Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Saturday, May 2, 2026

“செல்போனில் இன்று அதிக சத்தத்துடன் மெசேஜ் வரும்” - அச்சம் வேண்டாம்





மழை வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு, 'செல் பிராட்காஸ்ட் அலெர்ட்' (Cell Broadcast Alert) என்ற எச்சரிக்கை தகவல்களை அனுப்பும் அமைப்பை உருவாக்கி உள்ளது. அதில் இருந்து சோதனை மெசேஜ் அனுப்பும் பணி இன்று தொடங்குவதால் அவற்றை கண்டு பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை இணைந்து இந்த முக்கியமான சோதனையை நடத்துகின்றன. 'செல் பிராட்காஸ்டிங்' (Cell Broadcast) எனப்படும் சிறப்புத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த முறை செயல்படுகிறது. பொதுவாக ஒரு குறுஞ்செய்தி என்பது தனிப்பட்ட நபர்களுக்கு அனுப்பப்படும். ஆனால், இந்தத் தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட செல்போன் கோபுரத்தின் (Tower) எல்லைக்குள் இருக்கும் அனைத்து அலைபேசிகளுக்கும் ஒரே நேரத்தில் தகவலை அனுப்பும் திறன் கொண்டது.



இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த எச்சரிக்கை வரும்போது செல்போன் 'சைலண்ட்' (Silent) பயன்முறையில் இருந்தாலும், உரத்த அபாய ஒலியுடன் திரையில் செய்தியைத் தோற்றுவிக்கும். இதன் மூலம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்கள் அல்லது கவனக்குறைவாக இருப்பவர்கள் கூட உடனடியாக விழிப்புணர்வு பெற முடியும்.

இதன்படி குறிப்பிட்ட நேரத்தில் நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான செல்போன்களுக்கு இந்த எச்சரிக்கை செய்தி இன்று அனுப்பப்பட இருக்கிறது. அந்தச் செய்தியில், இது ஒரு மாதிரி சோதனை (Sample Testing) மட்டுமே என்றும், பொதுமக்கள் இது குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், பயனர்கள் இந்தச் செய்தியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை எனவும், வெறும் 'புறக்கணிக்கவும்' (Ignore) என்ற பட்டனை அழுத்தினால் போதுமானது என்றும் அறிவுறுத்தப்பட்டது. அவசரக்கால அமைப்பின் செயல்திறனை சோதிக்கவும், அதில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளைக் கண்டறிந்து சரிசெய்யவும் இந்த ஒத்திகை அவசியமான ஒன்றாக அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு மேம்பாட்டு மையம் உருவாக்கியுள்ள, 'சசேத்' என்ற ஒருங்கிணைந்த எச்சரிக்கை தகவல் அமைப்பு மூலம் இந்த செய்திகள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பம் இந்திய அரசாங்கத்தின் டிஜிட்டல் பாதுகாப்புத் திட்டத்தில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.


No comments:

Post a Comment

LightBlog