தினம் ஒரு உத்தரவு - ஆசிரியர்கள் வேதனை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, March 11, 2022

தினம் ஒரு உத்தரவு - ஆசிரியர்கள் வேதனை

 

அனைத்து அரசு பள்ளிகளிலும், மாணவியரின் மாதவிடாய் குறித்து தினமும் விபரம் கேட்பதால், மாணவியர் மற்றும் ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


பாலியல் பிரச்னைகள் அதிகரித்துள்ள காலத்தில், பள்ளிக் கல்வித் துறையின் ஆரோக்கியமற்ற செயல்பாடுகள், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. புதிதாக, 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை மின்னணு தள செயலி ஒன்றை, பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியின் ஆமை வேக செயல்பாட்டால், ஆசிரியர்களும், மாவட்ட அதிகாரிகளும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.


தினமும் பாடம் நடத்தும் நேரத்தை விட, எமிஸ் செயலி தளத்தை செயல்பட வைக்க, ஆசிரியர்கள் பல மணி நேரம் மல்லுக்கட்டும் நிலை உள்ளது. இதன் ஒரு கட்டமாக, மாணவ - மாணவியரிடம் எட்டு வகைகளில், 64 கேள்விகளுக்கு தினமும் பதில் பெற்று பதிவு செய்யுமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


மாதவிடாய் எப்படி?


இந்த கேள்விகளில் சிலவற்றுக்கு மாதம் ஒரு முறையும், சிலவற்றுக்கு தினமும் பதில் பெற வேண்டும். கால்கள் அல்லது பாதம் வளைந்து இருக்கிறதா; மிகவும் குள்ளமாகவோ, எடை குறைவாகவோ உள்ளனரா; காலையில் என்ன உணவு சாப்பிட்டனர். இரவில் என்ன உணவு; பள்ளிகளில் தரும் கலவை சாதத்தில் எது பிடிக்கும் என்ற கேள்விகளுக்கும் பதில் பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மாணவியரிடம் மாதவிடாய் ஒழுங்காக வருகிறதா; மாதவிடாயின் போது உதிரப்போக்கு அதிகமாக உள்ளதா என்ற கேள்விக்கு பதில் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மாணவர்களிடம், 'குட்கா' பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா; அவர்களுக்கு பல் சிதைவு, ஈறு நோய், பல் கரை போன்றவை உள்ளதா என சோதித்து பதில் தர வேண்டும். மேலும், மாணவ -மாணவியரிடம் சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல் உள்ளதா என்றும் கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கேள்விகளால், மாணவியர் மற்றும் ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெண்களை பொறுத்தவரை, தங்களின் மாதவிடாய் பிரச்னைகளை தாயிடமும், மருத்துவரிடமும் மட்டுமே பகிர்ந்து கொள்வர்.


இந்த விஷயத்தில் பொது இடத்தில் கேள்வி கேட்பது, மாணவியரை பீதி அடையச் செய்துள்ளது. மாணவர்களும் அறியும் வகையில், இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பது, பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று, பள்ளிகளில் பாலியல் சர்ச்சைகளும், பிரச்னைகளும் அதிகமாகி வரும் நிலையில், ஆண் ஆசிரியர்கள் தங்கள் மாணவியரிடம் மாதவிடாய் மற்றும் சிறுநீர் கழித்தல் குறித்து கேள்வி கேட்க முடியுமா?


பெண் ஆசிரியைகளால், மாணவர்களை பார்த்து சிறுநீர் கழித்தல் தொடர்பான கேள்விகளை கேட்க முடியுமா? பள்ளிக் கல்வித் துறையில் சில பக்குவமற்ற அதிகாரிகளால் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளும், நடவடிக்கைகளும் தான் இது போன்ற சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளதாக, ஆசிரியர்களும், மாணவ - மாணவியரும் குற்றம் சாட்டுகின்றனர்.








Post Top Ad