ஆசிரியர்கள், அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டிய சொத்து , கடன் விவரம் & படிவம் - FORM- PDF - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, October 30, 2021

ஆசிரியர்கள், அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டிய சொத்து , கடன் விவரம் & படிவம் - FORM- PDF

 


மிக நீண்ட பதிவு... ஆனால் அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை...




தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973


பரிசில்கள் (Gifts)



இவ்விதிகளில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டாலன்றி, அரசின் முன் ஒப்பளிப்பு இல்லாமல் அரசுப்பணியாளர் எவரும் ரூ.5000/-க்கு மேற்பட்ட விலைமதிப்புள்ள எந்தப் பரிசையும் எவரிடமிருந்தேனும் பெற்றுக்கொள்வதோ அல்லது தன்னுடைய வாழ்க்கை துணைவர் அல்லது தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்த பிற உறுப்பினர் எவரும் பெற்றுக் கொள்ள அனுமதிப்பதோ கூடாது.(G.O.Ms.No.6, P&AR (A) Department, dated.21.01.2008)


இருப்பினும் திருமணம், ஆண்டு நிறைவு விழா, ஈமச்சடங்கு மற்றும் சமய விழாக்கள் போன்ற சிறப்பு நேர்வுகளில் பரிசுகளைக் கொடுப்பதோ அல்லது பெறுவதோ நடப்பிலுள்ள மதம் மற்றம் சமூக வழக்கங்களை ஒட்டியதாக இருப்பின் ரூ.5000/-க்கு மேற்படாத விலை மதிப்புள்ள பரிசுகளைத் தன்னுடைய உற்ற நண்பரிடமிருந்து அல்லது நெருங்கிய உறவினரிடமிருந்து அரசு அலுவலர் பெறலாம் மற்றும் அப்பரிசினைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து ஒரு திங்களுக்குள் அரசுப்பணியாளர் அது குறித்த விவரத்தினை அரசுக்கு அனுப்ப வேண்டும்.


(அரசாணை (நிலை) எண்.225 ப(ம)நி.சீ(எ) துறை, நாள். 11.9.1998)


மேலும் வரம்புரையாக தொகுதி B, C, & D அரசு அலுவலர்களைப் பொறுத்து, துணைத்தலைவர்களின் முன் அனுமதியுடன் வெளிநாடு செல்லும் போதெல்லாம், தங்களின் தனிப்பட்ட நண்பர்கள் அல்லது அவர்தம் நெருங்கிய உறவினர்களிடமிருந்து பயணம், தங்கல் மற்றும் பிற தொடர்பான செலவுகளைப் பரிசில்களாகப் பெறுவதற்கு இவ்விதியில் உள்ளது எதுவும் பொருந்தாது.


(G.O.Ms.No.76, P&AR (A) Department, dated: 20.3.07.)


விளக்கம்:1


இந்த துணை விதியின் பயன் நோக்கில் அடிக்கல் நாட்டுதல் அல்லது ஒரு பொதுக்கட்டட திறப்புவிழா அல்லது ஏதேனும் விழா நிகழ்ச்சிகளில் அரசுப் பணியாளர் ஒருவருக்கு அளிக்கப்படும் ஏதேனும் கொத்துக் கரண்டி, சாவி அல்லது அது போன்ற பொருட்கள் பரிசிலாகக் கருதப்படும்.



விளக்கம் : 2


அரசு பணியாளரிடத்தில் எத்தகைய அலுவல் முறைத் தொடர்பும் அற்ற நெருங்கிய உறவினர் அல்லது உற்ற நண்பர் அல்லாத வேறு யாரேனும் ஒருவரால் இலவசப் போக்குவரத்து, இலவச உணவு, இலவச உறையுள் அல்லது பிற வசதிகள் அல்லது வேறு ஏதேனும் பணத்தொடர்பான பலன்கள் அளிக்கப்படும்போது அவை பரிசில் என்பதில் அடங்குவனவாகும்.


குறிப்பு: 1- தற்செயலாக அளிக்கப்படும் உணவு, போக்குவரத்து வசதி மற்றும் பிற சமூக விருந்தோம்பல் பரிசிலாகக் கருதப்படமாட்டாது.


குறிப்பு: 2– அரசு பணியாளர் ஒருவர் தன்னோடு அலுவல் முறையில் தொடர்பு கொண்டுள்ள எவரேனும் ஒரு தனிப்பட்டவரிடமிருந்து அல்லது தொழில் அல்லது வணிக நிறுவனங்கள், அமைப்புகள் போன்றவற்றிலிருந்து மட்டுமீறிய விருந்தோம்பல் அல்லது அடிக்கடி நிகழ்வுறும் விருந்தோம்பலை ஏற்றுக் கொள்ளுதலைத் தவிர்க்க வேண்டும்.


எந்த ஒரு பரிசில் குறித்தும் அரசு அனுமதியின்றி ஏற்றுக் கொள்ளபடக்கூடியதா எனக் கேள்வியொன்று எழுமானால் அல்லது தனக்கு அளிக்கப்படவிருக்கும் பரிசிலானது அரசு அனுமதி இல்லாமல் ஏற்று கொள்ளப்படகூடியதா என அரசு பணியாளர் ஐயம் கொண்டால் அது குறித்து அத்தகைய அரசுப் பணியாளரால் அரசுக்கு எழுதப்பட வேண்டும். மேலும் அதன் மீது எடுக்கப்படும் அரசின் முடிவே இறுதியானதாகும்.


தனக்குப் பரிசிலாக அளிக்கக் கருதப்படாத ஒர் உருவப்படம் மார்பளவு உருவச்சிலை, அல்லது சிலைக்காகவேண்டி ஏதேனும் ஒரு பொது அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க அரசு பணியாளர் எவரேனும் ஒரு மாதிரியாக அமர்வதை இவ்விதியில் உள்ள எதுவும் தடுப்பதாகக் கருதப்படக்கூடாது.


அரசு பணியாளரிடம் ஆதரவு மனப்பான்மையையும், ஆதாய நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதாகக் கருதக்கூடிய அல்லது தனிநபருக்கு அல்லது நிறுவனம் அல்லது நிறுமத்திற்கு கடப்பாடு காரணமாக சலுகை காட்ட வேண்டிய நிலையை ஏற்படுத்தக்கூடிய அல்லது வெளிப்படையாக தெரியாத ஆனாலும் ஊழல் என கருதக்கூடிய நிலையினைத் தோற்றுவிக்கும் வகையில் விலை உயர்ந்த பழைய ஊர்தி, அறைகலன் (furniture) மற்றும் வீட்டுக்கு தேவைப்படும் மின்கருவிகைளச் சலுகை விலையில் வாங்கவதற்காக அரசுப் பணியாளர் எவரும் வணிகம் அல்லது தொழிலில் ஈடுப்பட்டுள்ள எந்த ஒரு தனி நபருடன் அல்லது நிறுவனத்துடன் அல்லது நிறுமத்துடன் வணிக நடவடிக்கை எதையும் வைத்தக் கொள்ளக்கூடாது.


துணை விதிகள் (2), (3) மற்றும் (4)-ல் உள்ளவை எப்படியிருந்தபோதிலும் இந்திய பேராளர் குழுவில்(Indian delegation) உறுப்பினராகவோ வேறு வகையிலோ உள்ள அரசுப்பணியாளர் ஒருவர், ஒரு சிறப்பு நிகழ்ச்சியின்போது ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாத விலைமதிப்புள்ள பரிசிலை அயல்நாட்டிலுள்ள உயர் பதவியாளரிடமிருந்து பெற்றுத் தம்மிடம் வைத்துக் கொள்ளலாம். மற்ற அனைத்து நேர்வுகளிலும் இப்பரிசல்களைப் பெற்றுக் கொள்ளலாம். வைத்து கொள்ளுதலும் குறித்து இது தொடர்பில் அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் அறிவுறுத்தங்களால் முறைப்படுத்தப்படும்.


அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள அல்லது அரசுப்பணியாளர் ஒருவருடன் அலுவலர்முறை நடவடிக்கைகளைக் கொண்டிருந்த அல்லது கொண்டுள்ள அல்லது கொள்ளவாய்ப்புள்ள எந்தவொரு அயல்நாட்டு நிறுவனத்திடமிருந்தும் பரிசில் எதனையும் அரசுப்பணியாளர் பெற்றுக் கொள்ளக்கூடாது. மற்ற எந்த நிறுவனத்திலிருந்தேனும் அரசுப்பணியாளர் ஒருவர் பரிசில்களைப் பெற்றக் கொள்வது துணை விதி (4) -இல் உள்ள காப்புரைகளுக்குட்டதாய் இருத்தல் வேண்டும்.



விளக்கம்: பழைய பொருள்களுக்குரிய இயல்பான அல்லது நடப்பிலுள்ள அங்காடி விலையில் அப்பழைய பொருள்களை எவரிடமிருந்து அல்லது எந்தவொரு நிறுவனம் அல்லது நிறுமத்திடமிருந்தும் விலைக்கு வாங்கிக் கொள்ளும் வணிக நடவடிக்கைகளில் அரசுப் பணியாளர் ஈடுபடுவதை இத்துணை விதியிலுள்ள எதுவும் தடை செய்யாது.


(G.O.Ms.No.427, P&AR dated 13.12.93.)


வரதட்சணை (Dowry)

(1) அரசுப்பணியாளர் எவரும் வரதட்சணை கொடுக்கவோ, வாங்கவோ, வரதட்சணை வாங்க அல்லது கொடுக்க உடந்தையாகவோ இருத்தல் கூடாது அல்லது


நேர்வுக்கேற்ப மணமகள் அல்லது மணமகன் ஒருவரது பெற்றோர் அல்லது காப்பாளரிடமிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பரிசம்/ வரதட்சணை கோரக்கூடாது.


விளக்கம்:- இவ்விதியின் பயன் நோக்கில் வரதட்சணை என்பது 1961-ஆம் ஆண்டைய வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் (1961-ன் மையச் சட்டம் 28/1961) எவ்வாறு பொருள் கொள்ளப்பட்டுள்ளதோ அவ்வாறே பொருள் உடையது.


(2) அரசு ஊழியர் ஒவ்வொருவரும் அவரது திருமணத்திற்குப் பின்னர் (அ) அவரது குழந்தைகளின் திருமணத்தின் போது விளம்புகை ஒன்றினை துறைத் தலைவருக்கு அளித்திடல் வேண்டும். அரசு அலுவலர் திருமணம் செய்து கொள்கிறவிடத்து, அரசு அலுவலரின் கணவன் (அ) மனைவி நேர்வுக்கேற்ப மற்றும் பெற்றோர் (அ) காப்பாளர் கையொப்பமிடுதல் வேண்டும். அரசு அலுவலரின் மகன் (அ) மகள் திருமணம் செய்த கொள்கிறவிடத்து, திருமணத்திற்காக தரப்பினர் இருவரும் மற்றும் அவர்களின் பெற்றோர் (அ) காப்பாளர் அதில் அரசு அலுவலரும் உட்பட விளம்புகையில் கையொப்பமிடுதல் வேண்டும்.


அரசு பணியாளருக்குப் பொதுமக்கள் சிறப்பு செய்தல் (Public demonstrations in honour of Government servants)


அரசு பணியாளர் எவரும் அரசின் முன் அனுமதியின்றி பாராட்டுரை, பணி நிறைவு வாழ்த்துரை அல்லது பாராட்டு பட்டயச் சான்றிதழ் எதனையும் ஏற்றுக் கொள்வதோ அல்லது தன்னையோ மற்ற அரசு பணியாளரையோ சிறப்பிக்கும் முறையில் நடைபெறும் கூட்டத்தில் அல்லது கேளிக்கையில் கலந்து கொள்வதோ கூடாது.


இருப்பினும், இந்த விதியில் உள்ள எதுவும் கீழ்க் காண்பவற்றுக்குப் பொருந்தாது:-


அரசுப்பணியாளர் ஒருவர் பணி ஓய்வு அல்லது பணியிட மாறுதல் பெறுகிற நேர்வில் அல்லது அண்மையில் அரசுப்பணியிலிருந்து விலகியிருக்கிற நேர்வில் அவரைச் சிறப்பிக்கும் வகையில் நடத்தப்படுகிற தனிப்பட்டதும் இயல்பானதும் ஆடம்பரமற்றதுமான விடை தருவிழா: அல்லது


பொது, அமைப்புகளால் அல்லது நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படுகின்ற எளிய, செலவற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க இசைதல், அல்லது


தான், பணியிடமாறுதல் அல்லது ஓய்வு பெற்றுச் செல்லுகின்ற காலத்தில் தன் அலுவலக அல்லது துறை அலுவலர்களடங்கிய குழு நிழற்படத்தில் இடம் பெறுதல் அல்லது அப்படத்தினை ஏற்றுக் கொள்ளுதல்.


நிதி திரட்டல் (Subscriptions)

அரசுப் பணியாளர் எவரும், அரசு அல்லது இதன் பொருட்டு அரசால் அதிகாரம் அளிக்கப்பெற்ற அத்தகைய அதிகாரியின் முன் ஒப்பளிப்பு இல்லாமல் நன்கொடைகள் கேட்பதோ அல்லது ஏற்றுக் கொள்வதோ அல்லது நோக்கம் எத்தகையதாயிருப்பினும் அதன் பொருட்டுப் பணமாக அல்லது பொருளாகத் திரட்டவோ அல்லது பிறவகையில் அது தொடர்பாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவோ கூடாது.



இருந்தபோதிலும் ஒரு பணியாளர் சங்கம் அரசின் முன் ஒப்பளிப்புக்காக விண்ணப்பம் செய்யும்போதே அச்சங்கத்திற்கு அத்தகைய ஒப்பளிப்பு அளிக்கப்பட்டால் நிதி திரட்டும் நபர் அல்லது நபர்களை குறிப்பிட்டு தெரிவித்தல் வேண்டும்.


உரிய நிறுவனத்திற்கு மானியங்களை மூலமாகவோ அல்லது பிற வகையிலோ அரசு உதவியளிக்கும் அனைத்து நேர்வுகளிலும் தக்க ஆய்விற்குப் பிறகு அரசால் அனுமதி வழங்கப்படலாம்.


கொடிநாள் நிதி திரட்டலில் அரசுப் பணியாளர்கள் தாமாகவே மனமுவந்து பங்கு கொள்ளலாம்.


அரசின் அத்தகைய முன் ஒப்பளிப்பு இன்றி இந்துசமய அறக்கட்டளை ஆட்சித்துறையின் செயல் அலுவலர் ஒருவர் கோயிலை புதுப்பிக்கும் குழு ஒன்றின் சார்பில் அக்கோயிலின் செயல் அலுவலர் என்ற முறையில் நிதி திரட்டலாம். மேலும் அதனைத் தன் பொறுப்பிலே வைத்துக் கொள்ளலாம். இதன் பொருட்டு தனக்கு மதிப்பூதியம் ஏதேனும் தர முன் வந்தால் அதனையும் அவர் ஏற்றுக் கொள்ளலாம்.


முதலீடுகள் மற்றும் கடன் கொடுக்கல், வாங்கல் (Investments, lending and borrowing)


(1) எந்த அரசுப் பணியாளரும் ஏதேனும் கடன் மூலப்பத்திரம், பங்கு முதல் அல்லது பிற முதலீட்டில் ஊக வணிக நோக்குடன் ஈடுபடுதல் கூடாது.


விளக்கம்:- பங்கு முதல்கள், பிணையங்கள் அல்லது பிற முதலீடுகளை வழக்கமாக வாங்குதல் அல்லது விற்றல் அல்லது இரண்டையும் மேற்கொள்ளுதலானது இந்த விதியின் பொருளுக்கிணங்க ஊக வணிகத்தில் ஈடுபடுவதாகவே கருதப்படும்.


(2) எந்த அரசுப் பணியாளரும் தனது அலுவல்முறைக் கடமைகளை நிறைவேற்றுவதில் தனக்கு இக்கட்டான நிலைமையை ஏற்படுத்தும் வகையில் அல்லது செல்வாக்குக் கொள்ளத்தக்க வகையில் அமைகின்ற எத்தகைய முதலீட்டையும் செய்யவோ அல்லது தம் குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவரால் அல்லது தம் சார்பில் செயல்படும் யாரேனும் ஒருவரால் முதலீடு செய்யப்படுவதற்கோ அனுமதிக்கக்கூடாது.


(3) ஏதேனும் ஒரு நடவடிக்கையானது உள் விதி (1) அல்லது உள்விதி (2)-ல் குறிப்பிடப்பட்டுள்ளவற்றுக்கு இயல்புடையதாக உள்ளதா என்பது பற்றி கேள்வி ஏதேனும் எழுமானால், அது பற்றிய அரசின் முடிவே இறுதியானதாகும்.


(4) அரசுப் பணியாளர் எவரும் வங்கித் தொழில் நடத்துவதற்கு உரியவாறு ஏற்பளிக்கப்பெற்ற ஒரு வங்கியில் அல்லது ஒர நிறுவனத்தில் அல்லது அரசின் வரையறுக்கப்பட்ட நிறுமத்தில் நடைமுறையில் வங்கி நடவடிக்கைகளை கொண்டிருப்பதல்லாமல் தானாக அல்லது தன் குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் மூலமாக அல்லது தன் சார்பிலே செயல்படும் வேறொருவர் மூலமாக கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது.


(i) தனது தல அதிகார எல்லைக்குள் அமைந்த எவரேனும் ஒருவருக்கு அல்லது ஒருவரிடமிருந்து அல்லது அலுவல்முறை செயல்பாடுகளைக் கொண்டுள்ள ஒருவரிடம் முதன்மையாளர் அல்லது முகவர் என்ற முறையில் பணம் கொடுக்கல் அல்லது வாங்கல் அல்லது வேறு வகையில்: அத்தகையவரிடம் பயன்நோக்கிலான ஏதேனும் கடப்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளல் அல்லது


(ii) யாரேனும் ஒருவருக்கு வட்டிக்குப் பணமாக அல்லது பொருளாகக் கொடுத்தல் அல்லது அவ்வாறு திரும்பப் பெறுதல்


மேலும் வரம்புரையாக, அரசு ஊழியர்கள் அதிகாரியின் முன் ஒப்பளிப்புடன் உறவினர் அல்லது தனிப்பட்ட நண்பர் ஒருவரிடமிருந்து அடுக்ககம் (அ) கட்டி முடிக்கப்பட்ட வீடு (அ) மனை (அ) வீடு கட்டுவதற்காக ரூ.3 லட்சத்திற்கு மேற்படாத தொகையினை வட்டியின்றி பெறலாம்.


மேலும் வரம்புரையாக இந்த துணை விதியில் கண்டுள்ளது எதுவும் அரசின் முன் ஒப்பளிப்புடன் அரசு ஊழியரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைப் பொறுத்து பொருந்தாது.



(அ.நி.எண்.39 ப.ம.நி.சீ (அ) துறை, நாள். 9.3.2010: அமல் 9.3.2010)


ஆயினும், அரசின் முன் அனுமதியுடன் அரசுப் பணியாளர் ஒருவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பானவற்றுக்கு இந்த உள் விதியிலமைந்த எதுவும் பொருந்தாது.


(அ) அரசுப் பணியாளர் எவரும் தாமோ, தன்னுடைய குடும்ப உறுப்பினர் அல்லது தன் பொருட்டுச் செயற்படுபவர் மூலமாகவோ, அரசின் முன் ஒப்பளிப்பு இல்லாமல்; அவரது மொத்த மாத தொகைக்கு மேற்பட்ட எந்தத் தொகையையும் தனிப்பட்ட எவருக்கும் கொடுக்கவோ அவரிடமிருந்து பெறவோ கூடாது.


(அரசு ஆணை நிலை எண். 225, ப.ம.நிசீ.துறை நாள்.11.9.1998)

(ஆ) பணியிடத்திற்கு நியமனம் அல்லது மாற்றம் செய்யப்படும் அரசுப்பணியாளர் அச்சூழ்நிலை குறித்து அரசுக்கு உடனடியாகத் தெரிவித்து, அதன் மீது அரசு பிறப்பிக்கும் ஆணைப்படி செயற்பட வேண்டும். ‘இ” அல்லது ‘ஈ” பிரிவைச் சார்ந்த அரசுப் பணியாளர் இந்த உள்விதியில் குறிப்பிடப்பட்டவாறு உரிய துறைத்தலைவருக்குத் தெரிவிக்க வேண்டும்.


(5) தமிழ்நாடு நீதித்துறை அலுவலகப் பணித் தொகுதியைச் சார்ந்த எவரும் மாவட்ட நீதிபதியின் எழுத்து மூலமான அனுமதியை பெறாமல் கீழ்க்காண்பவற்றை செய்தல் கூடாது:-


(i) ஏலம் விடத்தக்க ஏதேனும் உரிமைக் கோரிக்கையை அல்லது தீர்ப்பாணையைத் தன் பெயரில் மாற்றம் செய்து கொள்ளுதல் அல்லது


(ii) தனக்குத் தனிப்பட்ட முறையில் நேரடித் தொடர்பு இல்லாத ஏதேனும் வழக்கில் தன்னைத் தொடர்புப்படுத்தி கொள்ளல்.


(6) கூட்டுறவு சங்கங்களை மேற்பார்வையிடுகின்ற அல்லது தணிக்கை செய்கின்ற அரசுப் பணியாளர்கள் நீங்கலாக மற்ற எல்லாவகை அரசுப்பணியாளர்களும் தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு வங்கி (வரையறுக்கப்பெற்றது) பிற மைய கூட்டுறவு வங்கி மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் உட்பட வேளாண் வங்கி அல்லாத கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாகி வைப்பீடுகள் செய்யலாம்.


(7) கூட்டுறவு சங்கங்களை மேற்பார்வையிடுகின்ற அல்லது தணிக்கை செய்கின்ற அரசுப் பணியாளர்கள் தங்கள் நலனுக்கெனத் தனியாக பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாகி வைப்பீடுகள் செய்யலாம்.


(ஆ) கூட்டுறவு சங்கங்களை மேற்பார்வையிடுகின்ற அல்லது தணிக்கை செய்கின்ற அரசுப்பணியாளர்கள் தமிழ்நாடு மாநிலக்கூட்டுறவு வங்கியில் (வரையறுக்கப்பெற்றது) அல்லது எந்தவொரு மைய கூட்டுறவு வங்கியிலும் அல்லது நகர்ப்புற கூட்டுறவு வங்கியிலும் வைப்பீடுகள் செய்து அந்நிறுவனங்களிலிருந்து பாதுகாப்பு அல்லது பிணையக் கடன்கள் பெறலாம். ஆனால் அவர்கள் அவ்வங்கிகளின் நேரடித் தணிக்கையில் அல்லது மேற்பார்வை பணியில் ஈடுபட்டிருக்கக் கூடாது.


(8) அரசு பணியாளர்கள் ஒவ்வொரு வகுப்பினரும் தமிழ்நாடு கூட்டுறவு மாநில மைய நிலவள வங்கி (வரையறுக்கப் பெற்றது) யில் வைப்பீடுகள் செய்யலாம் மற்றும் கடன் ஈட்டுறுதிப் பத்திரங்கள் வாங்கலாம். ஆனால் அந்த வங்கியல் எந்த பதவியையும் வகிக்கவோ அதன் மேலாண்மையில் எத்தகைய பங்கும் கொள்ளவோ கூடாது.


(9) அரசுப் பணியாளர், தன்னுடைய துறைத் தலைவரின் முன் ஒப்பளிப்புடன் நிலவள வங்கியில் அல்லது வேளாண் பணிக் கூட்டுறவு சங்கத்தில் (உழவர்கள் பணிக் கூட்டுறவு சங்கம், வேளாண் வங்கி மற்றும் ஊரக வங்கி உட்பட) அல்லது தொடக்கக் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உறுப்பினராகலாம். அருப்பினும் அவர் அவ்வங்கி/ சங்க எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏற்கனவே சொந்தமாக நிலம் பெற்றிருந்து, அவ்வங்கியால்/ சங்கத்தால் அளிக்கப்படும் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் விருப்பமுடையவராகவும், அதில் எப்பதவியும் வகிக்காதவராகவும், அதன் மேலாண்மையில் பங்கு கொள்ளாதவராகவும் இருக்க வேண்டும்.


இருப்பினும் அச்சங்கத்தில் / அவ்வங்கியில் நேரிடையாக தணிக்கை, நிருவாகம் அல்லது மேற்பார்வைப் பணியில் ஈடுபட்டுள்ள அரசுப் பணியாளருக்கு அத்தகைய ஒப்பளிப்பு ஏதும் வழங்கப்படமாட்டாது.


(10) கூட்டுறவு சங்கங்களை மேற்பார்வையிடுகின்ற அல்லது தணிக்கை செய்கின்ற அரசு பணியாளர், தாம் உறுப்பினராக உள்ள நிலவள வங்கி அல்லது வேளாண் பணிக்கூட்டுறவு சங்கம் (உழவாக்ள். பணிக் கூட்டுறவு சங்கம், கூட்டுறவு விற்பசைன் சங்கம் மற்றும் ஊரக வங்கி உட்பட) அல்லது தொடக்க கூட்டுறவு விற்பனை சங்க எல்லைக்குட்பட்ட பகுதியில் நியமிக்கப்பட்டிருப்பின் அல்லது மாற்றப்பட்டிருப்பின் அவர் அவ்விவரத்தினைத் தன்னுடைய உடனடி மேலலுவலருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். அம்மேலலுவலர் தமக்கு அதிகாரமிருப்பின் தொடர்புடைய அவ்வங்கி அல்லது சங்கத்தின் எல்லைக்கப்பாற்பட்ட பகுதிக்கு அந்த அரசுப் பணியாளரை மாற்ற வேண்டும். அவருக்கு அந்த அதிகாரமில்லையெனில் அந்த அதிகாரமுடைய அலுவலரின் ஆணைக்காக அதனை அனுப்ப வேண்டும்.


(11) கூட்டுறவுத் துறையில் பணிக்கமர்த்தப்பட்டவர்கள் உட்பட எல்லாவகை அரசுப் பணியாளர்களுக்கும் கூட்டுறவு வீடுகட்டும் சங்கங்களில் அல்லது வீடு அடைமானச் சங்கங்களில் அல்லது கூட்டுறவு வீட்டு வசதிச் சங்கங்களில் உறுப்பினர்களாகலாம்.


விளக்கம் :- மேலே குறிப்பிடப்பட்டுள்ள கூட்டுறவு வீடு கட்டும் சங்கங்கள் என்பவை தங்கள் உறுப்பினர்களுக்காக வீடு கட்டுவதையும், தங்கள் உறுப்பினர்களுக்கு அவர்கள் வீடு கட்டி கொள்ள கடன் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட எல்லாவகையான கூட்டுறவு சங்கங்களையும் உள்ளடக்கியனவாகும்.


(12) கூறு ((அ)-இன் உள் விதி (7)இல் உள்ள எதுவும் எவ்வாறிருந்தபோதும், கூட்டுறவு துறையில் பணியில் உள்ள அரசுப் பணியாளர் கூட்டுறவு பண்டசாலைச்சங்கத்தில் உறுப்பினராகலாம். அதன் பயனாக அவர் அச்சங்கத்திலிருந்து மளிகைப் பொருள்களையும், மற்ற பொருள்களையும் பெறலாம். ஆனால் அவர் அச்சங்கத்தில் எப்பதவியையும் வகிக்கவோ, அச்சங்க நடவடிக்கைகளை மேலாண்மை செய்ய நியமிக்கப்பட்ட எந்தவொரு குழுவிலும் பணியாற்றவோ தகுதியுடையவராவார்.



(13) இவ்விதியிலுள்ள எதுவும் எப்படியிருந்தபோதிலும், அரசுப் பணியாளர் தான் உறுப்பினராக உள்ள கூட்டுறவுச் சங்கத்திலிருந்து பணம் கடன் பெறலாம். ஆனால் அக்கடன் வாங்கல் என்பது ஆள் பிணையத்தின் அடிப்படையாக இருப்பின், அப்பிணையாளர், கடன் பெறுபவரின் தகுதிநிலைக்குச் சமமானவராக அல்லது மேற்பட்டவராக இருக்க வேண்டும்.



(14) பணம் கொடுக்கல், வாங்கல் மீதான தடையானது அளவுக்கு மீறிய குறைந்த வீதங்களில், அல்லது போதிய காரணங்களின்றி சலுகையில் அளிக்கப்படும் கடன்கள், கடன் பொறுப்பில் விற்பனை, முன்பணங்கள், பொருள்கள் வழங்கல் அல்லது குடியிருப்பு வசதியளித்தல் மற்றும் மிகவும் குறைந்த விலையில் சொத்துகளை விற்றல் ஆகியவற்றுக்கு பொருந்தும்.


(15) பணம் கடன் கொடுக்கும் அரசு பணியாளர் நிறைவேற்றுநராக நிருவாகியாக அல்லது பொறுப்பாட்சியராகத் தனக்கு ஆதாயமோ நன்மையோ இல்லாமாலிருக்கிறார் என்பது அவரை இவ்விதியின் செயற்பாட்டிலிருந்து விலக்குவதாகாது.


(16) பணம் கடன் கொடுக்கும் தொழிலை முன்னோர் தொழிலாக கொண்டுள்ள இந்த கூட்டுக் குடும்பமொன்றைச் சார்ந்த அரசு பணியாளர் ஒருவர் இத்தடையிலிருந்து விலக்களிக்கப்படுகின்றார். ஆனால் அவர் இந்தத் தொழிலில் முனைப்புடன் பங்கு கொள்ளாதவராகவும், தான் சார்ந்த இந்தக் கூட்டுக் குடும்பத்தினர் தொழில் நடத்துகின்ற மாவட்டத்தில் பணியாற்றாதவராகவும் இருத்தல் வேண்டும்.



(17) ஆசிரியர் பணியிலுள்ள அரசு பணியாளர் ஒருவர், மாணவரிடத்தில் அல்லது முன்னாள் மாணவரின் பெற்றோரிடத்தில் அல்லது காப்பாளரிடத்தில் அல்லது தான் பணிபுரியும் பள்ளி அல்லது கல்லூரியின் பணியாளரிடத்தில் அல்லது பணியாளர் அமைப்புடன் பணப்பயன் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து தடை செய்யப்படுகின்றார்.


அரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்


அரசுப் பணியாளர்கள் தங்களது பெயரிலோ, தங்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்குவது, விற்பனை செய்வது, மற்றும் காலிமனை வாங்கும் போது அதற்கு உண்டான நிதி ஆதாரங்களை சமர்பிப்பது போன்ற விதிமுறைகளை அரசுப் பணியாளர்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973 விதி எண் 7-ல் சொல்லப்பட்டதைப் பார்ப்போம்.


அசையும், அசையா மற்றும் விலை மதிப்புள்ள சொத்துக்கள் விதி (Movable, Immovable and Valuable Property)


(அ) அரசு பணியாளர் எவரும் தங்களுடைய பெயரிலோ, தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ, உரிய அலுவலருக்கு அறிவிக்காமல் குத்தகை அடைமானம் வாங்குதல் விற்பனை பரிசில் பரிமாற்றம் அல்லது பிற வழிகளில் இடம் பெயராச் சொத்து எதையும் பெறவோ தீர்வு செய்யவோ கூடாது.


அரசுப் பணியாளருடைய நிதி ஆதாரங்களிலிருந்து அவருடைய குடும்ப உறுப்பினர் எவராலும் பெறப்படும் ஏதேனுமொரு இடம் பெயராச் சொத்துக்கும் அத்தகையதொரு அறிவிப்பு தேவைப்படுவதாகும்.


மேலும், இந்நடவடிக்கையானது அரசு பணியாளருடனான அலுவல்முறைத் தொடர்பு கொண்டுள்ளவருடனான நடவடிக்கையெனில் உரிய அதிகாரியின் முன் ஒப்பளிப்புப் பெறப்பட வேண்டும்.


இருப்பினும், அரசால் அரசுப் பணியாளருக்கு வீட்டுமனை உரிமை மாற்றம் செய்யப்படும் நேர்வில் அந்த இடம்பெயராச் சொத்தினை பெற உரிய அதிகாரியின் முன் ஒப்பளிப்புத் தேவையில்லை.


விளக்கம்:- இடம்பெயராச் சொத்தானது தொடர்புடைய அரசுப் பணியாளருடைய நிதி ஆதாரங்களிலிருந்து பெறப்படாத நேர்வில், தன்னுடைய குடும்ப உறுப்பினர்களால் இடம் பெயராச் சொத்துகள் கையகப்படுத்தப்படுதற்கு அல்லது தீர்வு செய்யப்படுவதற்கு அந்த அரசுப் பணியாளர் உரிய அதிகாரிக்கு அறிவிக்கவோ உரிய அதிகாரியின் முன் அனுமதியைப் பெறவோ தேவையில்லை. [அரசாணை எண். 409 ப. 9(ம) நி.சீ.துறை நாள். 24.12.1992 (G.O.Ms.No.409, P&AR dated 24.12.92) இல் சேர்க்கப்பட்டது.]


(ஆ). ஒரு வீட்டைக் கட்டுவதற்கு அல்லது விரிவுப்படுத்துவதற்கு அல்லது உடைமையாக்கிக் கொள்வதற்கு அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் உரிய அதிகாரிக்கும் பின்வரும் முறையில் அறிவிக்க வேண்டும்.


அரசிடமிருந்து அல்லது மற்றவர்களிடமிருந்து கடன் அல்லது முன்பணம் அல்லது பொதுவைப்பு நிதியிலிருந்து பகுதி இறுதி பெறுகையைத் கொண்டு வீடு கட்டுவதற்கு அல்லது விரிவுபடுத்துவதற்கு அல்லது உடைமையாக்கிக் கொள்வதற்கான நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன் அவர் நேர்வுக்கேற்ப உரிய அதிகாரியின் முன் ஒப்பளிப்பினைப் பெற வேண்டும்.


கட்டுமானம் அல்லது விரிவாக்கம் முடிந்ததும், அவர் உரிய அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும்.


இயலுமிடத்து, இவ்விவரங்கள் அளிக்கப்பட வேண்டும். இருப்பினும், விவரங்களை அளிக்க இயலாதவிடத்து கட்டடம் எழுப்பப்பட்டுள்ள அல்லது எழுப்பக் கருதப்பட்டுள்ள பரப்பளவையும், கட்டடத்தின் மதிப்பீட்டுச் செலவு விவரத்தையும் அரசுப் பணியாளர் குறிப்பிட வேண்டும்.



(இ) கூட்டு நிதியிலிருந்து பிரிக்கப்படாத கூட்டுக் குடும்பச் சொத்துக்களின் பழுதுபார்ப்பு செலவில், இந்து கூட்டு குடும்ப உறுப்பினராகவுள்ள அரசுப் பணியாளரின் பங்கானது ரூ.50,000/-க்கு மிகையாகும் போது அப்பழுதுபார்ப்புகள் தன்னுடைய கவனத்திற்கு வரும்போதெல்லாம் அரசுப்பணியாளர் அவ்விவரத்தை உரிய அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். [அரசாணை எண். 39 ப. 9(ம) நி.சீ.துறை நாள். 9.3.2010 (G.O.Ms.No.39, P&AR dated 9.3.2010) இல் சேர்க்கப்பட்டது.]


(1) அரசுப் பணியாளர் எவரும் அரசு நிலங்களை அத்துமீறி கைப்பற்றக்கூடாது.


(2) A- தொகுதி அலுவலர்களைப் பொறுத்து ரூ.80,000, B-தொகுதி அலுவலர்களை பொறுத்த ரூ.60,000, C-தொகுதி அலுவலர்களைப் பொறுத்து ரூ.40,000 மற்றும் D-தொகுதி அலுவலர்களைப் பொறுத்து ரூ. 20,000 ரூபாய்க்கு மேற்பட்ட விலைமதிப்புள்ள இடம் பெயர் சொத்துத் தொடர்பான விற்றல் வாங்கல் நடவடிக்கையில் ஈடுபடும் அரசுப் பணியாளர் அத்தகு நடவடிக்கை ஒவ்வொன்றும் நடைபெற்ற நாளிலிருந்து ஒரு திங்களுக்குள் இது குறித்த விவரத்தை உரிய அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும்.


மேலும், அந்நடவடிக்கையானது அரசுப் பணியாளருடன் அலுவல்முறைத் தொடர்பு கொண்டுள்ளவருடனானது எனில் உரிய அதிகாரியின் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.


இருப்பினும், தன்னுடைய அலுவல் சார்ந்த அதிகாரியின் எல்லையிலிருந்து வெளியேறவுள்ள அரசுப் பணியாளர், உரிய அதிகாரிக்குத் தெரிவிக்காமல், தன்னுடைய இடம் பெயர் சொத்து எதையும் அவற்றின் பட்டியல்களைப் பொதுவான முறையில் பொதுமக்களிடையே சுற்றறிக்கை விடுவதன் மூலம் அல்லது பொது ஏலத்தில் விற்பனை செய்தவன் மூலம் தீர்வு செய்யலாம்.


விளக்கம் :-  1


இந்த உள் விதியின் நோக்கங்களுக்கான ‘இடம் பெயர் சொத்து” என்னும் சொற்றொடரானது பின்வரும் சொத்துகளை உள்ளடக்கியதாகும். அவையாவன:-


(அ) நகைகள், ஈட்டுறுதி ஆவணங்கள், பங்குகள், பிணையங்கள் மற்றும் கடனீட்டு ஆவணங்கள்.


(ஆ) சீருந்து, மிதி இயக்கிகள், குதிரைகள் அல்லது பிற வகை ஊர்திகள்



(இ) குளிர்பதனிகள், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் காணொலி பதிவுக் கருவிகள் (VCR)


(2) ஆ . உள்விதிகள் (1) மற்றும் (2)  ல்  குறிப்பிடப்பட்ட  ஒப்பளிப்பு / அனுமதி வேண்டி அரசுப் பணியாளரிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பத்தினை உரிய அதிகாரியானவர், அவ்விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து ஆறு மாத கால அளவுக்குள் தீர்வு செய்ய வேண்டும். விளக்கங்கள் அல்லது விவரங்கள் எவையேனும் அரசுப் பணியாளரிடம் கேட்கப்பட்டிருந்தால், மேற்கூறப்பட்ட ஆறு திங்கள் கால அளவென்பது கேட்கப்பட்ட விளக்கங்கள் அல்லது விவரங்கள் பெறப்பட்ட நாளிலிருந்து கணக்கிடப்படும். அவ்வாறான ஒப்பளிப்பு அல்லது அனுமதி அளிப்பு ஆணை எதுவும் மேற்குறிப்பிடப்பட்ட ஆறு மாத கால அளவுக்குள் அளிக்கப்படவில்லை எனில், மேற்குறிப்பிடப்பட்ட ஆறு மாத கால அளவு முடிந்தவுடன் உரிய அதிகாரி தனது ஒப்பளிப்பினை வழங்கியதாக அல்லது அனுமதியளித்ததாக கருதி, இடம் பெயராச் சொத்தினை பெறலாம் அல்லது விற்பனை செய்யலாம். இடம் பெயர் சொத்தினை வாங்கலாம் அல்லது விற்கலாம் அல்லது வீட்டின் கட்டுமான/ விரிவாக்கப் பணியினை தொடங்கலாம்.


(3) அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் பின்வருவன தொடர்பில் முழுமையான விவரங்களுடன் 31.12.1980ஆம் நாளன்று உள்ளவாறான சொத்துகள், கடன் பொறுப்புகள் குறித்த விவர அறிக்கையினை 31.3.1981 ஆம் நாளன்றோ அதற்கு முன்போ அளிப்பதுடன் அதன் பிறகு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, அவ்வறிக்கைக்குத் தொடர்புடைய ஆண்டுக்கு மறு ஆண்டு மார்ச் மாதம், 31-ஆம் நாளன்றோ அதற்கு முன்போ அளிக்க வேண்டும்.


(அ) தமக்கு மரபுரிமையாகக் கிடைத்த அல்லது தமக்கு சொந்தமான அல்லது அடையப்பெற்ற அல்லது குத்தகை அல்லது அடமானம் மூலம் தமது பொறுப்பிலுள்ள, தன்னுடைய குடும்ப உறுப்பினரின் அல்லது மற்றொருவரின் பெயரில் உள்ள இடம் பெயராச் சொத்து.


(ஆ) தமக்கு மரபுரிமையாகக் கிடைத்த அல்லது இதே போன்று சொந்தமான, அடையப்பெற்ற அல்லது தம் வசமுள்ள பங்குகள், கடனீட்டு ஆவணங்கள் மற்றும் வங்கி வைப்புகள் உட்பட ரொக்கம்.

(இ) தமக்கு மரபுரிமையாகக் கிடைத்த அல்லது இதே போன்று சொந்தமான, பெறப்பட்ட அல்லது தம் வசமுள்ள பிற இடம் பெயர் சொத்து.

(ஈ) நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தம்மால் ஏற்பட்ட கடன்கள் மற்றும் பிற கடன் பொறுப்புகள்.


மேலும், அரசுப்பணியாளர் ஒவ்வொருவரும் தாம் எந்தவொரு பணிக்கேனும் அல்லது பணியிடத்திற்கேனும் முதலில் நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள் தாம் பணியில் சேர்ந்த காலத்தில் தமக்கிருந்த சொத்துகள் மற்றும் கடன்கள் பற்றிய விவர அறிக்கையினை மேற்கண்ட படிவங்களில் அளிக்க வேண்டும். அதன் பின்னர் மேலே குறிப்பிடப்பட்டவாறு, தமது முதல் நியமனத்தின்போது தமது சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவர அறிக்கை அளிக்கப்பட்டு ஐந்தாண்டுகள் முடிவடையாத நிலையிலும் காலமுறைப்படி சொத்துகள் மற்றும் கடன்கள் விவர அறிக்கையை அளிக்க வேண்டும்.


இருப்பினும், அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் ஐந்தாண்டுகள் இடைவெளிகளில், ஆண்டுதோறுமான தன்னுடைய சொத்துகள் மற்றும் கடன்கள் பற்றிய விவர அறிக்கையினை அளித்த பின்னர், தன்னுடைய வயது முதிர்வு ஓய்வு நாளுக்கு முந்தைய கடந்த ஐந்தாண்டுகளுக்கான தன்னுடைய ஆண்டுதோறுமான சொத்துகள் மற்றும் கடன்கள் பற்றிய விவர அறிக்கையினை உரிய அதிகாரிக்கு அளித்தல் வேண்டும்.


இருப்பினும், உரிய அதிகாரியானவர், அரசுப் பணியாளர்களிடமிருந்து அத்தகைய அறிக்கைகள் பெறப்பட்ட நாளிலிருந்து இரு மாதத்திற்குள், அவர்களுடைய சொத்துகள் மற்றும் கடன்கள் பற்றிய முந்தைய விவர அறிக்கை நாளுக்கு பிறகு அனுமதியளிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை மறு ஆய்வு செய்து நேர்வுக்கேற்ப முந்தைய ஐந்தாண்டுகளில்/ ஆண்டுதோறும் அளிக்கப்பட்ட அறிக்கைகளுடன் அவை ஒத்திசைவாக உள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டும். [(அரசாணை எண்.149. ப (ம) நி.சீ.துறை நாள்.15.3.1996 (Added vide G.O.Ms.No.149, P&AR (A) Dept., dt.15.3.96)இல் சேர்க்கப்பட்டது)]


எடுத்துக்காட்டு: 1980 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 25ஆம் நாளன்று பணியில் சேர்ந்தவர். தமது முதல் நியமன நாளன்று உள்ளபடியான தமது சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவர அறிக்கையினை 25.4.1980-க்கு முன்னர் அளிக்க வேண்டும். அதன் பின்னர் அறிக்கைகளை 31.12.1980, 31.12.1985, 31.12.1990 நாளின்படியான சொத்துக்கள், பொறுப்புகள் ஆகியவற்றுக்கான விவர அறிக்கையினை 31.3.1981, 31.3.1986, 31.3.1991 ஆம் நாளன்றோ அவ்வாறே தொடர்ந்து அளிக்க வேண்டும்.



விளக்கம்:-  எல்லா அறிக்கைகளிலும் ரூ.50,000/-க்குக் குறைந்த விலை மதிப்புடைய இடம் பெயர் சொத்துகளின் மதிப்புத் தொகையாவும் ஒன்றாகக் கூட்டப்பட்டு ஒட்டுமொத்தத் தொகையாகக் காண்பிக்கப்பட வேண்டும். துணிகள், பாத்திரங்கள், மண்பாண்டங்கள், புத்தகங்கள் முதலிய அன்றாடப் பயன்பாட்டிற்குரிய பொருள்களின் விலை மதிப்புகள் அவ்விவர அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டியதில்லை. அரசு பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்களுடைய சொந்த ஆதாரங்களின் மூலம் இடம் பெற்ற இடம் பெயர் மற்றும் இடம் பெயராச் சொத்துகளின் விவரங்கள் இவ்விவர அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டியதில்லை. [ (அரசாணை எண். 39 ப(ம) நி.சீ. துறை நாள். 09.03.2010), அரசாணை எண். 409 ப(ம) நி.சீ. துறை நாள். 14.12.1992)]


(3 A) உள்விதி (3)-இல் குறிப்பிடப்பட்டுள்ள இவ்விவர அறிக்கையினை மறைவடக்க ஆவணமாகக் (secret document) கொள்ள வேண்டும். 10-ஆவது விதியின் காப்புரைகள் இயன்றவரையில் இவ்விவர அறிக்கைக்கும் பொருந்தும்.


(4)அரசு மற்றும் ஆவணக்குழு எதுவும் அல்லது இதன்பொருட்டு அவற்றால் அதிகாரமளிக்கப்பட்டுள்ள அலுவலர் எவரும் அல்லது உரிய அதிகாரி ஒருவர் அரசு பணியாளர் அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர் எவரும் உடைமையாகக் கொண்டிருக்கும் அல்லது தேடிக் கொண்டிருக்கும் இடம் பெயர் அல்லது இடம் பெயராச் சொத்துப் பற்றிய அனைத்து முழு


அறிக்கையினை ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறிப்பிடப்பட்டுள்ள கால அளவுக்குள் அளிக்குமாறு எத்தருணத்திலும் பொது அல்லது சிறப்பு ஆணை மூலம், கேட்டுக் கொள்ளலாம். அரசால் அல்லது ஆணைக்குழுவால் அல்லது இதன்பொருட்டு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அலுவலரால் அல்லது உரிய அதிகாரியால் வேண்டப்பட்டால் அச்சொத்து அடையப் பெற்றமைக்குரிய வழிவகை அல்லது ஆதாரம் பற்றி விவரம் அவ்விவர அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும்;.


மேலும், குறிப்பிட்ட ஊழல் விசாரணை ஒன்றுக்கு சொத்து விவர அறிக்கை தேவைப்பட்டால் உரிய அதிகாரி, அதனைப் பெற உள்விதியின் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்தலாம்.



(5) (அ) இவ்விதியின் நோக்கங்களுக்காக ‘உரிய அதிகாரி” எனப்படுவர்.

(i) துறைத்தலைவர் நேர்வில் ‘அரசு’

(ii) (அ) மாவட்ட ஆட்சியர் அனைவரும்.

(ஆ) மாவட்ட நீதிபதிகள்

(இ) மாவட்டக் குற்றவியல் நீதிபதிகள்

(ஈ) சென்னை மாநகர் உரிமையியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி

(உ) தலைமை நீதிபதி, சிறுவழக்குகள் நீதிமன்றம், சென்னை.

(ஊ) மாநகர முதன்மை நீதிபதி, சென்னை

(எ) தங்கள் நிருவாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ‘இ” மற்றும் ‘ஈ” பிரிவைச் சார்ந்த அரசு பணியாளர்களை பொறுத்தவரையில் மாநகரிலுள்ள (அலுவல் முறையிலான ஒப்படை பெற்றவர் நீங்கலாக) சட்ட அலுவலர்கள் அனைவரும்.

(iii) மாவட்டங்களிலுள்ள நில அளவை மற்றும் பதிவுருக்கள் துறையிலுள்ள பின்வரும் பணியிட வகைகளைப் பொறுத்தவரையில் மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும், சென்னையிலுள்ள துத்தநாகத் தகடச்சு நிறழ்பட அச்சகம் உள்பட நில அளவை மற்றும் பதிவுருக்கள் இணை இளநிலை இயக்குநர் அலுவலகங்கள் மற்றம் மைய நில அளவை அலுவலகத்திலுள்ள மேற்குறிப்பட்ட வகைகளைப் பொறுத்தவரையில் நில அளவை மற்றம் நிலவரித் திட்ட இயக்குநர்.


இளநிலை வரைஞர்கள், நிலைகள் – I மற்றும் II


நில அளவர்கள்

துணைஅளவர்கள்

இளநிலை உதவியாளர்கள்

உதவியாளர்கள்


(iv) மற்ற நேர்வுகளில் தொடர்புடைய துறைத் தலைவர்

இருப்பினும் துறைத்தலைவர், தாம் பொருத்தமெனக் கருதுகின்ற காப்பு அதிகாரங்களைத் தம்மிடம் வைத்துக் கொண்டு, இவ்விதியின் கீழ்


அமைந்த தன்னுடைய அதிகாரங்களை தமது துறையிலுள்ள இரண்டாம் நிலை அலுவலர்களுள் ஒருவரிடம் ஒப்படைக்கலாம்.


(ஆ) அயல் பணிக்கு அல்லது வேறு ஏதேனும் அரசுப் பணிக்கு வேற்றுப்பணி முறையில் அனுப்பப்பட்டுள்ள அரசுப் பணியாளரைப் பொருத்தவரையில் உரிய அதிகாரி என்பது அவ்வரசுப் பணியாளர் முன்னர் பணியாற்றிய தாய்த்துறையை குறிப்பிடுவதாகும்.


(6) அரசுப்பணியாளர் தாம் பணிபுரியும் மாவட்டத்திலுள்ள இடம் பெயராச் சொத்துக்கு மரபுரிமை, வழியுரிமை அல்லது விருப்ப ஆவணம் வாயிலாக உரிமை பெறுமிடத்து அல்லது இவ்வதியில் கருதப்படுகின்றவாறு அந்த இடம் பெயராச் சொத்தில் சட்டப்படி உரிமைகொள்ளுமிடத்து அவர் அது பற்றிய விவரங்கள் அனைத்தையும் வழக்கமான வழிமுறையில் உரிய அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.


(7) நீக்கப்பட்டது (அரசாணை நிலை எண். 638, பணியாளர் (ம) நிர்வாகச் சீர்த்திருத்தத் துறை (பணி.அ) நாள். 16.5.1980.)


(8) அரசுப் பணியாளர் தமது உடைமையாக உள்ள அல்லது தாம் சட்டப்படி உரிமை கொண்டுள்ள இடம் பெயராச் சொத்து அமைந்துள்ள மாவட்டத்திற்கு மாறுதல் பெறுமிடத்து அவர் அவ்விவரத்தினைத் தன்னுடைய உடனடி மேலுள்ளவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.


(9) பணியாளர்களின் மந்தணக் கோப்புகளையும் (Personal files) பதிவுருத் தாள்களையும் பராமரிக்கும் அலுவலர், தமது நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அனைத்து அரசுப் பணியாளர்கள் குறித்து பிரிவு வாரியாக பதிவேடுகளைப் பராமரிக்கவேண்டும். அப்பதிவெடுகளில் அவர்கள் ஒவ்வொருவரிடமும் உள்ள இடம் பெயராச் சொத்துக்களின் விவரங்களைப் பதிவு செய்வதுடன் துணை விதி (3)-இல் குறிப்பிட்டவாறு அரசு பணியாளரால் அடுத்தடுத்து அளிக்கப்படும் விவர அறிக்கைகளின்படி அப்பதிவேட்டிலுள்ள பதிவுகளைத் தக்கவாறு திருத்திக் கொள்ளவும் வேண்டும்.


(10) அறிக்கைகளில் தவறான வழிகாட்டும் எந்த முயற்சியும் முழுமையான மற்றும் சரியான தகவல்தருவதில் எந்த தவறுகையும், தொடர்புடைய அரசு பணியாளரைக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைக்குட்படுத்தும்.


(11) வருவாய்த் தண்டல் அல்லது நீதி நிர்வாகப் பணியிலுள்ள அல்லது அதற்கு தொடர்புடையவருக்கு எந்த வணிக நோக்கத்திற்கும் இந்தியாவின் எப்பகுதியிலும் நிலம் வாங்குவதற்கும் அனுமதி அளிக்கக் கூடாது.


(12) இடம் பெயராச் சொத்தினைக் கையகப்படுத்துதலுக்கும் உடமையாகக் கொள்ளுதலுக்கும் உரிய வரையறைகள், அச்சொத்தின் மீதான எந்த ஒரு உரிமைக்கும் மற்றும் வேறொருவர் பெயரில் அரசுப் பணியாளர்



அச்சொத்தினைக் கையகப்படுத்தி உடைமையாக்கிக் கொள்ளுதலுக்கும் பொருந்தும். ஆனால் அவை பொறுப்பாட்சியாக நிறைவேற்றுவராக, நிர்வாகியாக அச்சொத்தினைக் கையகப்படுத்துதலுக்கு அல்லது உரிமையாக்கிக கொள்ளுதலுக்குப் பொருந்தாது.


(13) வருவாய் வாரிய நிலை ஆணைகளுக்கு இணக்கமில்லாமல் அரசு நிலம் எதுவும் நிலையாகவோ தற்காலிகமாகவோ பணிக்கமர்த்தப்பட்டுள்ள அரசுப் பணியாளர் எவருக்கும் விற்கப்படவோ குத்தகைக்கு விடப்படவோ கூடாது.


(14) (அ) அரசுப் பணியாளர், தாம் பணியாற்றும் வருவாய் மாவட்டத்திற்குள் வீட்டுமனையை அல்லது கட்டப்பட்ட வீட்டினை வாங்கும் நோக்கத்திற்காக அன்றி வேறெந்த நோக்கத்திற்காகவும் நிலத்தை உடைமையாக்கிக் கொள்ள அனுமதிக்கப்படமாட்டார். அம்மாவட்டத்திலிருந்து அவர் மாற்றப்பட்ட பின்னரும், அவருடைய பணி மாற்றல் நாளிலிருந்து ஈராண்டுகள் வரை, அம்மாவட்டத்தில் வீட்டுமனையை அல்லது கட்டப்பட்ட வீட்டினை வாங்கும் நோக்கத்திற்காக அன்றி பிற நோக்கங்களுக்காக நிலத்தை உடைமையாக்கிக் கொள்ள அவர் அனுமதிக்கப்படமாட்டார்.


 இருப்பினும் உள் விதி (1)-இன் பிரிவுக்கூறு (அ)க்குட்பட்டு, அரசுப்பணியாளர் தாம் பணிபுரியும் அல்லது பணிபுரிந்த வருவாய் மாவட்டத்தில் வீட்டுமனையை அல்லது கட்டப்பட்ட வீட்டை வாங்கலாம்.


(ஆ) பொதுவாக, அரசு பணியாளர் தாம் பணிபுரியும் வருவாய் மாவட்டத்திற்கு வெளியே இடம் பெயராச் சொத்தினை உடைமையாக்கிக்கொள்ள அனுமதிக்கப்படலாம். ஆனால், அந்த இடம் பெயராச் சொத்தினை உடைமையாகக் கொண்டுள்ள மாவட்டத்திற்கு அரசுப் பணியாளர் மாற்றப்படுகையில் உள் விதி (17)-இல் கோரியுள்ள அறிக்கையை அளித்தவுடன் உரிய அதிகாரி அவரை வேறு மாவட்டத்திற்கு மாற்றுவார்.


இருப்பினும் ஒரு வருவாய் மாவட்டத்திலிருந்து மற்றொரு வருவாய் மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட அரசு பணியாளர், அவர் எந்த வருவாய் மாவட்டத்திலிருந்து மாற்றப்பட்டாரோ அந்த வருவாய் மாவட்டத்திற்குள், அவருடைய மாற்றல் நாளிலிருந்து ஈராண்டுகள் எந்தவொரு நோக்கத்திற்காகவும் வீட்டுமனை அல்லது கட்டப்பட்ட வீடு அல்லாத வேறு நிலத்தை உடைமையாக்கிக் கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்.


(இ) வருவாய் வாரியமும், அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள துறைத் தலைவர்களும், அரசுப்பணியாளர் மாற்றப்பட்டுள்ள மாவட்டத்தில் அவருக்குரிய இடம் பெயராச் சொத்தினை தக்கவைத்துக் கொள்வதற்கு, அத்துறை தலைவர்களால் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதிகளின் நேர்வுகள் பற்றி ஒவ்வோராண்டும் மார்ச் 31-ஆம் நாளுக்குள் அரசுக்கு ஆண்டு அறிக்கை அனுப்பப்பட வேண்டும்.


இதே போன்ற ஒப்பளிப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்ட சார்நிலை அலுவலர்களாலும் இவ்வறிக்கைகள் வருவாய் வாரியத்திற்கு அல்லது துறைத்தலைவர்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.


வருவாய் வாரியத்தாலும்; துறைத்தலைவர்களாலும் அனுப்பப்படும் இவ்வறிக்கைகளில், அவர்களுக்குச் சார்நிலையிலுள்ள அலுவலர்கள் தீர்வு செய்த நேர்வுகளைக் குறிப்பிட வேண்டியதில்லை.


(ஈ) கூறுகள் (அ), (ஆ) மற்றும் (இ) இல் உள்ள ‘வருவாய் மாவட்டம்” மற்றும் ‘மாவட்டம்” எனும் சொற்றாடரானது.


(i) பதிவுத்துறையிலுள்ள துணைப்பதிவாளர்கள், எழுத்தர்கள், பதிவுரு எழுத்தர்கள், அடிப்படை அரசுப் பணியாளர்கள் ஆகியோரைப் பொறுத்தவரையில் ‘பதிவுத்துணை மாவட்டம்” என்றும் பதிவுத் துறையிலுள்ள மாவட்ட பதிவாளர்களைப் பொறுத்தவரையில் ‘பதிவு மாவட்டம்” என்றும்,


(ii) ஆயத்துறை அல்லது மதுவிலக்குத் துறையின் தடுப்புக் கிளைகளிலுள்ள துணை ஆய்வாளர்களைப் பொறுத்தவரையில் ‘ஆயத்துறை அல்லது மதுவிலக்கு வட்டம்” என்றும்,


(iii) தமிழ்நாடு பொது சார்நிலைப் பணித் தொகுதி மற்றும் தமிழ்நாடு அடிப்படைப் பணித் தொகுதிப் பணி உறுப்பினர்களல்லாத பொதுப்பணித்துறை சார்நிலைப் பணி உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் ‘பொதுப்பணித்துறை உட்கோட்டம்’  என்றும்,


(iv) தமிழ்நாடு வனப்பணித் தொகுதி மற்றும் தமிழ்நாடு வனச் சார்நிலைப் பணிப் தொகுதி உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் ‘வனக்கோட்டம்” என்றும் பொருள்படும்.


(உ) (அ) முதல் (ஈ) வரையிலான பிரிவுக்கூறுகளில் இடம்பெறாத எதுவும், 1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில வீட்டுவசதி வாரியச் சட்டம் (1961ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 17) அல்லது மேற்குறிப்பிடப்பட்ட வாரியத்தால் நிறுவப்பட்ட எந்தவொரு வீட்டுவசதிப் பிரிவு அல்லது 1961ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச்சங்கங்கள் சட்டத்தின் கீழ் (1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 53) பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட சங்கம் வாயிலாக கையகப்படுத்தப்பட்ட வீட்டுமனைகள் உள்ளிட்ட நிலத்திற்கு பொருந்தாது.


(ஊ) குறிப்பிட்ட சொத்தானது அரசுப் பணியாளரால் கட்டப்பட்ட அல்லது மரபுரிமையாகப் பெறப்பட்ட வீடாக இருப்பின், பிரிவுக்கூறு (ஆ)-இல் உள்ள எதற்கும் பொருந்தாது.



(15) மருமக்கள் தாயம் அல்லது அளிய சந்தான சட்டத்தினால் முறைப்படுத்தப்படும் குடும்பத்தைப் பொறுத்தவரையில் அக்குடும்பத்தின் சார்பில் மேலாண் உறுப்பினரால் இடம் பெயராச் சொத்து வாங்கப்படுகையில், பொதுவாக இளநிலை உறுப்பினராக உள்ள அரசுபணியாளர், இதற்கான அனுமதியினைப் பெற தேவையில்லை. ஆனால் கையகப்படுத்துகை ஏதேனும் கர்ணவான் அல்லது எஜமான் பெயரில் செய்யப்பட்டிருந்து உள்ளபடியே அது அவ்வரசுப்பணியாளரின் சொந்தக் சொத்தாகக் கருத இடமளிக்கப்பட்டால் அது தொடர்பில் இவ்விலக்கு பொருந்தாது.


(16) வருவாய் அல்லது நீதித்துறையில் அரசுப் பணியாளர், அரசின் அனுமதியின்றி தாம் அப்போதைக்குப் பணியாற்றும் மாவட்டத்தில் அரசுக்கு சேர வேண்டி நிலுவைகள் காரணமாக அல்லது நீதிமன்றஆணைகளின்படி விறப்னைக்குரிய இடம் பெயர் அல்லது இடம் பெயராச் சொத்து எதனையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாங்குதல் இதன்மூலம் தடை செய்யப்படுகிறது.


(17) அரசுப் பணியாளர் தன்னுடைய சொந்த கணக்கில் அல்லது பொறுப்பாட்சியர் நிறைவேற்றுநர் அல்லது நிருவாகி அல்லது கோயில் மிராசுதாரர் எனும் முறையில் உடைமையாகக் கொள்ளப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட அல்லது அவரது மனைவி அல்லது அவருடனுள்ள குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் அல்லது எவ்வகையிலேனும் அவரைச் சார்ந்தவராக உள்ள எவரேனும் ஒருவர் பெயரி; உரிமையாக் கொள்ளப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட ல்லத அவர்களால் மேலாண்மை செய்யப்படும் இடம் பெயராச் சொத்து விவரம் அனைத்தும் ஆண்டு விவர அளிக்கையில் இடம் பெற்றிருக்க வேண்டும். மருமக்கள் தாயம் அல்லது அளிய சந்தானம் சட்டத்தைப் பின்பற்றும் அரசுப் பணியாளர் நேர்வில் அவரது வாழ்க்தை; துணைவரால் உடைமையாக கொள்ளப்பட்ட இடம் பெயராச் சொத்தானது விவர அறிக்கையில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.


 Click Here To Download - Government Servant Property Form - Pdf


TNPTF_கிருஷ்ணகிரி

நன்றி : PeopleRightsFoundation org







Post Top Ad