கொரோனாவால் முற்றிலும் சிதைந்த கல்வித்துறை கட்டமைப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, July 8, 2021

கொரோனாவால் முற்றிலும் சிதைந்த கல்வித்துறை கட்டமைப்பு

 




கொரோனாவால் நாட்டின் கல்வித்துறை சிதைந்துள்ள நிலையில், பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு மத்தியில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் ஆன்லைன் வகுப்புகளால், அவர்கள் பெரும் துயரங்களை சந்தித்து வருகின்றனர்.  கொரோனா என்ற ஒற்றை சொல், இந்த நூற்றாண்டில் எத்தனையோ பேரின் வாழ்க்கை முறைமையை புரட்டிபோட்டு விட்டது. கர்ப்பணி பெண் முதல் வயதானவர்கள் எவரையும் விட்டு வைக்காமல் பாதித்துள்ளது. உடல் ரீதியான பிரச்னைகள் ஒருபக்கம் இருந்தாலும், மனம், அலுவல், தொழில் ரீதியாக நிறைய படிப்பினையும் கற்றுக் கொடுத்துள்ளது. அதுவும், மாணவர்களுக்கான ‘ஆன்லைன்’ வகுப்பும், மொபைல் போனுக்கு சிக்னல் கிடைக்காமல் மாணவர்கள் போனை கையில் வைத்துக் கொண்டு அலைவதையும் தினமும் பார்க்க முடிகிறது. சிக்னல் சரியாக கிடைக்கும் மலை குன்றுகள், மரங்கள், திண்ணைகள், பாதைகள், வீட்டின் மேற்கூரை... எத்தனையோ அனுபவங்களை மாணவர்கள் பெற்று வருகின்றனர். சமீபத்தில் தனது தாயின் மாம்பழ வியாபாரத்தை கவனித்துக் கொண்டே மொபைல் போனில் ஆன்லைன் வகுப்பை கவனித்து வந்த மாணவியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.


இவ்வாறாக, நாடு முழுவதும் சிக்னல் பிரச்னைகளும், அதனால் மாணவர்கள் எதிர்கொள்ளும் சங்கடங்களையும் தினமும் காணமுடிகிறது. கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளில், கல்வித்துறை எதிர்கொள்ளும் புதிய சவால்களின் பட்டியலில் ஆன்லைன் வகுப்பும் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் ஒன்றிய அரசின் 2019-20ம் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யுடிஎஸ்இ) அறிக்கையின்படியின் பார்த்தால், நாடு முழுவதும் சராசரியாக 37 சதவீத பள்ளிகள் கம்ப்யூட்டர் வசதி உள்ளது. அதில் 22 சதவீத பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி உள்ளது. இந்த கணக்கீடானது அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை கொண்டு கணக்கிடப்பட்டது. அரசு பள்ளிகளில் 11 சதவீதம் இணைய வசதியும், 28.5 சதவீத பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதியும் உள்ளது. நாடு முழுவதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், 8.5 கோடி ஆசிரியர் மற்றும் 26 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளன. தற்போது கொரோனாவுடன் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், நேரடி வகுப்புகள் மூலமான கல்வி முறை என்பது எப்போது நடத்தப்படும் என்பதே பெரும் கேள்வியாக உள்ளது.


இந்தியாவில் பெரும்பாலான பள்ளிகளில் தொழில்நுட்ப வசதிகள், தரமான டிஜிட்டல் பாடங்கள் இல்லாத நிலையில், மொபைல் போன்கள் மூலம் ஏழைக் குழந்தைகள் எவ்வாறு கல்வி கற்பர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தலைமுறைகள் மாறினாலும், இந்திய சமூகம் பொருளாதார ஏற்றத்தாழ்வுடனே பயணிக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே, இப்போது இந்த தொழில்நுட்ப இடைவெளியும் புதிய சவாலாக மாறியுள்ளது. சாமானிய மக்களின் வாழ்க்கை முறையானது பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, டிஜிட்டல் வசதிகளிலும் பின்தங்கியிருக்கிறது. சாதி, மதம், ஏழை - பணக்காரர், பாலின வேறுபாடு போன்ற அமைப்பு ரீதியான சிக்கல்களுக்கு மத்தியில் இந்த டிஜிட்டல் இடைவெளியும் மாணவர்களை சிதைக்கிறது. கிட்டதிட்ட மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள், இப்போது ஆன்லைனில் படிக்கின்றனர். கடந்த அக்டோபரில் வெளியிடப்பட்ட ஆண்டு அளவிலான கல்வி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கொரோனா பிரச்னை தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே, இன்று வரை நாடு முழுவதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் தனியார் பள்ளிகள், மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க முடியாமலும், பள்ளிக்கான செலவுகளை ஈடுகட்ட முடியாமலும் தவித்து வருகின்றன. கல்வித்துறையில் இந்த கடினமான சூழ்நிலைகளில், மாணவர்களுக்கான டிஜிட்டல் இடைவெளியை சரிசெய்வது ஆட்சியாளர்களின் உடனடி பணியாக இருக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


வெவ்வேறு மொழிகளில் ‘கியூஆர்’ குறியீட்டை அடிப்படையாக கொண்ட பாடப்புத்தகங்கள் வடிவமைப்பு மற்றும் டிஜிட்டல் கல்வி தளங்களை உருவாக்குதல் அவசியமாகிறது. மேலும், அனைத்து கிராமங்களுக்கும் ‘பிராட்பேண்ட்’ வசதியுடன் கூடிய இணைய வசதிகள் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து கிராம பள்ளி மாணவர்களையும் இணையவழி கல்விக்குள் கொண்டு வரமுடியும். இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், ‘அனைத்து பள்ளிகளுக்கும் பிராண்பேன்ட் வசதியை ஏற்படுத்த வேண்டும். தனியார் பங்களிப்புடன் கூடிய டிஜிட்டல் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். மாணவர்களுக்கும் இலவச சீருடை, உணவு, பாடப்புத்தகம் வழங்குவது போன்று சிறிய அளவிலான ‘ஸ்மார்ட்’ கல்வி சாதனங்களை வழங்க வேண்டும். ‘டிஜிட்டல் இந்தியா’ போன்ற கோஷங்களை எழுப்பும் ஆட்சியாளர்கள், எதிர்கால சந்ததியான மாணவர்களின் கல்விக்காக தீவிர கவனம் செலுத்த வேண்டும். பள்ளிகளுக்கான டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அரசு முதலீடு செய்ய வேண்டும்’ என்றனர்.


Post Top Ad