ஆசிரியரை ஓடஓட விரட்டி காலணியால் அடித்த பெற்றோர்! நடந்தது என்ன? - தலைமை ஆசிரியர் விளக்கம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, March 23, 2023

ஆசிரியரை ஓடஓட விரட்டி காலணியால் அடித்த பெற்றோர்! நடந்தது என்ன? - தலைமை ஆசிரியர் விளக்கம்

 



பள்ளி சிறுவனை அடித்ததாக கூறி பள்ளி ஆசிரியர் மீதும், பெண் தலைமை ஆசிரியர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


முதலில் நன்றாக பேசிக்கொண்டு இருந்தவர்கள், ஒரு செல்போன் அழைப்புக்கு பின்னர் தான் அடிக்கவும், உதைக்கவும் ஆரம்பித்தனர். அந்த மர்ம நபர் யார்? எதற்காக எங்களுக்கு இது நடக்கவேண்டும். நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று தெரியவில்லை. மாணவனை அடிக்கவில்லை என்று எவ்வளவோ கூறியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எங்களுக்கும், எங்கள் பள்ளி மாணவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தாக்குதலுக்கு உள்ளான தலைமை ஆசிரியர் குருவம்மாள் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ளது கீழநம்பிபுரம் கிராமம். இங்கு அரசு உதவி பெறும் இந்து தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 21 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். குருவம்மாள் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பாரத் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 


கீழநம்பிபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகள் செல்வி. செல்விக்கு திருமணம் ஆகி அவரது கணவர் சிவலிங்கத்துடன் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் வசித்து வருகிறார் . சிவலிங்கம் மற்றும் செல்வி தம்பதிக்கு பிரகதீஸ் (7) என்ற மகன் இருக்கிறார். பிரகதீஸ் தனது தாத்தாவான முனியசாமி உடன் கீழநம்பிபுரத்தில் வசித்து வருகிறார். அங்குள்ள அரசு உதவி பெறும் இந்து தொடக்கப் பள்ளியில் பிரகதீஸ் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.


இந்நிலையில் 21ஆம் தேதி, வகுப்பில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது பிரகதீஸ் கீழே விழுந்ததாக தெரிகிறது. மெதுவாக விளையாடும் படி ஆசிரியர் பாரத் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மாணவர் பிரகதீஸ் வீட்டுக்குச் சென்று தனது தாத்தா முனியசாமியிடம் ஆசிரியர் பாரத் தன்னை அடித்ததாக கூறியுள்ளார். 


இதையடுத்து மாணவரின் பெற்றோர் சிவலிங்கம், செல்வி மற்றும் செல்வியின் தந்தை முனியசாமி ஆகிய 3 பேரும் பள்ளிக்கு சென்று, மாணவனை பள்ளி ஆசிரியர் பாரத் தாக்கியதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பேசிக்கொண்டு இருந்தவர்கள் ஆசிரியர் பாரத்தை தாக்கியது மட்டுமின்றி, ஓடஓட விரட்டி காலணியால் அடித்துள்ளனர். இதனை தடுக்க சென்ற தலைமை ஆசிரியர் குருவம்மாளுக்கும் அடி உதை விழுந்துள்ளது.


இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவலிங்கம், செல்வி மற்றும் செல்வியின் தந்தை முனியசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். செல்வி நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மற்ற 2 பேரும் சிறையில் உள்ளனர்.


இந்நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் குருவம்மாள் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 3 மாதங்களாக மாணவரின் பாட்டி மாரிசெல்வி தனது பேரனை ஏன் அடித்தீர்கள் என்று பிரச்சினை செய்துவந்தார். நான் அடிக்கவே இல்லை என்று தெரிவித்தேன். ஆனால் மாரிசெல்வி அவதூறான வார்த்தைகளால் திட்டினார். அவ்வப்போது இது போன்று பிரச்னை செய்து கொண்டு இருந்தனர். 


அந்த மாணவர் வீடு பள்ளி அருகில் இருப்பதால் பாட இடைவேளையின் போது வீட்டிற்கு சென்று பால் குடித்து வருவது வழக்கம். 20ஆம்தேதி பால் குடிக்க போவதாக கூறி மாணவர் சென்றார். ஆனால் வெகு நேரமாக மாணவர் வரவில்லை என்பதால் வீட்டிற்கு செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு கேட்டோம். அதற்குள்ளாக மாணவரின் வீட்டில் இருந்து 2 காவலர்களுடன் வந்து மாணவரை அடித்தாக குற்றம்சாட்டினர். 


நாங்கள் அடிக்கவே இல்லை என்றோம், ஆனால் மாணவன் கன்னத்தில், நெற்றியில் காயம் இருந்தது. நாங்கள் அடிக்கவே இல்லை என்று நானும், ஆசிரியர் பாரத் இருவரும் எவ்வளவு எடுத்துக்கூறியும் ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களை தரக்குறைவாக பேசியது மட்டுமின்றி, அடித்து விடுவோம் என்று மிரட்டினர். பின்னர் காவல்துறையினர் அவர்களை சத்தம் போட்டு அனுப்பி வைத்து விட்டனர்.


மறுநாள் 21ஆம் தேதி பள்ளியில் எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சி நடந்த பின்னர் வழக்கம் போல வகுப்பு நடைபெற்றுக்கொண்டு இருந்தது. அப்போது சிவலிங்கம், செல்வி, முனியசாமி 3 பேரும் ஆசிரியர் பாரத்திடம் முதலில் நன்றாக பேசிக்கொண்டு இருந்தனர். 


அப்போது ஒரு போன் வரவே சிவலிங்கம் வெளியே சென்றார். அந்த போன் பேசிவிட்டு வந்த பின்னர் தான் எங்களை அடிக்க தொடங்கினர். ஓட, ஓட விரட்டி காலணிகளை வைத்து அடித்தனர். சேர், டேபிள் என எல்லாவற்றையும் எடுத்து வீசினர். ஆசிரியர் பாரத் செல்லையும் பிடுங்கி வைத்துக்கொண்டனர்.


பின்னர் எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல்கொடுத்தோம். சிவலிங்கம், செல்வி மற்றும் செல்வியின் தந்தை முனியசாமி, தாய் மாரிச்செல்வி ஆகிய 4 பேர் மீது புகார் கொடுத்தோம். ஆனால் மாரிச்செல்வியை விடுத்து மற்ற 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து கைது செய்தனர். எங்களுக்கு ஏன் இந்த நிலை என்று தெரியவில்லை, மாரிச்செல்வியையும் கைது செய்ய வேண்டும். 


அந்த செல்போனில் பேசியது யார் என்று கண்டுபிடித்து அவரையும் கைது செய்ய வேண்டும். ஆசிரியர் பாரத் செல்போனை திரும்ப பெற்று தர வேண்டும். அந்த கிராமத்தில் இந்த ஒரு குடும்பத்தினை தவிர மற்ற அனைவரும் எப்போதும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். இந்த ஒரு குடும்பம் மட்டும் தான் ஏதாவது ஒன்று சொல்லி எங்களுடன் சண்டை போடுவதில் குறியாக இருந்து வருகின்றனர். எங்களுக்கும், எங்களுடைய மாணவர்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்றார்.



Post Top Ad