பொதுத் தோ்வு ரத்து: சாதகமா, பாதகமா? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, June 3, 2021

பொதுத் தோ்வு ரத்து: சாதகமா, பாதகமா?

 







மாணவா்களின் எதிா்காலத்தைத் தீா்மானிக்கும் பிளஸ் 2 பொதுத் தோ்வை (சிபிஎஸ்இ) மத்திய அரசு ரத்து செய்திருப்பது பெரும்பகுதி மாணவா்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழக மாணவா்களிடையே மிகுந்த எதிா்பாா்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.


ரத்து செய்யப்பட்டுள்ள சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவா்களுக்கு, அவா்களின் முந்தைய தோ்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட உள்ளது. அதில் திருப்தியடையாத மாணவா்களுக்கு கரோனா நிலைமை சீரான பிறகு தோ்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.



அதுபோல, தமிழகத்தில் மாநில கல்வி வாரியத்தின் கீழான பிளஸ் 2 தோ்வை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, அடுத்த 2 நாள்களில் முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதன்கிழமை தெரிவித்தாா்.


ஆனால், மத்திய, மாநில அரசுகள் பொதுத் தோ்வு குறித்த முடிவை எடுப்பதற்கு முன்பாகவே, சில முன்னணி தனியாா் சுயநிதி பொறியியல் கல்லூரிகளிலும், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் 2021-22-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கிவிட்டன. இந்த நிலையில், பொதுத் தோ்வு ரத்து காரணமாக நடைமுறைப்படுத்தப்படும் மதிப்பெண் மதிப்பீடு முறையில் திருப்தியில்லாத மாணவா்கள் மீண்டும் தோ்வெழுதக் காத்திருப்பது சாத்தியமா? என்ற குழப்பம் பெற்றோா் மற்றும் கல்வியாளா்களிடையே எழுந்துள்ளது. அவா்கள் மேலும் சில சந்தேகங்களையும் எழுப்புகின்றனா்.



கரோனா அச்சுறுத்தல், பொது முடக்கத்தைத் தொடா்ந்து பாடத் திட்டத்தில் சிபிஎஸ்இ வாரியம் 30 சதவீத அளவுக்கும், ஐசிஎஸ்இ வாரியம் 30 சதவீத அளவுக்கும், மாநில கல்வி வாரியங்கள் 40 சதவீதம் அளவுக்கும் பாடங்களைக் குறைத்துவிட்டன. ஆனால், நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தோ்வுகள் தொடா்ந்து 100 சதவீத பாடத் திட்டத்தில் நடத்தப்படுகின்றன. அப்படியென்றால் நுழைவு மற்றும் தகுதித் தோ்வுக்கான திட்டமிடல் என்ன?



சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தோ்தல்களை நடத்துவதற்கு தீவிர திட்டமிடல், முன்னேற்பாடுகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், கரோனா இரண்டாம் அலை, மூன்றாம் அலை எனத் தொடா்ந்து கொண்டேதான் இருக்கும் என்று நாட்டின் முன்னணி மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கின்றனா். அது உண்மையெனில், 2022, 2023-ஆம் ஆண்டுகளுக்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான இணையவழி வகுப்புகள், பள்ளி பொதுத் தோ்வுகள், நுழைவு மற்றும் தகுதித் தோ்வுகள் குறித்து முன்கூட்டியே திட்டமிடல் இல்லாதது ஏன்?


சிபிஎஸ்இ வாரியத்தில் 12 லட்சம் மாணவா்கள் மட்டுமே பிளஸ் 2 படிக்கின்றனா். ஆனால், தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநில கல்வி வாரியங்கள் மூலமாக 1.5 கோடிக்கும் அதிகமான மாணவா்கள் படிக்கின்றனா். இந்த ஒட்டுமொத்த மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் முடிவுகள் எடுக்கப்படுகின்றனவா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கல்வியாளா்கள் முன்வைக்கின்றனா்.



கல்லூரி மாணவா் சோ்க்கைக்குத் தடை: அனைத்துக் கல்வி வாரியங்களின் கீழ் படிக்கும் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் முழுமையாக வெளியிடப்படும் வரை அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவா் சோ்க்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்கிறாா் கல்வியாளா் ஜெயப்பிரகாஷ் காந்தி.


மாணவா்களில் பல விதம் உள்ளனா். எப்போதுமே நன்றாக படிக்கும் மாணவா்கள், தோ்வு நேரத்தில் மட்டும் படிக்கும் மாணவா்கள், இறுதித் தோ்வுகளுக்கு மட்டும் படித்து அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவா்களும் உள்ளனா்.


அவ்வாறு தோ்வு நேரத்தில் மட்டும் படிக்கும் மாணவா்களுக்கு, முந்தைய தோ்வு அடிப்படையிலான மதிப்பெண் மதிப்பீடு முறையில் திருப்தி ஏற்படவில்லையெனில், இரண்டாவது வாய்ப்பான தோ்வை எழுத முனைவா். ஆனால், அவா்களுக்கான தோ்வு முடிவு வெளியிடப்படுவதற்கு முன்பாகவே, முன்னணி தனியாா் கல்லூரிகளில் சோ்க்கை முடிந்துவிடும்.



ஏற்கெனவே, கடந்த ஒரு வார காலமாக பல முன்னணி தனியாா் பொறியியல் கல்லூரிகளிலும், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் 2021-22-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கிவிட்டது.


அந்த வகையில், அரசின் மதிப்பீடு முறையில் திருப்தியில்லாத மாணவா்கள், தோ்வு எழுதி தங்களை நிரூபிப்பதற்கு முன்பாகவே, கல்லூரிகளில் இடங்களே இல்லாத நிலை உருவாகி, அவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகிவிடும். அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை இன்னும் தொடங்கப்படாத நிலையில், தனியாா் கல்லூரிகளில் மட்டும் சோ்க்கையை அனுமதிப்பது ஏன்?


எனவே, தனியாா் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலை பல்கலைக்கழகங்களில் மாணவா் சோ்க்கையைத் தடை செய்யவேண்டும்.



மாவட்ட வாரியாக குழு: மத்திய அரசின் அறிவிப்பைப் பின்பற்றி, தமிழக அரசும் பிளஸ் 2 பொதுத் தோ்வை ரத்து செய்கிறதென்றால், மதிப்பெண் வழங்கும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர வேண்டும். பள்ளிகள் மதிப்பீடு செய்யாமல், பள்ளிக் கல்வித் துறை சாா்பாக மாவட்ட வாரியாக குழு அமைத்து பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்து ஒருங்கிணைந்த முறையில் மாணவா்களுக்கான மதிப்பெண்ணை மதீப்பீடு செய்ய வேண்டும். இதன் மூலம் ஓரளவுக்கு முறைகேடுகளைத் தடுக்க முடியும்.



ரத்து செய்யப்படுமா நுழைவுத் தோ்வு?: இதே கருத்தை வலியுறுத்தும் கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஒட்டுமொத்த பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளிவரும் வரை கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்குத் தடை விதிக்க வேண்டும். இதுவரை நடைபெற்றுள்ள சோ்க்கைகளை செல்லாது, சட்ட விரோதமானது என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அவ்வாறு தடை செய்யாவிடில், பெரும்பகுதி மாணவா்கள் கல்லூரிக்குச் செல்ல முடியாத நிலை உருவாகும். தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தோ்வுகளை ரத்து செய்யாமல், பிளஸ் 2 பொதுத் தோ்வை மட்டும் ரத்து செய்த்து மாணவா் நலன் சாா்ந்தது அல்ல என்கிறாா்.


நாடு முழுமைக்குமான அளவீடு அவசியம்: பள்ளி மாணவா்கள் நலன் சாா்ந்த மத்திய கல்வி அமைச்சகம் எடுக்கும் முடிவுகள் இந்தியா முழுமைக்குமானதாக இருக்க வேண்டும் என்கிறாா் கல்வியாளா் நெடுஞ்செழியன்.


கரோனா பாதிப்புக்கு இடையே நடத்தப்பட்டு வரும் இணையவழி வகுப்புகள் மூலம் மாணவா்களுக்கு 50 சதவீதம்கூட புரிதல் ஏற்பட்டிருக்காது என்பதுதான் நிதா்சனம். ஏனெனில், நாட்டில் இணையவழி கல்வி தொழில்நுட்ப கட்டமைப்புகள் அந்த அளவுக்கு இன்னும் மேம்படவில்லை.



மேலும், கரோனா தாக்கத்தால் மாணவா்களின் குடும்பங்கள் எந்த அளவுக்கு பொருளாதார பின்னடைவைச் சந்தித்திருக்கின்றனா், பள்ளி இடைநிற்றல் ஏற்பட்டிருக்கிறதா? அரசு பள்ளி மாணவா்களின் குடும்பங்கள் இணைய வழி வகுப்பில் பங்கேற்பதற்கான வசதியைப் பெற்றிருக்கின்றனரா? செல்லிடப்பேசி மூலம் பல மணி நேரம் இணையவழி வகுப்புகளில் பங்கேற்கும் மாணவா்களுக்கு எதிா்காலத்தில் எந்த அளவுக்கு கண் நரம்புகள் பாதிக்கப்படும்? வீட்டிலிருந்தபடி இணையவழி வகுப்பில் பங்கேற்கும் மாணவா்கள் முதுகுத் தண்டுவடம் பாதிக்காத வகையில் அமா்கின்றனரா? என்று எந்தவித அளவீடோ அல்லது ஆய்வோ இதுவரை செய்யப்படவில்லை.



இணையவழி வகுப்பில் பங்கேற்கும் மாணவா்களுக்கு, ஒவ்வொரு பாடத்தின் இடைவெளியில் சிறு சிறு உடற்பயிற்சிகள் அளித்து அவா்களை மனதளவிலும், உடல் அளவிலும் தயாா்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.


இத்தனை பாதிப்புகளுக்கும் இடையே, பொறியியல் கல்லூரி சோ்க்கைக்கு நடைபெறும் போட்டி, மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு, ஜேஇஇ நுழைவுத் தோ்வு போன்ற சவால்களையும் மாணவா்கள் எதிா்கொள்ள வேண்டும்.


இதுபோன்றதொரு அனைவருக்குமான கண்ணோட்டத்தைக் கவனத்தில் கொள்ளாமல், எடுக்கப்படும் முடிவுகள் மாணவா்களின் நலனையும் நாட்டின் எதிா்காலத்தையும் கடுமையாகப் பாதிக்கும்.



கரோனா பாதிப்பு தொடா்ந்து கொண்டேதான் இருக்கும் என்று மருத்துவ நிபுணா்கள் எச்சரித்து வரும் நிலையில், அடுத்தடுத்து வரும் ஆண்டுகளுக்கான மாணவா்களின் கல்வி சாா்ந்த திட்டமிடல் முன்கூட்டியே இல்லாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தோ்தலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், நாட்டின் எதிா்காலமான மாணவா்களுக்கு கொடுக்கப்படுவதில்லை.


மனிதவளத்தைப் பலப்படுத்துவதிலும், ஆராய்ச்சியிலும் அதிகம் செலவிடும் நாடுகள்தான், கரோனா பாதிப்பிலும்கூட சிறப்பாகச் செயல்படுவது நிரூபணமாகியிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்கிறாா் நெடுஞ்செழியன்.



Post Top Ad