தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு - தளர்வுகள் என்னென்ன? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, May 29, 2021

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு - தளர்வுகள் என்னென்ன?

 





காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகை பொருட்கள் வீடுகளுக்கு சென்று விற்க அனுமதி

* ரேசனில் 13 பொருள் தொகுப்பு ஜூன் முதல் விநியோகம்

* முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு


சென்னை: தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு வருகிற 7ம் தேதி வரை மேலும் ஒரு வாரம்  நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், காய்கறிகள் மட்டுமின்றி மளிகை பொருட்களும்  வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று விற்பனை செய்யவும், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும்  வகையில், 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப  அட்டைதாரர்களுக்கு  நியாய விலை கடைகள் மூலம், வரும் ஜூன் மாதம் முதல்  வழங்கிட, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு   முதல்வர்  மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 20 ஆயிரமாக இருந்தது. இது படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி தினசரி பாதிப்பு 40 ஆயிரம் வரை சென்றது. இதையடுத்து, மே மாதம் தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். கடந்த 10ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. ஆனாலும், பொதுமக்கள் ஊரடங்கை முறையாக கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.


இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவை குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற கட்சி குழுக்களுடனும், மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தமிழகத்தில் ஒரு வாரம் எந்தவித தளர்வுகள் இல்லாத ஊரடங்கை அறிவிக்க வேண்டும் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 24ம் தேதியில் இருந்து 31ம் தேதி அதிகாலை வரை ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இந்த முழு ஊரடங்குக்கு நல்ல பயன் கிடைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரமாக குறைந்துள்ளது. அதேபோன்று சென்னையில் தினசரி பாதிப்பு 7 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.


ஆனால் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மட்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்த மாவட்டங்களிலும் தொற்றை குறைக்க அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.   


இந்நிலையில், கடந்த 22ம் தேதி அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், முன்னதாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டறிந்தும், ஆலோசனை மற்றும் கருத்துகளை பரிசீலித்தும், கொரோனா பெருந்தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த, கடந்த 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  


இந்த ஊரடங்கு வரும் 31ம் தேதி காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய் தொற்றின்தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களை காக்கும் நோக்கத்திலும்,  இந்த முழு  ஊரடங்கு  7-6-2021 காலை 6 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன். எனினும், பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும்.  மேலும், மளிகை பொருட்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகை கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம்  உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று  விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை அனுமதிக்கப்படுகிறது.   


இதுதவிர, பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு  நியாய விலை கடைகள் மூலம், வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த, பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும்.


மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும்.   மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க  வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.







Post Top Ad