பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நிதிமன்றம் எச்சரிக்கை - வினாத்தாள் அமைக்கும் குழுவை கலைக்க நேரிடும் என சாடல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, October 18, 2022

பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நிதிமன்றம் எச்சரிக்கை - வினாத்தாள் அமைக்கும் குழுவை கலைக்க நேரிடும் என சாடல்

 



பள்ளி வினாத்தாள்கள் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு பயனற்றதாக உள்ளது என்று நீதிபதிகள் மாகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு தெரிவித்துள்ளனர். இதே நிலை நீடித்தால் தேர்வு வினாத்தாள் அமைக்கும் குழுவை கலைக்க நேரிடும் என உயர்நிதிமன்ற கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. திருக்குறளை பாடத்திட்டத்தில் சரிவர நடைமுறைப்படுத்தாவிடில் பள்ளிக்கல்வித்துறை செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று கூறியுள்ளனர். தமிழ் வளர்ச்சித்துறை செயலர், பள்ளிக்கல்வித்துறை செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நிதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.  


மாணவர்களுக்கு அறிவுரை கூறும் பெற்றோரையும், ஆசிரியரையும் தாக்கும் சூழல் தற்போது நிலவுகிறது. எனவே மாணவர்களை நல்வழிப்படுத்த நன்னெறி கல்வி மிக அவசியம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. மேலும் தற்போது நடைபெறும் பள்ளி தேர்வுகளிலுள்ள வினாதாள்கள் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பயனற்றதாக உள்ளது. இதே நிலை நீடித்தால் தேர்வு வினாத்தாள் அமைக்கும்  குழுவினை கலைக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.


மதுரையை சேர்ந்த ராம்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில்,” 2016 உயர்நீதிமன்ற உத்தரவின்படி திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அடங்கிய 1050 திருக்குறள்களை 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் முழுமையாக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.


ஆனால், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் திருக்குறள் பெயரளவில் மட்டுமே உள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதும் பொழுதும் திருக்குறள்கள் பெயரளவில் மட்டுமே இடம்பெறுகிறது. இதுக்குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


எனவே, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் திருக்குறள் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அடங்கிய 108 அதிகாரங்களில் 1050 திருக்குறள்கள் பொருள் உடன் இடம் பெற உத்தரவிட வேண்டும். மேலும் தேர்விலும் திருக்குறள்கள் சம்பந்தமான கேள்விகள் இடம் பெற உத்தரவிட வேண்டும்.' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியாதவது.


* திருக்குறள் இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தக் கூடியது. 1000 திருக்குறளில் 5 திருக்குறள்களின் பொருளை மாணவர்கள் உணர்ந்தாலே அவர்களை நல்வழிப்படுத்த முடியும். மாணவர்களுக்கு அறிவுரை கூறும் பெற்றோரையும், ஆசிரியரையும் தாக்கும் சூழ்நிலை உள்ளது. மாணவர்களை நல்வழிப்படுத்த நன்னெறி கல்வி மிக அவசியம். என்று தெரிவித்துள்ளனர்.


* திருக்குறளில் 108 அதிகாரங்களில் 1050 குறள்களை மாணவர்களுக்கு கட்டாயம் கற்பிக்க வேண்டும் என 2017-ல் அரசாணை உள்ளது அதனை ஏன் சரிவர பின்பற்றவில்லை. தற்போது நடைபெறும் பள்ளி தேர்வுகளிலுள்ள வினாதாள்கள் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பயனற்றதாக உள்ளது. இதே நிலை நீடித்தால் தேர்வு வினாத்தாள் அமைக்கும்  குழுவினை கலைக்க நேரிடும் என்று கூறியுள்ளனர்.


* திருக்குறள்கள் பாடத்திட்டத்தில் சரிவர நடைமுறைப் படுத்தாவிட்டால் பள்ளிக்கல்வித்துறை செயலர் ஒவ்வொரு விசாரணையிலும் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என்று அடுக்கடுக்கான உத்தரவுகளை பிறப்பித்தனர். மேலும் இந்த வழக்கு குறித்து தமிழ் வளர்ச்சித் துறை செயலர், தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.


Post Top Ad