தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்கலாமே! உயர் நீதிமன்றம் கருத்து - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, July 19, 2022

தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்கலாமே! உயர் நீதிமன்றம் கருத்து

 




தற்காலிக ஆசிரியர்கள் நியமன வழிகாட்டுதலுக்கு எதிரான வழக்கில், 'அரசுக்கு நிதி நிலை தான் பிரச்னை எனில், முதலில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கலாம்.'நிதிநிலை சரியான பின் காலமுறை சம்பளத்தில் நியமிக்கலாமே' என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.


கரூர் சின்னமநாயக்கன்பட்டி பர்வதம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:பி.எஸ்சி.,- பி.எட்., மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றுள்ளேன். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு ஜூன் 23ல் உத்தரவிட்டது.இதற்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்ற குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்கவில்லை. 


  இதற்கு எதிராக ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியடைந்தோர் நலச் சங்கம் தலைவர் ஷீலா பிரேம்குமாரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.ஜூலை 1ல் தனி நீதிபதி தற்காலிக ஆசிரியர்கள் நியமன அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தார். இதைத் தொடர்ந்து தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் வெளியிட்டார். 


அதில் கல்வித் தகுதி, முன்னுரிமை விபரங்கள் இடம் பெற்றுள்ளன; இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. விண்ணப்பிப்போர் பள்ளி அமைந்துள்ள ஊராட்சி அல்லது ஒன்றியம் அல்லது மாவட்டத்திற்குள் அல்லது அருகிலுள்ள மாவட்டத்தில் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனை ஏற்புடையதல்ல. எனவே, வழிகாட்டுதல்களுக்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு பர்வதம் கோரியிருந்தார்.


அவரின் வழக்கை, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார்.தமிழக அரசுத் தரப்பில், 'சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு புதிய வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ''அரசுக்கு நிதி நிலை பிரச்னை உள்ளது எனில், முதலில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கலாம். நிதிநிலை சரியான பின், காலமுறை சம்பளத்தில் நியமிக்கலாமே,'' என கருத்து தெரிவித்தார்.இந்த வழக்கின் விசாரணை இன்றும் நடக்கிறது.

Post Top Ad