பள்ளி கட்டடங்கள் - அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அதிரடி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 19, 2021

பள்ளி கட்டடங்கள் - அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அதிரடி

 




தமிழகம் முழுதும் மோசமான நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்களை இடிக்கும்நடவடிக்கைகளை அரசு துவக்கியுள்ளது. இதற்கான பணியில், அனைத்து மாவட்டகலெக்டர்களும் அதிரடியாக ஈடுபட்டுள்ளனர். மேலும், பள்ளிக் கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


திருநெல்வேலியில் பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில், மூன்று மாணவர்கள் பரிதாபமாக இறந்தது, தமிழகம் முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.



பராமரிப்புப்பணி


இந்த சம்பவத்தை தொடர்ந்து, மாநிலம் முழுதும், பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்ட டங்களை கண்டறிந்து, அவற்றை அப்புறப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அனுப்பிய கடிதம்:கடந்த இரண்டு மாதங்களாக தகுதியற்ற நிலையில் உள்ள கட்டடங்கள், அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் படிப்படியாக இடிக்கப்படுகின்றன.



250 கோடி ரூபாய்


பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் வழியாக, 250 கோடி ரூபாய் செலவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க வசதியாக, ஊரக வளர்ச்சி, வருவாய், பொதுப்பணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் அடங்கிய குழுவை அமைத்து, தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


இக்குழுவை வைத்து, அனைத்து பள்ளிகளிலும் உள்ள, அனைத்து கட்டடங்களின் உறுதித் தன்மையை சரி பார்க்கவும். ஆபத்தான கட்டடங்களை இடிப்பதால், வகுப்புகளை நடத்த கூடுதலாக இடம் தேவைப்பட்டால், அருகில் வாடகை கட்டடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். இப்பணிகளை ஒருங்கிணைத்து, கலெக்டர்களுக்கு உதவ, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள, பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மோசமான நிலை


இதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும், கலெக்டர்கள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு, மோசமான நிலையில் உள்ள கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டு வருகின்றனர்.* தஞ்சாவூர் மாவட்டத்தில், 1,273 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் உள்ளன. இதில், 96 கட்டடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக, அதிகாரிகள் குழு கணக்கெடுத்துள்ளது. அவற்றை ஒரு வாரத்துக்குள் இடித்து அப்புறப்படுத்த, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்


* திருவாரூர் மாவட்டத்தில், 146; நாகை மாவட்டத்தில், 48 அரசுப் பள்ளி கட்டிடங்கள், 2 அங்கன்வாடி மையங்கள்; மயிலாடுதுறையில் 46 அரசு பள்ளிக் கட்டடங்கள் மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது


* திருச்சி மாவட்டத்தில், 205 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிக் கட்டடங்கள்; 85 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கட்டடங்கள் இடிக்க வேண்டி உள்ளது. அவற்றை, வரும் 20ம் தேதி இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 'தனியார் பள்ளிகளில் உள்ள பழமையான கட்டிடங்களை இடிக்க, நோட்டீஸ் கொடுக்குமாறு, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளன' என, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராஜு தெரிவித்தார்


* புதுக்கோட்டை மாவட்டத்தில், 328 பள்ளி கட்டடங்கள் பழுதடைந்துள்ளன. முதல்கட்டமாக, 100 பள்ளிக் கட்டடங்களை இடிக்க, மாவட்ட கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டுள்ளார்


* மதுரை மாவட்டத்தில், 200 தரமற்ற பள்ளி கட்டடங்களை இடிக்க, கலெக்டர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்


* சென்னையில் உள்ள பள்ளி கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து, 22ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி, 1,447 பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது. அறிக்கை கிடைத்த பின், தரமற்ற கட்டடங்கள் இடிக்கப்படும் என, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோல, மாநிலம் முழுதும் மோசமான நிலையில் உள்ள கட்டடங்களை, இடித்து அப்புறப் படுத்தும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதுவும் பெயரளவில் நடக்காமல், முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.


விருதுநகரில் 'சீல்'


விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் எம்.ஜி. ஆர்., காலனியில் உள்ள அன்னை இல்லம், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் நடந்த ஆய்வில், சேதமடைந்த கட்டடத்தில் மாணவர்கள் படிப்பது தெரிந்தது.பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு, சிவகாசி சப் கலெக்டர் பிருதிவிராஜ், தாசில்தார் ராஜகுமார் ஆகியோர், அந்த கட்டடத்திற்கு 'சீல்' வைத்தனர்; வேறு கட்டடத்தில் பள்ளியை நடத்தும்படி, பள்ளி நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தினர்.



கண்காணிப்பு அலுவலர்கள் யார் யார்?


பள்ளிக் கல்வித்துறை சார்பில், பள்ளிக் கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் விபரம்:

* சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உமா; காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு நரேஷ்; வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துாருக்கு சசிகலா; திருநெல்வேலி, தென்காசிக்கு செல்வராஜ்; கிருஷ்ணகிரி, தர்மபுரிக்கு சுகன்யா; திருவண்ணாமலை, விழுப்புரத்துக்கு ஸ்ரீதேவி; சேலம், கள்ளக்குறிச்சிக்கு அமுதவல்லி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்


* கடலுார், நாகப்பட்டினம், மயிலாடுதுறைக்கு பாஸ்கரசேதுபதி; அரியலுார், பெரம்பலுாருக்கு செல்வகுமார்; திருச்சி, கரூருக்கு பொன்னையா; நாமக்கல், ஈரோடுக்கு வை.குமார்; நீலகிரி, கோவைக்கு பொ.குமார்; திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு ராஜேந்திரனும் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்


* துாத்துக்குடி மாவட்டத்துக்கு ஆனந்தி; புதுக்கோட்டை, சிவகங்கைக்கு வாசு; மதுரை, ராமநாதபுரத்திற்கு கோபிதாஸ்; திருப்பூர், திண்டுக்கல்லுக்கு ஜெயகுமார்; கன்னியாகுமரிக்கு ராமசாமி; விருதுநகர், தேனிக்கு சாந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



Post Top Ad