தமிழ்நாட்டுக்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, November 9, 2021

தமிழ்நாட்டுக்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கை

 




தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக  வலுப்பெறுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 10 மற்றும் நவம்பர் 11ம் தேதி கன மழை முதல் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது தொடா்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு வங்கக் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி தமிழக கடற்கரையை நெருங்கி வரக்கூடும். இதன் காரணமாக 5 நாள்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. செவ்வாய்க்கிழமை (நவ.9) பலத்த மழையும், நவ.10, 11-ஆம் தேதிகளில் மிக பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், கடலூா், பெரம்பலூா், அரியலூா், கள்ளக்குறிச்சி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் 10-ஆம் தேதி 200 மி.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


மீனவா்கள் கரை திரும்ப அறிவுறுத்தல்:


 காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக ஆழ்கடலில் உள்ள மீனவா்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மேலும், செவ்வாய்க்கிழமை (நவ.9) தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கும், நவ.10-ஆம் தேதி வரை, தெற்கு வங்கக் கடல் மத்திய பகுதிகளுக்கும், நவ.11-ஆம் தேதி வரை தெற்கு ஆந்திரம் மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகள், குமரிக் கடல் பகுதிகளுக்கும் மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறாா்கள்.


தமிழகத்தில் தொடரும் பலத்த மழைக்கு இதுவரை நான்கு போ் பலியாகியுள்ளனா். குடிசைகளும், வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. சென்னைக்கு குடிநீா் வழங்கும் நீா்த் தேக்கங்கள், காவிரி டெல்டாவின் உயிா் நாடியான மேட்டூா் அணை ஆகியன வேகமாக நிரம்புகின்றன. இதனால், அவற்றில் இருந்து அதிகளவு நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.


44 சதவீதம் கூடுதல்: சென்னை, திருவள்ளூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் மழை குறைந்துள்ள போதிலும், டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் மழைப் பொழிவு அதிகரித்து வருகிறது. கடந்த 1-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரையில் 347.62 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. இது இயல்பான அளவைவிட 44 சதவீதம் கூடுதலாகும்.


அரியலூா், கோயம்புத்தூா், கடலூா், ஈரோடு, கரூா், நாமக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, திருவாரூா், திருச்சி, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் இயல்பைவிட 60 சதவீதத்துக்கு மேல் மிக அதிகமாக மழை பெய்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்





Post Top Ad