ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறி விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவிகள் - Asiriyar.Net

Friday, August 7, 2026

ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறி விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவிகள்




திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே, ஆசிரியர்கள் கண்டித்ததால் விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவிகள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து கல்வித் துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கம் அருகே உள்ள மேல்பள்ளிப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மூன்று மாணவிகளை, சில ஆசிரியர்கள் ஒழுங்கு தொடர்பான காரணங்களுக்காக தனி அறையில் வைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் மனஉளைச்சலுக்கும் மனவேதனைக்கும் ஆளான மாணவிகள், பள்ளி முடிந்து வீடு சென்ற பிறகு தங்கள் பெற்றோர் பயன்படுத்தி வரும் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் மூவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளனர். இதை கவனித்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக மூன்று மாணவிகளையும் செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அவர்களுக்கு மருத்துவர்கள் உடனடியாக அவசர சிகிச்சை அளித்தனர்.

அவர்களில் 12-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். மற்ற இரண்டு மாணவிகளும் செங்கம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் செங்கம் அரசு மருத்துவமனைக்கு திரண்டதால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இதற்கிடையே மாணவிகள் விபரீத முடிவை எடுத்ததற்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாணவர்களின் மனநல பாதுகாப்பு, பள்ளிகளில் ஆலோசனை சேவைகளை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad