தமிழகத்தில் வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மை மற்றும் தகுதியானவர்களை உறுதி செய்வதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) உத்தரவின்படி, "சிறப்புத் தீவிர திருத்தம்" (Special Intensive Revision - SIR) என்ற விரிவான செயல்முறை நாளை (நவம்பர் 4, 2025) முதல் தொடங்குகிறது. இது குறித்துத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
1. சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்றால் என்ன?
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்கள் இடம்பெறுவதை உறுதி செய்யவே இந்த சிறப்புத் தீவிர திருத்தம் இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடைமுறையின்போது, 01.01.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது பூர்த்தியான அனைத்து இந்தியக் குடிமக்களும் பட்டியலில் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். தகுயில்லாதவர்களின் பெயர்கள் அல்லது இறந்தவர்களின் பெயர்கள் எல்லாம் அடையாளம் காணப்பட்டு நீக்கப்படும். அதாவது, இரட்டைப் பதிவு, இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் அல்லது தகுதியற்றவர்களின் பெயர்களைப் பட்டியலிலிருந்து உறுதியாக நீக்கப்படும்.
2. கணக்கீடு மற்றும் திருத்தத்திற்கான கால அட்டவணை
SIR திருத்தப் பணிகள், 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன.
கணக்கீட்டிற்கான காலம் (வீடு வீடாகச் சென்று ஆய்வு) - நவம்பர் 4, 2025 (நாளை) முதல் டிசம்பர் 4, 2025 வரை
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - டிசம்பர் 9, 2025
ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலம் - டிசம்பர் 9, 2025 முதல் ஜனவரி 8, 2026 வரை
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - பிப்ரவரி 7, 2026
3. வீடு வீடாகச் சென்று கணக்கீடு
வீட்டுக்கு வருகை: வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) ஒவ்வொரு வீட்டிற்கும் வந்து வாக்காளரிடம் விசாரணை நடத்தி, அவர் அந்தப் பகுதியில் வசிக்கிறாரா, முகவரியை மாற்றினாரா, இரட்டைப் பதிவு இருக்கிறதா அல்லது அவர் இறந்தவரா போன்ற விவரங்களைக் குறித்துக் கொள்வார்.
புதிய வாக்காளர்களுக்கு: புதிய வாக்காளராகப் பதிவு செய்ய விரும்புவோருக்கு வழங்குவதற்காக, BLO குறைந்தது 30 நிரப்பப்படாத படிவம் 6-ஐ தன்னுடன் எடுத்துச் செல்வார்.
கணக்கீட்டுப் படிவம்: தற்போதுள்ள வாக்காளர்களுக்கு அவர்களின் விவரங்கள் முன்னரே நிரப்பப்பட்ட பிரதிப் படிவங்கள் (இரட்டைப் பிரதி) வழங்கப்படும். இதைப் பூர்த்தி செய்து மீண்டும் BLO-விடம் அளிக்க வேண்டும்.
பொது மக்கள் பார்வை: பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்களின் பட்டியல், பொது மக்கள் பார்வைக்காக ஊராட்சி அலுவலகம்/நகர்ப்புற உள்ளாட்சி அலுவலக அறிவிப்புப் பலகைகளில் காட்சிப்படுத்தப்படும்.
ஆவணங்கள் சேகரிப்பு: கணக்கீடுக் காலத்தில், அதாவது நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை வாக்காளர்களிடமிருந்து எந்தவொரு ஆவணமும் சேகரிக்கப்பட மாட்டாது. ஆவணங்கள் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 9, 2025 பிறகு மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
4. வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான ஆவணங்கள் மற்றும் படிவங்கள்
வாக்காளர்கள் தங்கள் கோரிக்கைக்கு ஏற்பப் பின்வரும் படிவங்களைப் பயன்படுத்தி, உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் (டிசம்பர் 9, 2025 முதல்):
புதிய வாக்காளராகப் பதிவு செய்ய (படிவம் 6)
18 வயது பூர்த்தியானவர் அல்லது அடுத்து வரும் தகுதி தேதிகளில் 18 வயதை அடையவிருப்பவர் விண்ணப்பிக்கலாம்.
அடையாளச் சான்று:
பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பிறந்த தேதியுடன் கூடிய 10/12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று.
முகவரிச் சான்று:
ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வங்கியின் பாஸ் புத்தகம், மின் கட்டண ரசீது, சமையல் எரிவாயு ரசீது, வாடகை ஒப்பந்தம் போன்ற ஏதேனும் ஒன்று.
உறுதிமொழிப் படிவம்:
விண்ணப்பதாரர் மற்றொரு தொகுதியில் வாக்காளராக இல்லை என்பதை உறுதி செய்யும் கூடுதல் உறுதிமொழிப் படிவத்தை (பிற்சேர்க்கை D) கண்டிப்பாக நிரப்பி அளிக்க வேண்டும்.
திருத்தம் அல்லது முகவரி மாற்றத்திற்கு (படிவம் 8)
திருத்தம்:
பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற விவரங்களைத் திருத்த, சரியான விவரங்களைக் கொண்ட ஆதார், பான், பாஸ்போர்ட் அல்லது பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள்.
முகவரி மாற்றம்:
புதிய முகவரிக்கான ஆதாரம் மற்றும் கூடுதல் உறுதிமொழிப் படிவம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நீக்கத்திற்காக (படிவம் 7)
இறப்பு:
இறந்தவரின் பெயரைக் நீக்க, அவர்களின் இறப்புச் சான்றிதழின் நகல் தேவை.
இடம்பெயர்வு:
வேறு சட்டமன்றத் தொகுதிக்கு இடம் பெயர்ந்துவிட்ட பெயர்களை நீக்க, உரிய விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பொதுமக்களுக்கான வேண்டுகோள்:
வாக்காளர் நிலை அலுவலர் (BLO) வீட்டிற்கு வரும்போது, வாக்காளர்கள் அனைவரும் பொறுப்புடன் தங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்து ஒத்துழைப்பு வழங்கி, பட்டியலை சரிபார்க்கும் இந்தப் பணியில் பங்கேற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:
Post a Comment