தேர்தல் பணியில் விலக்கு - ஜாக்டோ -ஜியோ கோரிக்கை! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, October 2, 2021

தேர்தல் பணியில் விலக்கு - ஜாக்டோ -ஜியோ கோரிக்கை!

 




காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஜாக்டோ -ஜியோ சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேகர், மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. தேர்தல் பணிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடல்நலமின்மையால் மருத்துவ விடுப்பில் உள்ளோர் அனைவருக்கும் இந்திய தேர்தல் ஆணையம் விலக்களித்துள்ளது.



ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.  கொரோனாவால் பாதிக்கப்பட்டு நோயில் இருந்து மீண்டு இருந்தாலும், அவர்களில் பல ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பல இணைநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக முடக்குவாதம், சுவாச பிரச்னைகள், நீண்டநேரம் ஓரிடத்தில் அமர இயலாமை, உயர் ரத்த அழுத்தம் உள்பட பல பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்பட்டு, பணிசெய்ய முடியாமல் உள்ளனர்.  அவர்கள் அனைவருக்கும் தேர்தல் பணிகளில் இருந்து விலக்களிக்க வேண்டும். கிராமங்களில் தேர்தல் பணியாற்ற செல்வோர், இரவில் தேர்தல் முடிந்ததும் மீண்டும் தங்களது இருப்பிடங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லாததால், கடும் சிரமம் அடைகின்றனர்.


எனவே இரவு நேரங்களில் தேர்தல் பணி முடிந்ததும் பணியில் ஈடுபட்டோரை பாதுகாப்பாக அழைத்து செல்ல போக்குவரத்து வசதிகளை செய்ய வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு குறித்த நேரத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், உணவு வழங்க ஊரகத்துறையின் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்.  வாக்குச்சாவடி அமைந்துள்ள இடங்களில் தண்ணீர் வசதியுடன் கூடிய தூய்மையான கழிப்பறைகள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் கூறப்பட்டுள்ளன.


Post Top Ad