அரசுக்கு ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை! - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, April 14, 2022

அரசுக்கு ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!

 


பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது ஆசிரியர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும். சமீபகாலமாக ஏற்பட்டுள்ள மன அழுத்தங்களுக்கு மருந்து கிடைக்கும் என ஆசிரியர்கள், நம்பிக்கை வைத்து காத்திருந்தனர். தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களை நேரடியாக சந்தித்து பேசியதற்கு பிறகு இந்த நம்பிக்கை வலுவடைந்திருந்தது


இவ்வாறு ஆசிரியர்கள் தங்களது எதிர்பார்ப்புகளை அதிகரித்திருந்த நிலையில் மானிய கோரிக்கையில் ஏதும் குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது. மாண்புமிகு அமைச்சர் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கைகள், மாண்புமிகு முதல்வர் அவர்களால்110 விதியின் கீழ் அறிவிக்கபடலாம் என தோன்றுகிறது.


இது நமது அரசு. நமக்கான அரசு. கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் விலகியதற்குப்பின் படிப்படியாக ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்படுத்தப்படும் என்று அனைவராலும் நம்பப்பட்டது. ஆனால் மானிய கோரிக்கையில் இது தொடர்பாக ஏதும் அறிவிக்காதது மட்டுமல்ல, சற்றேறக்குறைய அதே நேரத்தில், வழங்கப்படுவதாக மாண்புமிகு முதல்வர் அவர்களால் ஏற்கனவே தெரிவிக்கப் பட்டிருந்த ஒப்படைப்பு ஊதியம், மறு தேதி குறிப்பிடும் வரை நிறுத்தி வைப்பதாக கூறப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களின் நம்பிக்கையை வேரோடும் வேரடி மண்ணோடும் தகர்க்கும் வகையில் அமைந்துவிட்டது. 


மாண்புமிகு முதல்வர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பையே ஒத்திவைக்கும் அதிகாரம் மிகுந்தவர்கள் உள்ளனரோ என்று அச்சம் கொள்ள வைக்கிறது. இந்நிலை தொடர்ந்தால், எந்நாளும் தங்களின்மீது கொண்டிருந்த நம்பிக்கை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு விடுமோ என எண்ணத்தோன்றுகிறது.


பொருள் சார்ந்த அறிவிப்புகள் இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஆசிரியர்களின் மன அழுத்தத்திற்கு விடியல் கிடைக்கும் வழி இல்லையே என்ற கேள்வியும் எழுகிறது. 

மீண்டும் தொடக்கக்கல்வித்துறை தனித்து இயங்கும் என்பது குறித்த அறிவிப்பு, எமிஸ் வலைதளத்தில் சிக்கி ஆசிரியர்கள் சின்னாபின்னமாகி இருக்கும் சூழலில் அந்த வலைதளத்தை மேம்படுத்துவது, அதனை நிர்வகிக்க பிரத்தியேக பணியாளர்கள் நியமிக்கப்படுவது என்ற அறிவிப்புகள் வந்திருந்தால் கூட ஆசிரியர்கள் சற்று மனநிம்மதி அடைந்திருப்பார்கள். அதுவும் நடக்கவில்லை. 


மாறாக எந்தவித பலனையும் ஏற்படுத்தாத சில புள்ளிவிவரங்கள் அரசின் சாதனையாக வெளிக்காட்டப்படுவது வேதனை அளிக்கிறது. அதுபோன்ற புள்ளிவிவரங்களை தந்து சர்வ வல்லமை படைத்த அதிகாரிகளால் ஆட்சியாளர்கள் வழி நடத்தப்படுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.  எனவே களத்தில் உள்ள உண்மைநிலையினை தெரிந்து கொள்ள ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். 


நவீன தொழில்நுட்பங்களை இணைத்து பணியாற்ற சோம்பல் படுகிறார்கள் என்று ஆசிரியர்களை பற்றிய தவறான அபிப்பராயத்தை ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தி, ஆசிரியர்களுக்கு தீர்க்க வேண்டிய கோரிக்கைகளை தீர்க்காமல்,  ஆசிரியர்களை கையாளும் இன்றைய போக்கு முற்றிலுமாக மாற்றப்பட வேண்டும். இது ஆசிரியர்களின் அதிருப்தி என்பதைவிட ஆதங்கமென்று ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் அரசியல்ஆதரவு  இப்படித்தான் இருக்கும் என்று வெளிப்படையாக முத்திரை குத்தப்பட்டவர்கள் என்ற உரிமையுடன் இதனை தெரிவிக்கிறோம். 


வெற்றியும் தோல்வியும் சகஜம் என்ற கோட்பாட்டுக்கு எப்போதும் ஆசிரியர்கள் எதிரானவர்கள். வெற்றி மட்டுமே ஒற்றை குறிக்கோள் என்பதை, வேத வாக்காக மாணவர்களுக்கு கற்பிப்பவர்கள் என்பதால் ஏற்பட்ட, கூடுதல் அக்கறையுடன் தெரிவித்துள்ள இந்த கருத்துகளை ஏற்று, தீர்வுகளை தர வேண்டும். தீர்வினை கட்டாயம் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.


அன்புடன் 

ந.ரெங்கராஜன், 

பொதுச்செயலாளர், TESTF. 

இணைப் பொதுச்செயலாளர், AIPTF.


Post Top Ad