தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகிறது - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, March 18, 2022

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகிறது

 




தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். இதில் பல புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும், நாளை தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட்டிலும் புதிய அறிவிப்புகளை வெளியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.


தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் முதல் பட்ஜெட் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில், பெட்ரோல் லிட்டருக்கு ₹3 குறைப்பு, கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ₹2,756 கோடி தள்ளுபடி செய்வது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.


மேலும், காவல் துறைக்கு ₹8,930 கோடி, பொது விநியோக திட்டத்திற்கு ₹8,438 கோடி, நெடுஞ்சாலை துறைக்கு ₹18,899 கோடி, மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ₹18,933 கோடி, பள்ளி கல்வி துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ₹32,560 கோடி, உயர் கல்வி துறைக்கு ₹5,369 கோடி ஒதுக்கப்பட்டது. அதேபோன்று கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தற்போது செயல் பாட்டுக்கு வந்துள்ளது.


இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) இன்று காலை 10 மணிக்கு சென்னை, தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. கூட்டம் தொடங்கியதும், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றுவார். காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இந்த வரவு-செலவு திட்டம் வாசிக்கப்பட இருக்கின்றது. தொடுதிரை உதவியோடு கணினி முறையில் ஏற்கனவே கடந்த ஆண்டு வரவு-செலவு திட்டம் தாக்கல் செய்ததுபோன்று, இந்த ஆண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.


வரவு-செலவு தாக்கல் படித்து முடித்ததும், இன்றைய பேரவை கூட்டம் முடிவடையும். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, கொறடா கோவி.செழியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த கூட்டத்தில், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வது மற்றும் பட்ஜெட் மீது எத்தனை நாட்கள் விவாதம் நடத்துவது என்று முடிவு செய்து அறிவிக்கப்படும். அலுவல் ஆய்வு கூட்டத்திலேயே, மானிய கோரிக்கைகள் எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


அதன்பின்னர் 21, 22, 23 (திங்கள், செவ்வாய், புதன்) ஆகிய மூன்று நாட்கள் பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்பட்டு, 24ம் தேதி பட்ஜெட் விவாதத்துக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலுரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடரை முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றம் கூடி, மானிய கோரிக்கை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும்.


முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் 2வது பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டில், திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முக்கியமாக, தேர்தல் அறிக்கையில் கூறியபடி, சில நிபந்தனைகளுடன் மகளிருக்கான உரிமை தொகை மாதம் ₹1000 வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு இன்று தாக்கல் செய்யப்படும், பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின்போது திமுக முக்கிய நிர்வாகிகள் பேசும்போது, விரைவில் மகளிருக்கு ₹1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறினர்.


அதனால், எப்படியும் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு இடம்பெற வாய்ப்புள்ளதாக அரசு உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். மொத்ததில், 2022-2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது தமிழக மக்களிடம் குறிப்பாக பெண்கள் மற்றும் விவசாயிகளிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post Top Ad