23ல் இருந்து 69 ஆன எண்ணிக்கை..!'- இஸ்ரோ தலைவர் "சிவனால்" வளர்ந்த அரசுப் பள்ளி - Asiriyar.Net

Friday, September 13, 2019

23ல் இருந்து 69 ஆன எண்ணிக்கை..!'- இஸ்ரோ தலைவர் "சிவனால்" வளர்ந்த அரசுப் பள்ளி




சந்திரயான் 2 திட்டத்தை உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆர்பிட்டரிலிருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கி ஆய்வுசெய்யும் என்பதுதான் திட்டம். ஆனால், எதிர்பாராத விதமாக, சந்திரனை நெருங்கிக்கொண்டிருக்கும்போது, லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் படித்த அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க பெற்றோர் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.

 


இஸ்ரோ தலைவராக சிவன் பதவி ஏற்றதிலிருந்து அவர் படித்த பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை ஏறுமுகமாகவே உள்ளது.


இந்தப் பள்ளிக்கு எதிரில்தான் இஸ்ரோ தலைவர் சிவனின் வீடும் இருக்கிறது.

இதுகுறித்து சரக்கல்விளை அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பார்வதி கூறுகையில், "நான் 2011-ம் ஆண்டு இந்தப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். அப்போது இங்கு 23 மாணவர்கள் மட்டுமே படித்தனர். பள்ளிக்கூட கட்டடமும் ஓட்டுக் கூரையுடன் மிகவும் பலவீனமாக இருந்தது. இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்கள் குறித்து நான் அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். அப்போது இந்தப் பள்ளியில் படித்த சிவன் இஸ்ரோ விஞ்ஞானியாக இருப்பதாக பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் இஸ்ரோ தலைவராக சிவன் பொறுப்பேற்றார். அதன் பிறகுதான் இந்தப் பள்ளி அசுர வேகத்தில் வளர்ந்தது.


smart class
இஸ்ரோ தலைவர் படித்த பள்ளியை ஸ்மார்ட்டாக மாற்றுவதற்காக பெங்களூரில் இருந்து ஒரு குழுவினர் வந்து ஆய்வு செய்தனர். இஸ்ரோ அதிகாரிகள் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் மேற்பார்வையில் நான்கு வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் கலை அரங்கம் அமைக்கப்பட்டன. 2018 அக்டோபர் 19-ல் புதுப்பிக்கப்பட்ட வகுப்பறைகளை இஸ்ரோ தலைவர் சிவன் நேரடியாக வந்து திறந்துவைத்தார்.



இஸ்ரோ தலைவர் படித்த பள்ளி என்ற செய்தி அனைத்து இடங்களிலும் பரவியதால் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. பக்கத்து ஊர்களைச் சேர்ந்த மாணவர்களும், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களும் ஆட்டோக்களில் பள்ளிக்கு வருகிறார்கள். மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து இப்போது 69 மாணவர்கள் இங்கு படிக்கிறர்கள்.


குமரி மாவட்டத்தில் முதன் முதலில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட்ட பள்ளி என்ற பெருமை சரக்கல்விளைக்கு உண்டு. சரக்கல்விளை பள்ளி தலைமை ஆசிரியர் என நான் என்னை அறிமுகப்படுத்தினாலே அனைவரும் இஸ்ரோ தலைவர் சிவன் படித்த பள்ளிதானே என ஆச்சர்யமாகக் கேட்கிறார்கள்.

இந்தப் பள்ளியில் படித்தவர் இஸ்ரோ தலைவர் ஆனார் என்ற தகவல் அரசுப்பள்ளி மீதான பெற்றோர்களின் பார்வையை மாற்றியது. இந்தப் பள்ளி மீது பெற்றோருக்கு நம்பிக்கையும், ஈர்ப்பும் ஏற்பட்டது. சந்திரயான் 2 விண்கலம் குறித்த செய்திகளை கேட்டாலே எங்கள் பள்ளி மாணவர்கள் குதூகலமாகிவிடுவார்கள். தான் எந்த நிலைக்குச் சென்றாலும் கல்விகற்ற பள்ளியை மறக்கக் கூடாது என்று செயல் மூலம் வழிகாட்டியிருக்கிறார் இஸ்ரோ தலைவர் சிவன்" என்றார் நெகிழ்ச்சியாக.

 school
நாகர்கோவிலிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்களே உள்ளனர். ஐந்து வகுப்புகளுக்கு ஐந்து ஆசிரியர்களாவது இருக்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் இரண்டு ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் இந்தப் பள்ளியில் மாணவர்கள் அதிகரித்து வருவதால் தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Post Top Ad