரியாது. அதைக் காலமும் சமூகமும் தான் தீர்மானிக்க வேண்டும்.
ஆனால், கல்வி என்பது பொருளாதார வலிமை கொண்டவர்கள் மட்டும் வாங்கும் சந்தை வாய்ப்பாக இல்லாமல், அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமாகத் தொழிற்படும் பொது உரிமையாக மாறும் அந்த நாளே, இதுபோன்ற அனைத்து விவாதங்களுக்கும் மன உறுத்தல்களுக்கும் நிரந்தரத் தீர்வாக அமையும்.
அரசு பள்ளிகளின் மீது விருப்பம் இருந்தும் என்னை போன்ற சில பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடும் நிலை உள்ளது என்பதின் பின்னணியில் அரசுப் பள்ளிகளில் சுகாதாரம், தூய்மையான கழிப்பறை,
குழந்தைகள் பாதுகாப்பாகப் பள்ளிக்கு வந்து செல்வதற்கென பிரத்யேக அரசுப் பேருந்துகள் அல்லது பள்ளி வாகன வசதிகள், பள்ளிக் கட்டிடங்களைப் பராமரிப்பின்மை ஆகிய போதாமைகள் உள்ளன.
இவற்றை அரசு கவனத்தில் கொண்டு மேம்படுத்த வேண்டும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களை அடிக்கடி அரசின் மக்கள் நலத்திட்டப் பணிகளில் ஈடுபடுத்தாமல், அவர்கள் கற்பித்தல் பணிகளை முழுமையாக செய்யும்படியான சூழல் உருவாக வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களுக்கு உரிய கல்வி கிடைப்பதில்லை.
ஆகவே, ஆசிரியர் காலிப் பணியிடங்கள் அனைத்தும் தகுதியின் அடிப்படையில் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். ஒரு ஆசிரியர் விடுப்பில் சென்றால் அவருக்கான மாற்றுப் பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.
பாடத்திட்டங்களில் இருக்கக் கூடிய மாறுபாடுகளையும், முரண்பாடுகளையும் தனி நபர்களாகிய நாம் ஒன்றும் செய்துவிட முடியாது. அது அரசாங்கங்களின் கையில் தான் இருக்கிறது.
இந்தியா முழுக்க ஒரே கல்வி முறை என்கிற விகிதாச்சாரத்தில் அதை உருவாக்க வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்குண்டு.
பாடத்திட்டங்களின் தரம் ஒரே மாதிரியாக மாறும் போது, ஏழைகளுக்கு ஒரு கல்வி, வசதியானவர்களுக்கு ஒரு கல்வி என்ற நிலை முற்றிலுமாக மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
- சீனு ராமசாமி (கவிஞர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர்)
நன்றி : அறம் இதழ்
சீனுராமசாமி


No comments:
Post a Comment