"TET தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை" - முன்னாள் முதல்வர் வலியுறுத்தல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, December 5, 2022

"TET தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை" - முன்னாள் முதல்வர் வலியுறுத்தல்

 



தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி ஆட்சிப் பொறுப்பேற்று 19 மாதங்கள் கடந்த நிலையிலும் நிறைவேற்றப்படவில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண்-177-ல், '2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் தேர்வுக்கான தகுதிச் சான்றிதழை ஆயுட்காலத் தகுதிச் சான்றிதழாக வழங்குவதற்குரிய சட்ட வழிவகைகள் குறித்து ஆராயப்படும்' என இரண்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.


இரண்டாவது வாக்குறுதியைப் பொறுத்தவரை, 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3-ஆம் தேதியன்று ஆசிரியர் தேர்வுக்கான தகுதிச் சான்றிதழை ஆயுட்காலத் தகுதிச் சான்றிதழாக மத்திய அரசு மாற்றி அமைத்துவிட்டது. அதற்கான அறிவுரைகளும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன. எனவே, இதற்கான சட்ட வழிவகைகள் குறித்து ஆராயும் பணி தமிழ்நாடு அரசுக்கு இல்லாமல் போய்விட்டது.


அதே சமயத்தில், முதல் வாக்குறுதியான, ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலைவாய்ப்பினைப் பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதி தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 19 மாதங்கள் கடந்த நிலையிலும் நிறைவேற்றப்படவில்லை.


இதனை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் என பல போராட்டங்களை நடத்திவிட்டார்கள். இந்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி இரண்டு மாதங்களுக்கு முன்பு எனது அறிக்கை வாயிலாக முதலமைச்சருக்கு நானும் வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஆனாலும், முதலமைச்சர் வழக்கம்போல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட இந்த வாக்குறுதியைக்கூட திமுக அரசால் நிறைவேற்ற முடியவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கக் கோரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, அந்தப் போராட்டத்திற்கு தாமாக முன் சென்று ஆதரவு அளித்து, அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் கூறியவர்மு.க. ஸ்டாலின். அதற்கேற்ப அந்த வாக்குறுதி திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றிருந்தது. இவர்களின் வாக்குகளை எல்லாம் பெற்றுத்தான் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இன்றைக்கு அவர்களுடைய கோரிக்கையினை நிறைவேற்றும் இடத்தில் இருக்கின்றார். ஆனால், இதுகுறித்து வாய் திறக்க மறுத்து வருகின்றார்.


'விடியலை நோக்கி' என்ற திமுகவின் பிரச்சாரத்தை நம்பி ஆசிரியர்கள் தி.மு.க.விற்கு வாக்களித்தனர். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பெற்று 19 மாதங்கள் கடந்தும் விடியலுக்காக காத்துக் கொண்டிருக்கக்கூடிய அவல நிலைக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


"தனக்கு விடியல் கிடைத்துவிட்டது, இனி யார் எப்படி போனால் நமக்கென்ன" என்ற தன்னல மனப்பான்மை தலைவிரித்து ஆடுகிறதோ என்னவோ! இது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும். இதற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தற்போதைய கோரிக்கை, மறு நியமன போட்டித் தேர்வுக்கான அரசாணையை ரத்து செய்துவிட்டு, காலிப் பணியிடங்களை போட்டித் தேர்வின்றி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வைத்து நிரப்ப வேண்டும் என்பது தான்.


இதில் கொள்கை முடிவு தான் எடுக்கப்பட வேண்டுமே தவிர, கூடுதல் நிதிச் சுமை ஏதும் அரசுக்கு ஏற்பட வாய்ப்பில்லை. மீண்டும் போட்டித் தேர்வு என்பது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிக்கு முரணானது என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


எனவே, தமிழ்நாடு முதல்-அமைச்சர், இதில் உடனடியாகத் தலையிட்டு, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில், போட்டித் தேர்வின்றி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்"


இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Post Top Ad