இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, January 1, 2023

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

 



சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி போராடி வரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழக முதல்வர் உத்தரவிட்ட நிலையில், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170குறைந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதன் காரணமாக, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 6 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் உணவருந்தாமல், தண்ணீர் மட்டுமே குடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பள்ளிக்கல்வி துறை செயலாளர் மற்றும் அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.


இந்நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி போராடி வரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 


இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருந்த அறிக்கையில், "சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக, நிதித்துறை செயலாளரின் (செலவினம்) தலைமையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். 


இந்த குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்து இந்த கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது." என்று தெரிவித்துள்ளார்.


இந்த அறிவிப்பு தொடர்பாக போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக எஸ்எஸ்டிஏ பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் தெரிவித்துள்ளார். மேலும் நாளை பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


Post Top Ad