மண்டல ஆய்வு கூட்டங்கள் - கலங்கி நிற்கும் மாவட்ட கல்வி அதிகாரிகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, November 3, 2022

மண்டல ஆய்வு கூட்டங்கள் - கலங்கி நிற்கும் மாவட்ட கல்வி அதிகாரிகள்

 



எவ்வித நிதி ஒதுக்கீடும் இன்றி கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் மண்டல ஆய்வுக் கூட்டங்களுக்கான செலவு பல லட்சங்களை விழுங்குவதால் மாவட்ட கல்வி அதிகாரிகள் விழிபிதுங்கியுள்ளனர்.


இத்துறைக்கு கமிஷனராக நந்தகுமார் பொறுப்பேற்றது முதல் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் மண்டல ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.


இதன்படி துறை அமைச்சர், செயலாளர், கமிஷனர், இணை இயக்குனர்கள் என சென்னையில் உள்ள கல்வி அதிகாரிகள் 'பட்டாளமே' கூட்டம் நடக்கும் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் முகாமிடுகின்றன.


இவர்கள் தவிர, கூட்டம் நடக்கும் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களின் சி.இ.ஓ.,க்கள் முதல் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வரையான 'மெகா' குழுவினரும் அந்த மாவட்டத்திற்கு வருகை தர வேண்டும். குறைந்தது 300க்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் அமர வைத்து அமைச்சர், அதிகாரிகள் இந்த ஆய்வை நடத்துகின்றனர்.


ஆனால் கூட்டம் நடக்கும் இடம் வாடகை, வந்தவர்களுக்கு இரண்டு நாட்கள் சாப்பாடு, அதிகாரிகள் 'கூட்டத்திற்கு' சொகுசு ஓட்டல்களில் அறைகள், வாகன வசதி ஏற்பாடு உட்பட அனைத்து செலவுகளுக்கும் துறை சார்பில் ஒரு காசு கூட ஒதுக்கவில்லை. அனைத்தும் அந்த கூட்டம் நடக்கும் மாவட்ட கல்வி அதிகாரிகள் தலையில் தான் விழுகிறது. இதனால் அவர்கள் தனியார் பள்ளிகளில் 'ஸ்பான்சர்' பிடிக்கின்றனர்.


ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் கூறியதாவது: மதுரையில் மூன்று மாதங்களுக்கு முன் இக்கூட்டம் நடந்தது. உள்ளூர் அமைச்சர் ஒருவர் சாப்பாட்டு செலவை ஏற்றதால் அதிகாரிகள் தப்பினர்.


ஆனால் தற்போது ஒருநாள் அவகாசத்தில் மீண்டும் மண்டல கூட்டத்தை மதுரையில் இன்றும் (நவ.,3) நாளையும் (நவ.,4) நடத்த கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். 6 மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கின்றனர். குறுகிய காலம் என்பதால் இடம் தேர்வு செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.


முதல் நாளில் செயலாளர், கமிஷனர் உள்ளிட்ட குழுக்கள் பள்ளிகளை ஆய்வு செய்யும் நிகழ்வை மாவட்ட அதிகாரிகள் பிரமாண்டமானதாக்கி எச்சரிக்கை விடுவது ஆசிரியர்களுக்கு தேவையில்லாத மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது.


முந்தைய மண்டல கூட்டங்களில் கண்டறியப்பட்ட பள்ளி குறைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. கல்வித்தரத்தை உற்றுநோக்குவதை விட ஆசிரியர்களின் பதிவேடுகள், புள்ளிவிவரம் சாதனை சார்ந்த விஷயங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.


ஆசிரியர்கள் வேலை செய்யாதது போல் அதிகாரிகள் நினைக்கின்றனர். இப்பார்வை மாறவேண்டும். இனிவரும் மண்டல கூட்டங்களுக்கு கல்வித்துறை நிதிஒதுக்க வேண்டும் என்றனர்.



Post Top Ad