9 முதல் 12 வரை மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு: பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, October 11, 2021

9 முதல் 12 வரை மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு: பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

 
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 9 முதல்பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார்  உத்தரவிட்டுள்ளார்.


இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அவர் அனுப்பியுள்ளசுற்றறிக்கை:


கரோனா பெருந்தொற்று பாதிப்பினால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் பொருட்டு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றலை மேம்படுத்த புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் தயாரிக்கப்பட்டு உள்ளது.


முதல்கட்டமாக புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம்,கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கும் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரிதாவரவியல், விலங்கியல், உயிரிவிலங்கியல், வரலாறு, பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல், கணினி அறிவியல், கணினிபயன்பாடுகள் ஆகிய பாடங்களுக்கும் தலா 60 கொள்குறி மதிப்பீட்டு வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.


9 முதல் 12 -ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உயர்தொழில்நுட்ப ஆய்வகம் மூலம்மதிப்பீட்டுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து தலைமை ஆசிரியர்களும் இந்த மதிப்பீட்டுத் தேர்வை வரும் 12-ம்தேதி (செவ்வாய்) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிக்குள் ஒருமணி நேரம் காலஅவகாசம் வழங்கிநடத்த வேண்டும்.


ஒவ்வொரு குழு மாணவர்களுக்கான மதிப்பீடு முடிந்த பின்னர் உடனுக்குடன் அடுத்தடுத்த குழு மாணவர்களை அமரவைத்து, ஆசிரியர்கள் இணைய வசதியை பயன்படுத்தியும் இந்த மதிப்பீட்டைசிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இதற்கான உரிய அறிவுரைகளை அனைத்து அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.Post Top Ad