Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, August 12, 2026

கதவுகளுக்கு பின்னால் கசக்கும் உண்மை - மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆசிரியர்களின் கண்ணீர் கதை




மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற பெயரில் களத்தில் இறக்கப்படும் ஆசிரியர்கள் சந்திக்கும் அவலங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. நகராட்சி நிர்வாகமும் உள்ளாட்சி அமைப்புகளும் தங்களது கடமையைச் சரியாகச் செய்யாமல், வெறும் விளம்பரங்களோடு நிறுத்திக்கொள்வதால் அதன் முழுப் பழியும் அலைச்சலும் ஆசிரியர்கள் மீதே விழுகிறது.

கணக்கெடுப்பு குறித்த எந்தவொரு அடிப்படை விழிப்புணர்வையும் மக்களிடம் கொண்டு சேர்க்காததால், சுட்டெரிக்கும் வெயிலில் மைல் கணக்கில் நடந்து செல்லும் ஆசிரியர்களுக்கு பூட்டிய கதவுகளும், எரிந்து விழும் பதில்களுமே பரிசாகக் கிடைக்கின்றன.

வீட்டில் ஆட்கள் இருக்கும்போதும் கூட, ஏதோ குற்றவாளிகளை பார்ப்பதும், 'எங்களுக்கு எந்த திட்டமும் வேண்டாம்' என்று முகத்தில் அடித்தாற்போல் கதவை மூடுவதும் தொடர்கதையாகிவிட்டது. ரேஷன் கார்டு ரத்தாகிவிடுமோ, வரி ஏறிவிடுமோ என்ற தேவையில்லாத பயத்தால் பலரும் தங்களது முழு தகவல்களை தருவதில்லை அதனால் உண்மைத் தகவலைப் பெற ஆசிரியர்கள் கெஞ்ச வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

தெருக்களில் அலைந்து திரியும் போது, தகவல்களைப் பெறுவதை விடக் கூட்டமாக வரும் தெரு நாய்களிடம் இருந்து தப்பிப்பதே ஆசிரியர்களுக்குப் பெரிய போராட்டமாக மாறுகிறது. சரியான பாதுகாப்பு வசதிகள் கூட இல்லாத நிலையில், நாய் கடிக்கு ஆளாகும் அச்சத்திலேயே ஒவ்வொரு தெருவாகக் கடக்க வேண்டியிருக்கிறது.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல், கணக்கெடுப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியின் சுமை ஆசிரியர்களின் தலையில் விடியறைப் பாரமாக இறங்குகிறது. ஒரு தெருவில் கதவு எண் இல்லாத வீடோ அல்லது பூட்டியிருக்கும் வீடோ இருந்தால், அந்த வீட்டின் தகவல்களை முழுமையாகப் பூர்த்தி செய்யாமல் அடுத்த வீட்டிற்குச் செல்ல முடியாத அளவிற்குச் செயலியின் தொழில்நுட்ப அமைப்புகள் நெகிழ்வுத்தன்மையின்றி வடிவமைக்கப்பட்டுள்ளன.இதனால், அடுத்தடுத்த வீடுகளுக்குச் செல்ல முடியாமல் ஆசிரியர்கள் ஒரே இடத்தில் மணிக் கணக்கில் முடங்கிப்போகும் நிலை ஏற்படுகிறது.

குடிநீர் வரி, குப்பை வரிக்கெல்லாம் மைக்செட் வைத்து ஊர் ஊராக வசூல் செய்யும் நகராட்சி நிர்வாகம், நாட்டின் மிக முக்கியப் பணியான மக்கள் தொகை கணக்கெடுப்பு விஷயத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் பாராமுகமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை.
பள்ளியில் மாணவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டிய ஆசிரியர்களை, எந்தவித அடிப்படை வசதிகளும் தராமல் வீதி வீதியாக அலையவிடுவது என்ன மாதிரியான நிர்வாக முறை?

எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகளும், 'டார்கெட்' கெடுவும், நடைமுறைக்குச் சாத்தியமில்லாத செயலி உருவாக்கமும் கூடுதல் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. 

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான கணக்கெடுப்புப் பணியை இவ்வளவு அலட்சியமாக  நிர்வாகம் கையாள்வதும், அதற்கு ஆசிரியர்களைப் பலிகடாவாக்குவதும் அப்பட்டமான நிர்வாகச் சீர்கேடே தவிர வேறில்லை

No comments:

Post a Comment

LightBlog