தற்காலிக ஆசிரியர் நியமனம் - பணிகளை ஜூலை 19-க்குள் முடிக்க வேண்டும் - Commissioner Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, July 13, 2022

தற்காலிக ஆசிரியர் நியமனம் - பணிகளை ஜூலை 19-க்குள் முடிக்க வேண்டும் - Commissioner Proceedings

 



அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமன பணிகளை ஜூலை 19-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று 24 மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 13,331 இடைநிலை ஆசிரியர், பட்டதாரிஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும்போட்டித்தேர்வு நடத்தி இப்பணியிடங்களை நிரப்ப காலதாமதம் ஆகும்என்பதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது.


தற்காலிக ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தினர். மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோர் சங்கத் தலைவர் ஷீலா பிரேம்குமாரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தமிழக அரசின் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.


இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, "இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதுபோல சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் தொடரப்பட்டுள்ள வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு உயர்நீதிமன்ற பதிவுத் துறையில் கடிதம் தரப்பட்டுள்ளது” எனதமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளிவைத்து நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவிட்டார்.

அதனால், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நிர்வாக வரம்பிற்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கான தடை நீடிக்கிறது. இதர 24 மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர்களை தேர்வுசெய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.


தற்காலிக ஆசிரியர் பணிகளுக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அவர்களில் 28,984 பேர் மட்டுமே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு அவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட 24 மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறிருப்பதாவது:


 தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின்படி, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்கள் ஆகியோரின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.


தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு காலிப்பணியிடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தால் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


| மாவட்ட கல்வி அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை தேர்வுக்குழு பரிசீலித்து தகுதியான நபர்களின் பட்டியலை ஜூலை 14, 15-ம் தேதிகளில் இறுதிசெய்ய வேண்டும்


| தேர்வுக்குழுவால் தேர்வுசெய்யப்பட்ட தகுதியான நபர்கள் குறித்த பட்டியலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜூலை 16-ம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


| தேர்வுக்குழுவினால் தேர்வுசெய்யப்பட்ட பட்டியலை கூர்ந்தாய்வு செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜூலை 18-ம் தேதி ஏற்பளிப்பு செய்ய வேண்டும்.


| மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால் ஏற்பளிக்கப்பட்ட தற்காலிக நியமனத்துக்கு பள்ளி மேலாண்மைக்குழுவிடம் ஜூலை 19-ம் தேதி ஒப்புதல் பெறப்பட வேண்டும்.


| தற்காலிக நியமனம் பெற்ற ஆசிரியர்கள் ஜூலை 20-ம் தேதி பணியில் சேர்க்கப்பட வேண்டும்.


மேற்கண்ட அறிவுரைகளை முழுமையாக பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமின்றி செயல்படுமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடக்கக் கல்வித்துறையில் தற்காலிக இடைநிலை ஆசிரியர் நியமனம் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரால் தனியே அறிவுரைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Post Top Ad