தலைமை ஆசிரியரின் பொய் பாலியல் புகார் - ஐஜி கடும் எச்சரிக்கை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, November 3, 2022

தலைமை ஆசிரியரின் பொய் பாலியல் புகார் - ஐஜி கடும் எச்சரிக்கை

 



மதுரையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது பொய்யாக பாலியல் புகார் அளிக்க மாணவிகளை தூண்டிய தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்டத்தை தவறாக பயன்படுத்தும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார்.


மதுரையில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ‘‘சில ஆசிரியர்கள், மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக புகார் பெட்டியில் மாணவிகள் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்’’ என மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினரிடம் தகவல் அளித்தார். இதன்பேரில், மதுரை ஊமச்சிகுளம் மகளிர் போலீசில், கடந்த ஆக. 6ம் தேதி புகார் தெரிவிக்கப்பட்டது.


இதன் அடிப்படையில், புகார் பெறப்பட்டு குழந்தைகள் நல குழுமத்தை சேர்ந்த ஒரு குழு விசாரணை செய்தது. முதற்கட்ட நடவடிக்கையாக 3 ஆசிரியர்கள் மீதும் ஊமச்சிகுளம் போலீசார் அன்றைய தினமே போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரியை, தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க்கிடம் ஆசிரியர்களுக்கு இடையேயான விரோதப்போக்கில் பொய் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக கடந்த ஆக. 8ம் தேதி மனு அளித்தார்.


 விசாரணையில்  மாணவிகள், ‘‘நாங்களாக அக்கடிதத்தை எழுதவில்லை. தலைமை ஆசிரியர் கூறியதன்பேரில் அவ்வாறு செய்தோம். எந்த ஆசிரியரும் தங்களிடம் தவறாக நடக்கவில்லை’’ என கூறியுள்ளனர்.இது தொடர்பான அறிக்கை ஆக.11ம் தேதி  மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலும், வழக்கின் சாட்சிகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையிலும் பொய் புகார் என தீர்ப்பளித்து வழக்கு முடிக்கப்பட்டது. .


இதுகுறித்து தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் கூறும்போது, ‘‘தவறிழைக்காதவர்கள் தண்டனை பெற்று விடக்கூடாது என்ற அடிப்படையில் இவ்வழக்கை விசாரணை நடத்தி உண்மையை  வெளிக்கொண்டு வந்த மதுரை சரக டிஐஜி, மதுரை எஸ்பி மற்றும் ஊமச்சிகுளம் டிஎஸ்பி, ஆய்வாளர் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள். மேலும் இதுபோன்று ஆசிரியர்களுடனான பகையில் அவர்கள் மீது பொய் புகார் அளிப்பதற்காக, மாணவிகளை தூண்டிவிட்டு தனது சுய லாபத்திற்காக பயன்படுத்தியதாக தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


தென்மாவட்டங்களில் இதுபோன்று போக்சோ சட்டத்தை யார் தவறாக பயன்படுத்தினாலும் கடும் நடவடிக்கை இருக்கும். இந்த வழக்கில் மாணவிகளை பொய் புகார் அளிக்க தூண்டிவிட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர், ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சக ஆசிரியை ஒருவரை சாதியரீதியாக பேசியது தொடர்பான புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்’’ என்றார். தமிழகத்திலேயே முதன்முறையாக போக்சோ வழக்கில் பொய்யான புகார் அளிக்க மாணவிகளை தூண்டிய தலைமை ஆசிரியர் மீது, போக்சோ வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post Top Ad