பாலியல் தொல்லை - கடிதம் எழுதி வைத்துவிட்டு பிளஸ் 1 மாணவி தற்கொலை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 19, 2021

பாலியல் தொல்லை - கடிதம் எழுதி வைத்துவிட்டு பிளஸ் 1 மாணவி தற்கொலை

 


பாலியல் தொல்லை கடிதம் எழுதி வைத்துவிட்டு பிளஸ் 1 மாணவி தற்கொலை


பள்ளி பாதுகாப்பானது இல்லை. பெண்களுக்கு மரியாதை கொடுங்கள் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு மாணவி தற்கொலை செய்துகொண்டார். சென்னை மாங்காடு, சக்தி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இந்தியன் வங்கியில் பணிபுரிகிறார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு வரலட்சுமி (20), கலையரசி (எ) நந்தினி (17) என 2 மகள்கள் உள்ளனர். வரலட்சுமி, அதேபகுதி தனியார் கல்லூரியில் நர்சிங் படிக்கிறார். நந்தினி, பூந்தமல்லி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் பன்னீர்செல்வம் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி கீதா மற்றும் மகள் நந்தினி மட்டும் இருந்தனர்.


சிறிதுநேரத்தில் தாய் கீதா, அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுவிட்டார், மீண்டும் வீட்டிற்கு வந்தபோது நந்தினி ஒரு அறைக்குள் இருந்தார். வெகுநேரமாகியும் நந்தினி அறைக்குள் இருந்து வெளியில் வராததால் சந்தேகமடைந்த அவரது தாய் கீதா, கதவை தட்டினார். அப்போதும் சத்தம் இல்லாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு நந்தினி தூக்கிட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த மாங்காடு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 


நந்தினி தங்கியிருந்த அறையை போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். ஆங்கிலத்தில் கைப்பட நந்தினி எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று சிக்கியது. அதில் யாரையும் நம்பக்கூடாது என்று உருக்கமாக எழுதி இருந்ததுடன் இதற்கு மேல் முடியவில்லை மனது மிகவும் வலிக்கிறது. பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை. எனக்கு ஆறுதல் சொல்லக்கூட யாரும் இல்லை. என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. அந்த கனவு அடிக்கடி வந்து என்னை டார்ச்சர் செய்கிறது. என்னால் நிம்மதியாக படிக்க முடியவில்லை. என்னுடைய கனவுகள் கலைந்துவிட்டது. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளிடமும் மகன்களிடமும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும்படி கற்பிக்கவும்.


எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். எந்த ஒரு உறவினரையும் ஆசிரியரையும் யாரையும் நம்பவேண்டாம். அம்மா நான் போய்ட்டு வாரேன், இன்னொரு உலகத்துக்கு. பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறையும் தான். பள்ளி எப்போதும் பாதுகாப்பானது இல்லை. எனக்கு நீதி வேண்டும் என எழுதப்பட்டிருந்தது. நந்தினியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது யார் என்பது தெரியவில்லை. அவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது உடல்கூறு ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என போலீசார் கூறினர்.



Post Top Ad