தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, June 30, 2021

தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

 






தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை வேதனை அளிப்பதாக உள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி, என்ன உதவி செய்ய முடியுமோ அது அவர்களுக்குச் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.




திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''பள்ளிகளில் ஆய்வு செய்யும்போது ஆசிரியர்கள், மாணவர்கள் தரப்பில் பல்வேறு கருத்துகள், கோரிக்கைகள் வரப் பெறுகின்றன. இவை அனைத்தும் அறிக்கையாகத் தயார் செய்யப்பட்டு, முதல்வர் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் அளிக்கப்படும். நிதிநிலைக்கேற்ப எதுவெல்லாம் சாத்தியப்படுமோ, அதுகுறித்து முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்.



தமிழ்நாட்டில் 5.50 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களது நிலை வேதனை அளிப்பதாக உள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது தொடர்பாக முதல்வர் தலைமையிலான பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி என்ன உதவி செய்ய முடியுமோ அது அவர்களுக்குச் செய்யப்படும்.


தமிழ்நாட்டில் உள்ள 120 கல்வி மாவட்டங்களிலும் தலா 4 அல்லது 5 மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் மழலையர் பள்ளிகளை அதிகமாகத் தொடங்குவது குறித்தும் ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி தெரிவித்தார்.


ஆய்வின்போது சட்டப்பேரவையின் ஸ்ரீரங்கம் தொகுதி உறுப்பினர் எம்.பழனியாண்டி உடனிருந்தார்.




Post Top Ad