பள்ளி மாணவர்கள் மீது போலீசில் புகார் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, March 15, 2022

பள்ளி மாணவர்கள் மீது போலீசில் புகார்

 




மாநகர பேருந்துகளில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடும் பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பணிமனை கிளை மேலாளர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சென்னையில் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட போலீசார் தடை விதித்துள்ளனர். ஆனால், அதை மீறி சில இடங்களில் மாணவர்கள் மாநகர பேருந்துகளில் பஸ்டே கொண்டாடுவது, பாட்டு பாடிக்கொண்டு தாளம் அடித்து கொண்டு செல்வது என தொடர்ந்து பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும், கல்லூரிகளுக்கு நேரில் சென்று அறிவுரையும் வழங்கி வருகின்றனர். இதன் காரணமாக ரூட் தல மோதல், பஸ் டே கொண்டாட்டம் உள்ளிட்டவை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் சென்னையில் சமீப காலமாக பேருந்துகளில் பள்ளி மாணவர்களின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், புரசைவாக்கம் பகுதியில் பள்ளி மாணவர்கள் மாநகர பேருந்து டிரைவரை தாக்கி ரகளையில் ஈடுபட்டனர்.


கடந்த 2 மாதத்திற்கு முன், ஓட்டேரி பகுதியில் கண்டக்டர் மற்றும் டிரைவரை தாக்கி பள்ளி மாணவர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, பள்ளி மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். மாணவர்களின் இதுபோன்ற செயல்களால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


இந்நிலையில், மீண்டும் ஒரு அத்துமீறல் சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. பெரம்பூர் பணிமனையில் இருந்து அண்ணா சதுக்கம் செல்லும் (த.எ.29 ஏ) மாநகர பேருந்து நேற்று முன்தினம் புரசைவாக்கம் பகுதியில் சென்றபோது, பள்ளி மாணவர்கள் பேருந்து மீது ஏறி ஜன்னல் வழியாக தொங்கியபடி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். உடனே, பேருந்தை நடுரோட்டில் நிறுத்திய டிரைவர், மாணவர்கள் இறங்கிப் போனால் தான் வண்டியை எடுப்பேன் எனக் கூறினார். இதனால் பள்ளி மாணவர்களுக்கும் கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


தினமும் இதேபோன்று மாணவர்கள் தொல்லை கொடுத்து வருவதாக மாநகர பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பெரம்பூர் பணிமனை கிளை மேலாளர் கணேசமூர்த்தியிடம் முறையிட்டனர். அதன்பேரில், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் கணேசமூர்த்தி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘‘எங்களது பணிமனையில் இருந்து இயக்கப்படும் 29 ஏ, 38 சி, 29 சி. 42 உள்ளிட்ட பேருந்துகளில் தினமும் புரசைவாக்கம் டவுட்டன் உள்ளிட்ட பகுதிகளில் ஏறும் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு தொல்லை செய்து வருகின்றனர். குறிப்பாக, பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறியுள்ளார்.



Post Top Ad