ஆசிரியர் பணியிட மாறுதல் IPL போல ஏலம் விடப்படுகிறதா? - ஆசிரியர்கள் ஒழுக்கத்தை எப்படி போதிப்பார்கள்? உயர் நீதிமன்ற சரமாரி கேள்வி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, March 3, 2022

ஆசிரியர் பணியிட மாறுதல் IPL போல ஏலம் விடப்படுகிறதா? - ஆசிரியர்கள் ஒழுக்கத்தை எப்படி போதிப்பார்கள்? உயர் நீதிமன்ற சரமாரி கேள்வி

 


ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுத்து பணியிட மாறுதல் பெற்றவர்கள் மாணவர்களுக்கு எந்த நிலையில் கல்வி கற்பிப்பார்கள்?  

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கேள்வி


பள்ளி மாணவர்களுக்கு, எந்த வகையான ஒழுக்கத்தை போதிப்பார்கள்? - நீதிபதி

ஐபிஎல் ஏலம் போன்று ஆசிரியர் பணியிடமாறுதல் ஏலம் விடப்படுகிறதா? என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ரூ.10 லட்சம் கொடுத்து பணிமாறுதல் பெற்றவர்கள் மாணவர்களுக்கு எப்படி ஒழுக்கத்தை கற்பிப்பார்கள் என நீதிபதி வினாவியுள்ளார்.

மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த ஆசிரியர் பணியிட மாறுதல் குறித்த வழக்குகள், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தன.


அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், “லஞ்சம் கொடுத்தால்தான் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் கிடைக்கிறது. அதிலும், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு இடமாறுதல் பெற ரூ.10 லட்சம் வரை லஞ்சமாக கொடுக்க வேண்டி உள்ளது. இடமாறுதல் கவுன்சிலிங்கில் வெளிப்படை தன்மையே இல்லை” என வாதாடினார்கள். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-


பல்வேறு வழக்குகளின் விசாரணையின்போது, ஆசிரியர் பணியிட மாற்றம் நேர்மையான முறையில் நடைபெறவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.


ஏலம் விடப்படுகிறதா?


ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களைப் போல, ஆசிரியர் பணியிடமாறுதலும் லட்சக்கணக்கில் ஏலம் விடப்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.


நீதித்துறை மற்றும் கல்வித்துறையின் நலன் கருதி, இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.


ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுத்து பணியிட மாறுதல் பெற்றவர்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் எப்படி கற்பிப்பார்கள்? லஞ்சம் கொடுத்து ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெறும் நிலை, சந்தேகத்திற்கு இடமின்றி கவலைக்குரியது.


பேரழிவை ஏற்படுத்தும்


இந்த நிலை தொடர்ந்தால், அது பேரழிவு, அபாய விளைவுகளுக்கு வழிவகுக்கும். ஆசிரியர் இடமாறுதலுக்கு லஞ்சம் என்பது தென் மாவட்டங்களில் மிகவும் சாதாரணமாக நடப்பதாகவும் கூறப்படுகிறது.


எனவே இந்த வழக்கில் இந்த கோர்ட்டு தாமாக முன் வந்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் இயக்குனரை எதிர் மனுதாரராக சேர்க்கிறது.. இந்த வழக்கு குறித்து பள்ளிகல்வித்துறை செயலாளர், லஞ்ச ஒழிப்பு பிரிவு இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை இன்றைக்கு (4-ந்தேதி) ஒத்திவைத்தார்.

ஆசிரியர் பணி இட மாறுதல் கலந்தாய்வு தொடர்பான வழக்குகள் மீதான விசாரணையின் போது நீதிபதி சுப்பிரமணியம் கேள்வி








Post Top Ad