பாடப்புத்தகம், நோட்டுகளில் முன்னாள் முதல்வர்கள் பட விவகாரம் தமிழக முதல்வருக்கு ஐகோர்ட் பாராட்டு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, September 8, 2021

பாடப்புத்தகம், நோட்டுகளில் முன்னாள் முதல்வர்கள் பட விவகாரம் தமிழக முதல்வருக்கு ஐகோர்ட் பாராட்டு

 




பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும் பாடப் புத்தகங்கள், நோட்டுகளில் முதல்வரின் படத்தை அச்சிட்டு பொது மக்களின் பணத்தை வீணாக்க கூடாது என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு பாராட்டத்தக்கது என்றும் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தற்போது இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை வழங்க வேண்டும்.


இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள் நோட்டுகள், பைகள் உள்ளிட்டவற்றில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, பழனிச்சாமி படங்கள் இருப்பதனால் அவற்றை விநியோகிக்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை வாய்மொழி உத்தரவு  பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.பொதுமக்களுடைய வரிப் பணத்தை வீணாக்க  கூடாது. எனவே, ஏற்கனவே பிரின்ட் செய்யப்பட்ட பாட புத்தகங்கள் மற்றும்  நோட்டுகள், பைகளை வீணாக்கக்கூடாது. அவற்றை மாணவ, மாணவிகளுக்கு வினியோகிக்க  உத்தரவிட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோல பாடப்புத்தகங்கள் நோட்டுகள், பைகளில் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை பிரின்ட் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.


இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, முந்தைய முதல்வர்கள் படங்கள் அச்சடிக்கப்பட்ட சுமார் 65 லட்சம் புத்தகங்கள், நோட்டுகளை வீணாக்காமல் அச்சடிக்கப்பட்ட அதே நிலையில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு அந்த புத்தகங்கள் வழங்கப்படுகின்றன என்றார்.


இதையடுத்து, நீதிபதிகள், ‘‘தமிழக முதல்வர் பேரவையில் அறிவித்ததை அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார். அது பாராட்டுதற்குரியது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் புத்தகங்கள், நோட்டுகள், எழுது பொருட்கள் அடங்கிய பைகளில் பொது ஊழியர்களின் படங்கள் அச்சடிப்பது பொது நிதியை வீணடிப்பதாகும். அரசியல்வாதிகள் தங்களின் தனிப்பட்ட விருப்பத்திற்காக இதுபோன்று மக்கள் பணத்தை செலவு செய்யக்கூடாது. பொது நிதியை இதுபோன்ற விளம்பரங்களுக்காக பயன்படுத்தக் கூடாது. இதை தற்போதைய அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்று உத்தரவிட்டனர்.

Post Top Ad