உயர்கல்வியில் தமிழ்நாடு என்றென்றும் முதன்மை இடத்தில் திகழ பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நமது முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆணைக்கிணங்க அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் நிரந்தரமாக நிரப்பப்படுவார்கள் என தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், நம்முடைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மருத்துவமும் உயர்கல்வியும் தனது இரு கண்களாகக்கொண்டு ஒவ்வொரு நாளும் அதன் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
உயர்கல்வியில் நமது மாணாக்கர்கள் என்றென்றும் உயர்ந்த நிலையில் திகழ வேண்டும் என்பதற்காகவும் தொழில்நுட்ப துறையில் உலக நாடுகளுக்கிடையே உள்ள போட்டியிலே வென்றெடுக்க நமது மாணவர்கள் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்ற எண்ணத்திலும், வேலை தேடுபவராக இல்லாமல் தொழில் முனைவோராக திகழ வேண்டும் என்பதற்காக மாணாக்கர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளில் முதல்வராக திகழ வேண்டும் என்ற ஒரே நோக்கில் நான் முதல்வன் என்ற முத்தான திட்டத்தை வழங்கி அனைத்து மாணவர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி வருகிறார்.
உயர்கல்வி பெற பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காகவும் சுய மரியாதையுடன் உயர்கல்வி பயிலவும் புதுமைப்பெண் தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்கள் மூலம் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கி வருகிறார்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் 37 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை வழங்கியதுடன் இதில் இந்த கல்வி ஆண்டு மட்டும் பதினாறு புதிய கல்லூரிகளை அறிவித்து தொடங்கியதுடன் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களுக்கும் ஒப்புதல் அளித்து சேர்க்கை பெற்றுள்ளனர். நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்பவும் அந்தந்த பகுதியில் உள்ள தொழில் முறைக்கு ஏற்ற பல்வேறு புதிய பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் கல்வி கற்கும் திறன் எவ்வகையிலும் பாதிப்படைய கூடாது என்ற எண்ணத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக நிரப்பிட தற்போது முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். மேற்படி உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு உயர்கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Click Here to Download - 2708 Asst. Professor - Press Release - Pdf


No comments:
Post a Comment