அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க தலைமையாசிரியையின் புதிய உத்தி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, July 2, 2021

அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க தலைமையாசிரியையின் புதிய உத்தி

 





சின்னாளபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பள்ளி தலைமையாசிரியையின் புதிய முயற்சியாக, பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாயை ஆசிரியர்களே வழங்குகின்றனர்.

இதனால் இந்தப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.



திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.


பத்து ஆசிரியர்கள் இருந்தபோதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. சின்னாளபட்டியில் உள்ள மக்கள் பலரும் தங்கள் குழந்தைகளை மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அனுப்பியதால் அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தேவந்தது.


இந்நிலையில் இந்த பள்ளியில் தமிழ் வழிக்கல்வி மட்டுமின்றி ஆங்கிலவழிக்கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.


இருந்தபோதிலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க முடியவில்லை. தற்போது கரோனா பாதிப்பு காரணமாக


கிராமப்புற மாணவர்களின் பெற்றோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கல்விக்கட்டணம் செலுத்துவது என்பது பலருக்கு இயலாத காரியமாகவே இருக்கிறது.


இந்நிலையில் அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க சின்னாளபட்டி அரசு உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியை பானுரேகா புதிய முயற்சியை மேற்கொண்டார். ஆறாம் வகுப்பில் மாணவர்களை சேர்த்தால் அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.ஆயிரம் வழங்க திட்டமிட்டார்.


இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியை பானுரேகா கூறியதாவது:


மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர்கள் உதவியுடன் இந்த திட்டத்தை செயல்படுத்தினோம். இதற்கு பலன் கிடைத்துள்ளது.


இதற்கான நிதியை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் பங்களிப்பாக தர முன்வந்தனர். இந்த திட்டத்தை அமல்படுத்த தொடங்கியமுதல் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க தொடங்கியது. 52 பேர் மட்டுமே பயின்ற பள்ளியில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.


ஆங்கில வழிக்கல்வியும் இந்த பள்ளியில் உள்ளதால் ஆர்வமுடன் சேர்கின்றனர். கூடுதலாக சிலம்பம், கராத்தே உள்ளிட்டவைகளையும் கற்றுத்தர ஏற்பாடுகள் செய்துள்ளோம். இதற்கும் ஆசிரியர்கள் நிதியுதவி செய்கின்றனர்.





Post Top Ad