இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நாளில் வழிபட வேண்டிய நேரம், பூஜை முறைகள், மகிமைகள் குறித்து அறிந்துகொள்வோம்
முழுமுதற்கடவுளாம் விநாயகப்பெருமானை அனுதினமும் வழிபட்டு ஒரு செயலைத் தொடங்கினால் தடைகள் நீங்கி அந்தப் பணி சிறப்பாக்க முடியும் என்பது நம்பிக்கை. அதனால்தான் அவருக்கு விக்ன ராஜன் என்று பெயர்.
அனுதினமும் வழிபட முடியாதவர்கள் குறைந்தபட்சம் சதுர்த்தி திதி நாளிலாவது வழிபட வேண்டும். சதுர்த்தி திதி மாதம் இருமுறை வரும். தேய்பிறை சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி. வளர்பிறை சதுர்த்தி திதி வளங்களைக் கொடுப்பது. இந்த நாள்களில் நாம் விநாயகரைத் தவறாமல் வழிபட வேண்டும். அவ்வாறு மாதம்தோறும் வழிபட முடியாதவர்களுக்காக ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது விநாயகர் சதுர்த்தி.
பாமரர் முதல் படித்தவர் வரை அனைவரும் கோலாகலமாகக் கொண்டாடும் விழா விநாயகர் சதுர்த்தி. எல்லோருக்கும் எளிமையாகக் கிடைக்கும் களிமண்ணில் பிள்ளையார் செய்து அதற்கு வழிபாடு செய்வது இந்த நாளின் விசேஷம். விநாயகரை வழிபடுவது மிகவும் எளிமை. அருகம்புல் சாத்தி வழிபட்டாலே அவர் மனம் மகிழ்வார். எருக்கம்பூமாலை சூட்டினாலே வரம் தருவார்.
இப்படி விநாயகர் சதுர்த்தியை வழிபட்டாலே வினைகள் விலகும். துன்பங்கள் விலகி இன்பம் துளிர்க்கும். அப்படிப்பட்ட அற்புதமான நாள் இந்த ஆண்டு வரும் சனிக்கிழமை செப்டம்பர் 7 - ம் தேதி வருகிறது. இந்த நாளில் வளர்பிறை சதுர்த்தி திதி பிற்பகல் 3.38 வரை இருக்கிறது. எனவே விநாயகருக்குச் செய்யவேண்டிய பிரதான பூஜையை அன்று காலையிலேயே செய்ய வேண்டும்.
காலை காலை 7.45 முதல் 8.45 வரை நல்ல நேரம் இருப்பத்தால் அந்த நேரத்தில் விநாயகர் வழிபாட்டைத் தொடங்குவது சிறப்பு. சனிக்கிழமை 9 மணி முதல் 10.30 வரை ராகு காலமாக அமையும். எனவே காலை 9 மணிக்கு முன்பாக எப்போது வேண்டுமானாலும் விநாயகரை வாங்கிவந்து வழிபாட்டைத் தொடங்கலாம். அல்லது ராகு காலம் முடிந்ததும் காலை 10.30 மணிக்கு மேல் வழிபாட்டைத் தொடங்கலாம்.
எந்த பூஜையைத் தொடங்கினாலும் மஞ்சள் பிள்ளையார் பிடித்துவைத்து வழிபாட்டைத் தொடங்க வேண்டும். விநாயகப்பெருமான் அந்த மஞ்சள் பிள்ளையாரில் எழுந்தருளி குருவாக அமர்ந்து நாம் செய்யப்போகும் பூஜையைக் குறைவின்றி நடத்திக் கொடுப்பார் என்பது நம்பிக்கை. விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு முன்பாகவும் மஞ்சள் பிள்ளையார் பிடித்துவைத்து விநாயகருக்கு உகந்த கீழ்க்கண்ட நாமங்களைச் சொல்லி மலர் சாத்தி வழிபட வேண்டும்.
ஓம் சுமுகாய நம: ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம: ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம: ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம: ஓம் விநாயகாய நம:
ஓம் தூமகேதுவே நம: ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம: ஓம் கஜானநாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம: ஓம் சூர்ப்பகர்ணாய நம:
என்னும் மந்திரங்களைச் சொல்லி மலர் தூவி வழிபட்டு மஞ்சள் பிள்ளையாருக்கு ஒரு வாழைப்பழம் சமர்ப்பித்து கற்பூர ஆரத்தி காட்டி வழிபட வேண்டும். அதன்பிறகு பிரதான பூஜையைத் தொடங்க வேண்டும்.
பின்பு கைகளில் மலரும் அட்சதையும் ஏந்தி, 'விநாயகப்பெருமானே... இந்த விக்ரகத்தில் எழுந்தருளி எங்களுக்கு அருள்பாலிப்பாயாக' என்று வேண்டிக்கொண்டு ஒரு துளி நீர் சேர்த்து களிமண் திருமேனியின் மீது விடவேண்டும். அதன்பின் விநாயகருக்கு சந்தன குங்குமம் இட்டு அலங்காரம் செய்ய வேண்டும். வஸ்திரம் சாத்த வேண்டும். குடை முதலியன வைத்து மலர் மாலை சூட்ட வேண்டும். பிறகு அஷ்டோத்திர (108) நாமாவளி வாசித்து அர்ச்சிக்க வேண்டும்.
பிறகு விநாயகருக்கு உகந்த நிவேதனங்களான, மோதகம், பாயாசம், சுண்டல், கரும்பு, வெல்லம் ஆகியன சமர்ப்பித்து வழிபட வேண்டும். அதன்பின் தூபதீபம் காட்டி விநாயகப்பெருமான் துதிகளில் ஏதேனும் ஒன்றைப் பாட வேண்டும். விநாயகர் அகவல் வாசிப்பது மிகவும் சிறப்பு. நிவேதனங்கள் நிறைய செய்ய முடியாதவர்கள் ஒரு பழம் சமர்ப்பித்தாலே போதுமானது.
இவ்வாறு விநாயகரை மனமுருகி வழிபடும் போது நம் வினைகள் ஓடும். குறிப்பாக சனிக்கிழமை என்பது சனிபகவானுக்கு உரியது. சனிபகவான் மூவுலகில் அனைவரையும் பிடித்து ஆட்டும் சக்தி கொண்டவர். அவரால் அணுக முடியாதவர்கள் இருவர். ஒருவர் விநாயகர் மற்றொருவர் அனுமன். விநாயகரை வழிபடுபவர்களை சனிபகவான் தொல்லை செய்வதில்லை என்பது நியதி. மேலும் சந்திரன் மனோகாரகன். சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால் மனம் சார்ந்த பிரச்னைகள் தீரும். நம் அறிவு பளிச்சிடும்.
விநாயகருக்குத் தேங்காய் மாலை சாத்தி வழிபட்டால் வினைகள் விலகும். சுண்டல் நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு விநியோகித்தால் மகிழ்ச்சியான வாழ்வு கிட்டும். விநாயகர் சதுர்த்தி அன்று மாலை விநாயகருக்குக் கற்பூரம் காட்டி மலர்கள் தூவி வழிபட்டுப் பின் சந்திரனை தரிசனம் செய்வது நம் மனத்தைத் தூய்மை செய்யும்.
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துகள்.
No comments:
Post a Comment