அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் அரசு பள்ளி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, March 3, 2023

அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் அரசு பள்ளி

 



பெரம்பலூர் மாவட்டம்,பாடாலூர் அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்று, தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருப்பது அனைவரையும் திரும்பி பார்க்கச் செய்துள்ளது. மேலும் 450 மாணவர்களுடன் செயல்படும் இந்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் சிறப்பு வாய்ந்தது. 


நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1931 ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம்,பாடாலூர் அருகே ஆலத்தூர் தாலுகாவில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. அப்போது 6 ஆசிரியர்கள் 150 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் தற்பொழுது ஆங்கிலக் கல்வி மூலமாக 458 மாணவ மாணவிகள் உள்ளனர். இவர்களுக்காக 12 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.


தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை விட இந்த பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சுத்தமான குடிநீர்,சுகாதாரமான சத்துணவு வகுப்பறைகளில் மின்விசிறி,டைல்ஸ் பதிக்கப்பட்ட தரை,வகுப்பறைகள் முழுவதும் அழகிய கல்வி சார்ந்த வண்ண ஓவியங்கள்,ஸ்மார்ட் வகுப்புகள் என பல்வேறு வசதிகளுடன் இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது.


வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவ மாணவிகள் வரிசையாகவும், அமைதியாகவும், அமர்ந்து கல்வி கற்பதோடு தங்களது காலணிகளை கூட அழகாகவும் வரிசையாகவும் கழட்டி வைத்து ஒழுக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். பள்ளியில் உள்ள 12 ஆசிரியர்களும் மாணவர்களை தங்களது குழந்தைகள் போல பாவித்து மிக சிறப்பாக கல்வி பயிற்றுவிப்பதால்,பெற்றோர்கள் சார்பில் வாகன வசதி ஏற்பாடு செய்து அதன் மூலம் பள்ளிகள் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பி வருகின்றனர்.


பள்ளியின் கல்வித்தரம் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் சிறப்பாக இருப்பதால் செட்டிகுளம் மட்டுமின்றி தம்பிரான்பட்டி, கீழக்கணவாய், வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி, பெரகம்பி மற்றும் குரூர் என பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவர்களும் வாகனங்களில் இந்த பள்ளிக்கு கல்வி பயில வந்து செல்கின்றனர். இதனால் பள்ளியின் சேர்க்க விகிதம் அதிகரித்து, பெரம்பலூர் மாவட்டத்திலேயே அதிக மாணவ மாணவிகள் பயிலும் தொடக்கப் பள்ளியாக விளங்கி வருகிறது.


இது மட்டுமின்றி யோகா வகுப்புகள், ஆங்கில மொழித்திறன் பயிற்சி, கணித பயிற்சி, கையெழுத்து பயிற்சி மற்றும் தினந்தோறும் தேர்வுகள் என பல்வேறு விதங்களில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி அசத்தி வருகின்றனர். இதனால் இங்குள்ள மாணவர்கள், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை விட நன்றாக படிப்பதை பார்த்து ஒவ்வொரு ஆண்டும்,பள்ளியின் சேர்க்கை விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 300 மாணவர்களுடன் செயல்பட்டு வந்த பள்ளி தற்பொழுது 450 மாணவர்களை தாண்டி பயின்று வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.


Post Top Ad