பட்டதாரி ஆசிரிய பணியிடங்களின் எண்ணிக்கை கணக்கிடும் முறையில் உள்ள பிரச்சினைகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, February 20, 2022

பட்டதாரி ஆசிரிய பணியிடங்களின் எண்ணிக்கை கணக்கிடும் முறையில் உள்ள பிரச்சினைகள்

 


அரசு உயர்நிலைப்பள்ளிகளில் (மாணவர் எண்ணிக்கை 150 க்கும் குறைவாக உள்ள பள்ளிகளில்) 6 முதல் 10 வகுப்புகளுக்கு மொத்தம் ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டு மீதமுள்ள ஆசிரியர்கள் அனைவரும் உபரி ஆசிரியர்களாக கருதப்பட்டு பட்டியல் ஆங்காங்கே வெளியிடப்பட்டு வருகிறது.


     ஐந்து வகுப்புகளுக்கு வாரம் 200 பாடப்பிரிவேளைகள் (5×40=200)  உள்ள நிலையில், ஐந்து ஆசிரியர்கள் சேர்ந்து 140 பாடப்பிரிவேளைகளை (5×28=140) மட்டுமே கையாள முடியும் என்பதுதான் அரசு விதி.


     ஐந்து ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டால் ஒவ்வொரு ஆசிரியரும் மொத்தமுள்ள 40 பாடவேளைகளும்(Periods) பணி செய்து கொண்டே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஓர் ஆசிரியர் மற்றும் ஈராசிரியர் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளைப் போல உயர்நிலைப் பள்ளிகளை நடத்த இயலாது என்பது அனைவருக்கும் தெரியும்.மேலும்,ஆசிரியர் உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பு எடுத்தாலோ, அரசால் நடத்தப்படும் பயிற்சிகளுக்கு சென்று விட்டாலோ, அந்த நாளில் அப்பள்ளி மாணவர்களின் நிலை என்னவாகும்.?


     35 பேர் இருந்தால்தான் ஒரு வகுப்பறை (குறைந்தபட்சம் 18 ஆவது இருக்க வேண்டும்) என கணக்கீடு செய்து ஆசிரியர் பணி  இடங்கள் ஒதுக்கீடு செய்யும் முறையினை, கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள  உயர்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்தினால், ஒவ்வொரு வகுப்பிலும் 18 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கை இருக்கும் பட்சத்தில் அந்த மாணவர்களை, அந்த குறிப்பிட்ட வகுப்பை என்ன செய்வது?. கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றத்திற்காக, பல நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. தற்போது அந்த நல்ல நோக்கமே கேள்விக்குறியாகி உள்ளது.


    இதுபோன்ற சூழல் அப்பள்ளிக்கும் பள்ளி மாணவர்களுக்கும் நன்மை பயக்காது என்பது யதார்த்தம்.


   ஆகவே,மேல்நிலைப் பள்ளிகளுக்கு  பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளதைப்போல,  உயர்நிலைப்பள்ளிகளிலும் பாடவேளை அடிப்படையில் (மாணவர் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல்) கணக்கீடு செய்து 28 பாட வேளைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற விதியின் அடிப்படையில் ஆசிரியப் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். மாணவர்களின் கற்றல்-கற்பித்தல் மேம்பட, குறைந்தபட்சம் ஏழு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்(196 பாடவேளைகள்) அல்லது அதிக பட்சம் எட்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (224 பாடவேளைகள் ) ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அப்போதுதான்,எந்த நோக்கத்திற்காக இந்தப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டனவோ,அந்த நோக்கம் நிறைவேறும்.








Post Top Ad