குழந்தைகள் சமமான வாய்ப்பு பெறுவதே அரசின் குறிக்கோள் – முதலமைச்சர் குழந்தைகள் தின வாழ்த்து - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, November 14, 2022

குழந்தைகள் சமமான வாய்ப்பு பெறுவதே அரசின் குறிக்கோள் – முதலமைச்சர் குழந்தைகள் தின வாழ்த்து

 
கிராமப்புறக் குழந்தைகள், நகர்ப்புற குழந்தைகள் என பாகுபாடின்றி சமமான வாய்ப்பு பெறவேண்டும் என்பதே அரசின் குறிக்கோள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள குழந்தைகள் நாள் வாழ்த்துச் செய்தியில், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு, குழந்தைகள் மேல் கொண்ட மாறாத அன்பின் நினைவாகவும், குழந்தைகள் அவர் மீது கொண்ட நேசத்தின் அடையாளமாகவும், அவருடைய பிறந்த நாளான நாளை (நவம்பர் 14-ஆம் தேதி) குழந்தைகள் நாளாகக் கொண்டாடி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.


தமிழ்நாட்டில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் உரிமைகள் பெறவும் தனித்துவம் வாய்ந்த “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. குழந்தைகளின் நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அரசு குழந்தைகளுக்கெனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம். எந்தக் குழந்தையும் பசியோடு வகுப்பறையில் அமர்ந்திருக்கக்கூடாது என்பதுதான் அரசின் இலக்கு.


குழந்தைகளின் மனநலன், உடல்நலன் சார்ந்தவற்றில் கவனம் செலுத்தி அதற்கேற்பப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. குழந்தைகளுக்கான கலை, பண்பாட்டு வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. குழந்தைகள் ஏட்டுக்கல்வியையும் தாண்டி வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கில், சிறார் திரைப்பட விழா அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் நடத்தப்படுகிறது.


இப்படியான மகிழ்ச்சியான கல்வி கற்றல் நம் பள்ளிகளில் உருவாகி இருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு மாற்றம். சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கும் பிற குழந்தைகளுக்கும் இடையே இணக்கமான நல்லுறவு வளரவும், சகோதரத்துவமும் நட்புணர்வும் தழைக்கவும், என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமோ அனைத்தையும் செயல்படுத்த அரசு தயாராக உள்ளது. குழந்தைகளுக்கான உரிமைகள் பொதுவானவை. அனைத்துக் குழந்தைகளுக்கும் அவற்றை உரித்தாக்க, தமிழ்நாடு அரசு இந்தக் குழந்தைகள் நாளில் உறுதி ஏற்கிறது.


குழந்தைகள் எதிர்கால தூண்கள் என்பதை கருத்திற்கொண்டு, கிராமப்புறக் குழந்தைகள், நகர்ப்புறக் குழந்தைகள் என்ற பாகுபாடின்றி, சமமான வாய்ப்பு பெற்று, ஒளிமயமான வாழ்வினைப் பெற்றிட சிறந்த கல்வி, சமுதாய, பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதே இந்த அரசின் குறிக்கோளாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.Post Top Ad