பழைய ஓய்வூதிய திட்டம் வருமா? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் முழு உரை - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, May 8, 2022

பழைய ஓய்வூதிய திட்டம் வருமா? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் முழு உரை

 
சட்டசபையில் நேற்று நிதித்துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை, சட்டமன்றம் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை  மீதான விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: 


இன்று ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு நாள். ஏதோ பல காரணங்களுக்காக, பல வகையில் வாழ்க்கையில் நல்ல விளைவுகள் பெற்றவன் நானாக இருந்தாலும் உண்மையிலேயே என் வாழ்க்கையில் இந்த ஓர் ஆண்டு நான் பெற்ற ஒரு மகத்தான  வாய்ப்பாக கருதுகின்றேன். சுமார் 3,500 கோப்புகள் இதுவரைக்கும் ஆராய்ந்து, அதை ஆய்வு செய்து கையெழுத்திட்டு அனுப்பியிருக்கின்றேன்.


சட்டமன்றத்திற்கும், நீதித் துறைக்கும் ஒரு தெளிவான கோடு இருக்கவேண்டும். அதாவது பிரிந்து இருக்கவேண்டும்.  அரசாங்கத்தின் பணியில் நீதிமன்றம் கையை வைக்கக்கூடாது. அரசாங்கம் ஒரே கொள்கையில்தான் நடக்கவேண்டும். ஜனநாயகத்தில் சட்டமன்றம் மிக முக்கியமான அம்சமாக உள்ளது. அது, அனைத்து உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில் மக்களின் குரலாக உள்ளது. ஆனால் தனித்தனி எம்.எல்.ஏ.க்கள் என்று வரும்போது அரசின் சட்ட அமைப்புகளில் தலையிட வழியில்லை. ஏனென்றால், அவர்கள் கட்சிக்கு எதிராகவோ அல்லது பக்கத்து தொகுதி எம்.எல்.ஏ.வின் கருத்தில் தலையிடுவதாக அமைந்துவிடும்.


அதிகாரம் தொடர்பாக நீதித்துறையின் எல்லை என்ன, அரசு மற்றும் சட்டமன்றத்தின் எல்லை, உரிமை என்ன என்பது சுதந்திர இந்தியாவில் இருந்து தெளிவில்லாமல்தான் உள்ளது. காலம் ஆகஆக அந்த எல்லை கரைந்துகொண்டே வருகிறது. நீதிமன்றத்தில் இருந்து வருகிற தீர்ப்புகளைப் பார்த்தால் முழுமையாக அரசின் உரிமைகளில் கைவைப்பது போலத்தான் உள்ளன. பொது கணக்கு குழு உறுப்பினராக இருந்தபோது நான் கவனித்த ஒன்று, பல இடங்களில் அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியாக இல்லை என்பது.


கடந்த சில ஆண்டுகள் தலைமைத்துவம் இல்லாத ஆட்சி நடந்ததால் அதிகாரிகள் அதை திசை திருப்பி இருக்கிறார்கள். முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அதில் மாற்றங்களை செய்து வருகிறோம். 10 லட்சம் ஊழியர்களைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனம் என்பதால் படிப்படியாக அதில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. தலைமைச் செயலாளர் வழிகாட்டுதலின் பேரில் அனைத்தும் திருத்தப்பட்டு யார் எப்படி செயல்பட வேண்டும் என்பது தெளிவாக்கப்படும்.

தொகுதி மேம்பாட்டு நிதியைப் பொறுத்த அளவில், 15வது சட்டமன்றத்திற்கு ரூ.700 கோடி செலவு செய்யாமல் பாக்கி இருக்கிறது.


இந்த ஆண்டும் அந்த நிதி முழுமையாகப் போய் சேரவில்லை. சில தடைகள் இருக்கலாம். எனவே, அதை சிறப்பாக செயல்படுத்துவது பற்றி முதலமைச்சர் முடிவு செய்வார். அரசு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் குறித்து ஒரு விளக்கத்தை கூற விரும்புகிறேன். பல மாநிலங்களில் அதை மாற்றி அமைப்போம் என கூறியிருக்கின்றனர். நிதி சார்ந்த சட்டங்கள் அடிப்படையில் இதில் விளைவு இருக்கிறது என்று கருதினேன். ராஜஸ்தான் மாநிலம், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (என்.பி.எஸ்.) சேர்ந்த பிறகு பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மீண்டும் செல்வதாக கூறியது.


ஆனால், அதற்கு உரிமை கிடையாது, திருப்பி கொடுக்க முடியாது என்று பி.எப்.ஆர்.டி.ஏ. அமைப்பு விளக்கமான கடிதத்தை அளித்துள்ளது. 2003ம் ஆண்டுக்கு முன்பிருந்த ஓய்வூதியத் திட்டத்திற்கும், அதன் பின்னர் வந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்னவென்றால், அந்த ஆண்டுக்கு முன்பு முழு தொகையும் அரசின் பொறுப்பில் இருந்தது. ஆனால், அந்த ஓய்வூதிய திட்டம் போன பிறகு அனைத்தும் தனிநபர் பணமாகிவிட்டது. அரசு கொடுக்கும் தொகை, அந்த தனிப்பட்ட நபரின் பெயரில் கணக்கு வைக்கப்படுகிறது.


தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் இந்த இரண்டு மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்கள் என்பிஎஸ்சில் சேர்ந்துவிட்டு நிதியை மாற்றிவிட்டார்கள். இதை கொள்கை விளக்க குறிப்பில் தெளிவாக விளக்கியுள்ளோம். எனவே, அப்படி பிரிக்கப்பட்ட நிதியை மீண்டும் அரசு தனது கணக்கில் எடுத்துக்கொள்ள சட்டத்தில் இடமில்லை. இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அரசின் முதல் செலவு அரசு ஊழியர் ஊதியமாகவும், பின்னர் ஓய்வூதியமாகவும் உள்ளது. இவற்றுக்குப் பின்னர்தான் மற்ற துறைகள் வருகின்றன. ரூ.39 ஆயிரத்து 500 கோடி ஆண்டொன்றுக்கு ஓய்வூதியத்திற்காக செலவு செய்யப்பட்டது.


2003ம் ஆண்டுக்குப் பிறகு வரும் புது ஓய்வூதியத் திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.3,205 கோடி வந்துள்ளது. அந்த வகையில் ஒரு ஊழியருக்கு 10 சதவீதம் என்ற வகையில் ரூ.50 ஆயிரத்தை அதாவது ஆண்டு ஊதியம் ரூ.5 லட்சம் என்றால் அரசு பங்களிப்பாக ஆண்டொன்றுக்கு வழங்குகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு ரூ.24 ஆயிரம் கோடி செலவிடப்பட்டது. அதன்படி ஒருவருக்கு ரூ.2 லட்சம் பங்களிப்பு வழங்கப்பட்டு வந்தது. 2 ஆண்டுகளாக ஓய்வு பெறும் வயதை உயர்த்தியுள்ளனர். அது தற்போது சேர்ந்துவிட்டது.


இப்போது ஓய்வு பெறும்போது ரூ.2,150 கோடி கடைசி சம்பளத்திற்கும், ‘கிராஜுட்டி’ பணமாக ரூ.2,293 கோடியும் பயன்படுத்தாத விடுப்புக்காக ரூ.2,350 கோடியும்; உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெறுவோருக்கு ரூ.5,200 கோடி ரூபாயும் வருகிறது. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு சேர்த்து அளிக்க வேண்டிய பங்களிப்பாக ரூ.7 கோடியும் (இந்த ஆண்டிற்கு), முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், குடும்ப உறுப்பினர்களுக்கான செலவாக ரூ.40 கோடி வருகிறது. எனவே, இதில் முதலமைச்சர் எடுக்கும் முடிவுகளுக்கு நான் கட்டுப்பட்டுள்ளேன்.இவ்வாறு அவர் பேசினார்.
Post Top Ad