மறுதேர்வு இன்றி பணி நியமனம் வழங்க வேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை - Asiriyar.Net

Tuesday, August 18, 2026

மறுதேர்வு இன்றி பணி நியமனம் வழங்க வேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை




‘ஆசிரியர் தகுதித்தேர்வு, நியமனத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தாமல் பணி நியமன ஆணை வழங்க  நடப்பு சட்டசபைக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,’ என, இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை  ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் 20க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது: 

தமிழகத்தில் துவக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 2013ல் இருந்து 2025 ஜூலை வரை ஒரு ஆசிரியர் கூட  புதிதாக நியமிக்கப்படவில்லை. 2013, 2017, 2019, 2022ல் நடத்த ஆசிரியர் தகுதித் தேர்வில் பலமுறை தேர்ச்சி பெற்றவர்களுக்கும் ஆசிரியர் பணி  வழங்கவில்லை. 2018ல் வெளியிடப்பட்ட அரசாணைபடி, தகுதித் தேர்வு, நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி  நியமனம் என அறிவிக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்தும் 6 ஆண்டுகள் நியமனத் தேர்வு நடக்கவில்லை. இந்நிலையில் 2021ல் 730 பணியிடங்கள், 2022-ல் 3987 பணியிடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. 2023-ல் 6553 காலிப்பணியிடங்கள்  அறிவிக்கப்பட்ட போதும் பணி நியமனம் சரிவர நடக்கவில்லை. 2024ல் மிகக் குறைந்த பணியிடங்களுக்கு நியமனத் தேர்வு நடந்தது.  இதற்கிடையே அரசாணைக்கு முரணாக தற்காலிக ஆசிரியர்கள் பலர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியத்தால் கடந்த 14 ஆண்டுகளாக 21 ஆயிரத்து 515 ஆசிரியர்கள் அரசுப் பணிக்காக காத்திருக்கின்றனர்.  அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகி உள்ளது. இதில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெண்கள். 40 வயதை கடந்த நிலையில்  ஆசிரியர்களை மீண்டும்  தேர்வெழுத வைப்பது சமூக நீதிக்கும், அரசியல் அமைப்பிற்கும் எதிரானது. எனவே சட்டசபை கூட்டத் தொடரில் தகுதித் தேர்வு, நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும்  மறுதேர்வு இல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கிட, புதிய அரசாணை பிறப்பிக்கும் தீர்மானத்தை  கொண்டுவர வேண்டும்., என்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad