கல்வி தரத்தை உயர்த்துவாரா உஷா IAS - ஆசிரியர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, May 28, 2021

கல்வி தரத்தை உயர்த்துவாரா உஷா IAS - ஆசிரியர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு!

 





தமிழக பள்ளி கல்வி துறையின், புதிய முதன்மை செயலரான காகர்லா உஷா மொழி கொள்கை, கல்வி கொள்கை, ஆசிரியர் சங்கங்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட சவால்களை தாண்டி, அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள தி.மு.க., அரசில், துறை ரீதியான மாற்றங்கள் நடந்து வருகின்றன. முதல்வரின் முதன்மை தனி செயலராக உள்ள உதயசந்திரனிடம், பள்ளி கல்வி, உயர் கல்விக்கான பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 


அவரது அனுபவத்தின் அடிப்படையில், சீர்திருத்தங்கள் துவங்கிஉள்ளன.முதல் கட்டமாக, இயக்குனர் பொறுப்பில், நந்தகுமார் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, பள்ளி கல்வி துறையின் தலைமை பொறுப்பில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில்கள் மேம்பாட்டு கழகமான, 'டிட்கோ'வில் இருந்து, பள்ளி கல்வி துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



ஏற்கனவே உதயசந்திரன், பள்ளி கல்வி முதன்மை செயலராக இருந்தபோது, டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக, 2017 பிப்ரவரியில், காகர்லா உஷா நியமிக்கப்பட்டார். நான்கு மாதங்கள் மட்டுமே பணியாற்றிய நிலையில் மாற்றப்பட்டார்.இவரது பணிக் காலத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீதான வழக்குகள் மற்றும் தேர்வு பிரச்னைகள் தொடர்பாக, ஆசிரியர்கள் மற்றும் தேர்வு எழுதியோர் சங்கத்தினர், பல்வேறு போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.



ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த, மின் டிரான்ஸ்பார்மர் தொழிற்சாலை அதிபர் குடும்பத்தை சேர்ந்த காகர்லா உஷா, சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லுாரியில் பொருளியல் படித்தவர். பின், ஐதராபாத் மத்திய பல்கலையில் முதுநிலையும், புதுடில்லி வெளிநாட்டு வணிகத்துக்கான, உயர் கல்வி நிறுவனத்தில், எம்.பி.ஏ.,வும் படித்தவர். 


சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி, 1994ல் தேர்ச்சி பெற்றார்.காஞ்சிபுரத்தில் உதவி கலெக்டர்; பெரியகுளத்தில் துணை கலெக்டர்; ஆதி திராவிடர் நலத் துறையில், துணை செயலர்; தமிழக இணை தலைமை தேர்தல் அதிகாரி; வணிக வரித்துறை இணை கமிஷனர்; சென்னை மாநகராட்சி கல்வி பிரிவு கூடுதல் கமிஷனர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர்.



தற்போது, பள்ளி கல்வி முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ள உஷா, அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் மாணவர்களின் கல்வி தரத்தை, தனியார் பள்ளிகளின் தரத்துக்கு நிகராக உயர்த்துவதற்கான திட்டங்களை செயல்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளாக, பல்வேறு பிரச்னைகளுக்காக போராடும், 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என, ஆசிரியர் சங்கங்கள் எதிர்பார்ப்பில் உள்ளன.தமிழக அரசின் மொழி கொள்கை, தேசிய கல்வி கொள்கை, 'நீட்' தேர்வு விவகாரம் போன்ற நிலைப்பாடுகளில், சவால்களை சமாளிப்பார் என, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






Post Top Ad