Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, September 22, 2026

காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் - தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்




பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று (செப்டம்பர் 22) காலை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் ஊட்டச்சத்து, உடல்நலம், வருகைப்பதிவு மற்றும் கற்றல் திறன் ஆகியவற்றைத் மேம்படுத்தும் நோக்கில், முதல்வரின் காலை உணவுத் திட்டம் முதன்முறையாக திமுக ஆட்சிக் காலத்தில் 2022-ஆம் ஆண்டு, முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் மதுரையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் பின்னர் விரிவுபடுத்தப்பட்டது.

இந்தத் திட்டமானது அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் பயன்பெறும் வகையில் ‘பெருந்தலைவர் காமராஜர் திட்டம்’ என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 15.30 லட்சம் மாணவ-மாணவிகள் கூடுதலாகப் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த சமையற்கூடங்கள் மூலம் காலை உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. பிற நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த சமையற்கூடங்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் திருவான்மியூர் காந்திகிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் விஜய் பங்கேற்று, காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தைப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கித் தொடங்கி வைத்தார். மேலும், அவர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

இந்தத் திட்டம் இடைத்தேர்தல் விதிகள் அமலில் உள்ள செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

LightBlog