தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, July 8, 2021

தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

 




தமிழகத் தனியார் பள்ளிகள் 75 சதவீதக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை  ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆகியோருக்கு அவர் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.



அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:


''கரோனா இரண்டாவது அலை காரணமாகத் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் ஏப்ரல் 24-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. 2021 - 22ஆம் கல்வி ஆண்டில் நேரடி வகுப்புகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இந்நிலையில் இந்தக் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டண வசூல் குறித்து பல்வேறு தரப்பிடம் இருந்து புகார்கள் வரப் பெற்றுள்ளன.


இந்நிலையில் பெருந்தொற்றுக் காலத்தைக் கணக்கில் கொண்டு, அனைத்து சுயநிதி தனியார் பள்ளிகளும் 75 சதவீதக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


முதல் தவணையாக 40 சதவீதக் கட்டணத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வசூலிக்கலாம் என்றும், மீதமுள்ள 35 சதவீதக் கட்டணத்தைப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.




மீதமுள்ள 25 சதவீதக் கட்டணத்தைப் பொறுத்தவரை, பெருந்தொற்றுக் காலத்தைக் கணக்கில் கொண்டு பின்பு முடிவெடுக்கப்பட்டு, அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது''.


இவ்வாறு அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்துக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''தனியார் பள்ளிகள் சார்பில் முதல் கட்டமாக 40 சதவீதக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். அதையும் சில பெற்றோர்கள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் செலுத்த முடியாத பட்சத்தில் உரிய காரணங்களைத் தெரிவித்து, அவகாசத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் பள்ளிக் கல்வித்துறை புகார் எண் 14417-ஐத் தொடர்பு கொள்ளலாம்'' என்று தெரிவித்தனர்.











Post Top Ad