ஆசிரியர்கள், பணியாளர்கள் போக்குவரத்துக்கு அரசு அனுமதி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, June 13, 2021

ஆசிரியர்கள், பணியாளர்கள் போக்குவரத்துக்கு அரசு அனுமதி

 






கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பள்ளி, கல்லுாரிகள் திறப்புக்காக, ஆசிரியர்கள், பணியாளர்கள் போக்குவரத்துக்கு, அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய கல்வி ஆண்டுக்கான நிர்வாக பணிகளை துவங்க, பள்ளி, கல்லுாரிகளுக்கு, ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகள், நாளை முதல் அமலுக்கு வருகின்றன.



கொரோனா பெருந்தொற்றால், தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.முதல் அலையின் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்தது. அதனால், மே 24 முதல் முழு ஊரடங்கு அமலானது. அந்த மூன்று வார ஊரடங்கு நாளை முடிகிறது.இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு, நாளை முதல் அமலுக்கு வருகிறது.


அத்துடன், புதிய கல்வி ஆண்டு பிறந்துள்ளதால், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கோடை விடுமுறை முடிந்து, மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி அடைந்துள்ளனர். இதையொட்டி, புதிய கல்வி ஆண்டுக்கான பணிகளை, தமிழக பள்ளி கல்வித்துறையும், உயர் கல்வித்துறையும் தீவிரப்படுத்தியுள்ளன.அதனால், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் நிர்வாக பணிகளை துவங்குவதற்கு, ஊரடங்கில் அனுமதி அளித்து, அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று வர, வாகன போக்கு வரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


அரசு அனுமதி



மாநிலம் முழுதும் பள்ளி, கல்லுாரிகள், தங்களின் நிர்வாக பணிகளை தடையின்றி மேற்கொள்ளலாம் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதன்படி, நாளை முதல், தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தினமும் பள்ளிக்கு வந்து, நிர்வாக பணிகளை பார்க்க வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளும், தங்கள் கல்வி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் தாளாளர்களை, தினமும் பணிக்கு வந்து, பணிகளை துவங்க அறிவுறுத்தியுள்ளன.இதன் காரணமாக, தங்களுக்கான கல்வி எதிர்காலம் என்னாகுமோ என, அச்சத்தில் இருந்த மாணவர்களும், பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.


புதிய விடிவு


அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், இன்னும் சில தினங்களில் புதிய மாணவர் சேர்க்கை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனா அச்சம் மற்றும் கோடை விடுமுறையால், வீட்டில் முடங்கி கிடந்த மாணவர்களும், புதிய கல்வி ஆண்டில் வகுப்புகளுக்கு வர ஆர்வமாக உள்ளனர்.


இதன் காரணமாக, கற்பித்தல் பணியும் இல்லாமல், மாத சம்பளமும் இல்லாமல் தவித்து வந்த, லட்சக்கணக்கான தனியார் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களும், புதிய விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.



இந்நிலையில், உயர் கல்விக்கான எதிர்காலம் குறித்து, 'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது:பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான வேலை வாய்ப்புகள், மிகப்பெரிய அளவில் உருவாகின்றன. எப்போதெல்லாம் சவால்களும், பிரச்னைகளும் வருகிறதோ, அப்போதெல்லாம் புதிய வாய்ப்புகள் உருவாகும்.'டேட்டா சயின்ஸ், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், பிளாக் செயின், சோலார் எனர்ஜி, 5ஜி' தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என, அனைத்து துறைகளிலும் புதிய வாய்ப்புகள் உருவாகின்றன.


மாணவர்கள் உயர் கல்வியை படிக்கும்போதே, தொழில்நுட்ப அறிவையும், இதர திறன்களையும் வளர்த்து கொண்டால், வாழ்க்கையில் உயரிய இடத்தை அடைய முடியும்.



உற்சாகம்


இன்றைய பெருந்தொற்று காலத்தை முறையாக பயன்படுத்தி, சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் துறை சார்ந்த நிபுணர்களிடம், 'ஆன்லைன்' வழியாக மாணவர்கள் கலந்துரையாட, கல்லுாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.


வரும் காலங்களில், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்பதால், மாணவர்கள் கவலைகள் இன்றி, புதிய கல்வி ஆண்டு பணிகளை உற்சாகமாக துவங்க வேண்டும்.நிலைமை விரைவில் சீராகி, மீண்டும் வகுப்பறைகளில், நேரடியாக கல்வி கற்கும் நிலை வரும் என்ற, நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.





Post Top Ad