ஆசிரியர்கள் மாணவர்களுக்கு 2வது பெற்றோர்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, October 28, 2021

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு 2வது பெற்றோர்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

 




மாணவர்கள் பெற்றோர்களை விட, ஆசிரியர்களிடம் மட்டுமே அதிக நேரம் உள்ளனர். எனவே, ஆசிரியர்கள் அனைவருமே மாணவர்களுக்கு இரண்டாவது பெற்றோர் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

திருவள்ளூர் ஒன்றியம், கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயாவின் 33வது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிய பள்ளிக்கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி, எழும்பூர் ஐ.பரந்தாமன், ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், துணைத் தலைவர் எம்.பர்கத்துல்லா கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேவாலயா நிறுவன தலைவர் முரளிதரன் வரவேற்றார்.


விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி,  பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் கலந்துகொண்டு தொடக்கப்பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தனர். பின்னர், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி  பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களிடம், எங்கு சென்றாலும் மாணவர்களின் படிப்பில் உங்கள் கவனம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். ஆகவே மாணவர்களுக்கு  படிப்பில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். மாணவர்கள் பெற்றோர்களை விட ஆசிரியர்களிடம் மட்டுமே அதிக நேரம் இருக்கிறார்கள்.


எனவே, ஆசிரியர்கள் அனைவருமே மாணவர்களுக்கு இரண்டாவது பெற்றோர்கள். ஆசிரியர்கள் நம் மீது உள்ள அக்கறையில் தான் நம்மை கண்டிக்கிறார்கள். ஆகவே, அதை உணர்ந்து மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும்.

ஏற்கனவே 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. அனைவரும் அரசு விதிமுறைகளை  பின்பற்ற வேண்டும். நவம்பர் 1ம் தேதி  முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரை  மாணவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து பள்ளிக்கு வர வேண்டும்.


 இதனை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மாணவர்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த கட்டிடத்தின் மின் சாதனம், மேஜை, நாற்காலிகள் சுற்றுப்புறப் பகுதி உள்ளிட்டவைகளை பழுது பார்த்து அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த  விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் இரா.தாஸ், ஒன்றிய செயலாளர் புஜ்ஜி ராமகிருஷ்ணன், ஈக்காடு கே.முகம்மது ரபி, ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா ராஜி, ஊராட்சி தலைவர் பக்தவச்சலம்,  அலெக்ஸ், ராஜ், சஞ்சய், சுதா,  தேவா, அருண்,   உட்பட பலர் கலந்து கொண்டனர்.




Post Top Ad