வரும் 26ம் தேதி மீண்டும் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, November 22, 2021

வரும் 26ம் தேதி மீண்டும் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

 




தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சுமார் 3 கிமீ உயரம் வரை நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, தமிழக கடலோரப் பகுதி வரை நீடிப்பதால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் 9 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பின்னர் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும்.  தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்து வந்த நிலையில் கடந்த 18ம் தேதிக்கு பிறகு படிப்படியாக மழை குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும் கடந்த 18ம் தேதி வட தமிழக மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதியில் பலத்த மழை பெய்த காரணத்தால், திருவள்ளூர் பகுதியில் வரும் கொற்றலை ஆறு, வேலூர் வழியாக பாய்ந்தோடி வரும் பாலாறு, விழுப்புரம் மாவட்டத்தில் வரும் தென் பெண்ணை மற்றும் இந்த ஆறுகளின் துணை ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.



அதேபோல தமிழகத்தின் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிந்து எங்கும் மழை வெள்ளமாக காட்சி அளிக்கிறது. இந்த மழையின் வெள்ளப் பெருக்கால் பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும்  போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், சில ஊர்கள் தனித் தீவுகளாக தனிமைப்பட்டுள்ளன.  இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சுமார் 3 கிமீ உயரம் வரை வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இது தமிழக கடலோரப் பகுதிவரை நீடிப்பதால், தமிழகத்தில் நேற்றும் மழை பெய்தது. குறிப்பாக திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் மழை பெய்தது.


இதன் தொடர்ச்சியாக இன்றும், கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். இதற்கிடையே, அந்தமான் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலையாக 23ம் தேதி வலுப்பெறும். அது தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வரும். இதன் காரணமாக சேலம் மாவட்டம், சங்ககிரி, ஓமலூர், மேட்டூர், ஈரோடு, தலைவாசல், சங்கராபுரம், கல்வராயன் மலை, மற்றும் டெல்டா பகுதியிலும், தஞ்சாவூர் முதல் பாபநாசம் வரையும், நாமக்கல், கொல்லி மலை, தேன்கனிக்கோட்டை, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் மழை பெய்யும். பின்னர் வட கிழக்கு பகுதியில் இருந்து வீசும் காற்றின் காரணமாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்யும். 24 மற்றும் 25ம் தேதிகளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யத் தொடங்கும். 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும்.



 குறிப்பாக ஒரு நாளைக்கு 5 அல்லது 10 மாவட்டங்கள் என கனமழை கொட்டித் தீர்க்கும். அதே நேரத்தில் வட தமிழகம், தெற்கு  ஆந்திராவில் சித்தூர், நெல்லூர், ஓங்கோல், பகுதிகளில்  மீண்டும் மழை பெய்யும்.  வட தமிழகத்தில்  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப் பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். அனைத்து மாவட்டங்களிலும் 30ம் தேதி வரை மீண்டும் மழை பெய்யும்.


Post Top Ad