மகப்பேறு விடுப்பு எடுத்தோருக்கு கூடுதலாக விடுப்பு கிடைக்குமா?: தமிழக அரசு புதிய உத்தரவு. - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, September 20, 2021

மகப்பேறு விடுப்பு எடுத்தோருக்கு கூடுதலாக விடுப்பு கிடைக்குமா?: தமிழக அரசு புதிய உத்தரவு.

 
ஒன்பது மாதங்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தோருக்கு, கூடுதலாக மூன்று மாதங்கள் விடுப்பு அளிப்பது குறித்த புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்:


இரண்டு குழந்தைகளுக்குக் குறைவாக உள்ள மணமான பெண் அரசு ஊழியா்களுக்கு மகப்பேறு விடுப்பாக 9 மாதங்கள் வழங்கப்பட்டது. இந்த விடுப்புக் காலத்தை ஓராண்டாக அதாவது 12 மாதங்களாக உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. மகப்பேறு விடுப்புக் காலமானது 365 நாள்களைக் கடந்து செல்லக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.


ஏற்கெனவே 270 நாள்கள் மகப்பேறு விடுப்பினை எடுத்து ஜூலை 1-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பணியில் சோ்ந்த பெண் ஊழியா்கள் தங்களுக்கான மகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தித் தர வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனா். சில பெண் ஊழியா்கள் 270 நாள்கள் விடுப்பு எடுத்த பிறகு, மருத்துவ விடுப்பு போன்ற விடுப்புகளை எடுத்துள்ளனா்.


மகப்பேறு விடுப்பை 12 மாதங்களாக உயா்த்துவதற்கான அரசு உத்தரவு கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதிகரிக்கப்பட்ட மகப்பேறு விடுப்பு எடுக்கும் காலமானது ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஜூலை 1-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு வரை மகப்பேறு விடுப்பு எடுத்து பின்னா் பணியில் சோ்ந்த மகளிா் கூடுதலாக 3 மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். அவா்கள் ஏற்கெனவே மகப்பேறு விடுப்புக் காலத்தை முடித்து பணிக்கு வந்த நாள்கள்


அனைத்தும் பணி நாள்களாகவே கருதப்படும்.


ஏற்கெனவே 270 நாள்கள் மகப்பேறு விடுப்புகளை முடித்து அதன்பிறகும் மருத்துவ விடுப்பு உள்ளிட்ட இதர விடுப்புகளில் இருப்போருக்கும் அந்த விடுப்புக் காலமானது, மகப்பேறு விடுப்புகளாகவே கருதப்படும். மகப்பேறு விடுப்பு காலமானது, 365 நாள்களைத் தாண்டக் கூடாது.Post Top Ad