கரோனா களப் பணியில் ஈடுபட ஆசிரியர்கள் எதிர்ப்பு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, May 26, 2021

கரோனா களப் பணியில் ஈடுபட ஆசிரியர்கள் எதிர்ப்பு!

 





வீடு வீடாகச் சென்று கரோனா அறிகுறிகள் உள்ளதா என கண்டறியும் களப்பணியில் ஈடுபட ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், ஆசிரியர்கள்வீடு வீடாகச் சென்று தொற்றுக்கான அறிகுறிகள் குறித்து கண்டறிய வேண்டும் என ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கல்வித் துறை மூலம் ஆசிரியர்களுக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது:


500 ஆசிரியர்கள் உயிரிழப்பு


மாநிலம் முழுவதும் தேர்தல் பணி மற்றும் பாடப் புத்தக விநியோகத்தில் ஈடுபட்டதன் விளைவாக, கரோனா தொற்றுக்கு ஆளாகி 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் செவிலியர் செய்யக்கூடிய தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மற்றும் அறிகுறிகளைக் கண்டறியும் பணிகளை மேற்கொள்ளுமாறு ஆசிரியர்கள் நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர். எவ்வித பயிற்சியும் இல்லாமல், ஆசிரியர்களை இப்பணியில் ஈடுபடுத்துவதன் மூலம் கரோனா பரவும்.


கடந்த ஆண்டு கரோனா பரவலின்போது, ஆசிரியர்கள் மருத்துவமற்ற பணிகளில் மட்டும் ஈடுபடுத்தப்பட்டனர். அதே நடைமுறையை இந்த ஆண்டும் பின்பற்ற வேண்டும்.


தவிர்க்க இயலாத சூழலில் ஆசிரியர்களுக்கு களப்பணி வழங்கப்பட்டால், 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வழங்கக் கூடாது. ஆசிரியர்களை நேரடி களப்பணியாளர்களாக நியமிக்கும் முன்பாக, அவர்களை முன்களப் பணியாளர்களாக கருதி அரசாணை வெளியிட வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார். இந்தகோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு மனுவும் அனுப்பியுள்ளார்.


இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு கரோனா அறிகுறிகள் கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட களப்பணியை ரத்து செய்ய வேண்டும். தேவைப்பட்டால் களப்பணி அல்லாத இதர பணிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார்.


இறந்த ஆசிரியைக்கு பணியாணை


ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த ஆசிரியை மணிமேகலை நேற்று முன்தினம் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கும் கரோனா தொற்றை கண்டறியும் பணியில் ஈடுபட, பணியாணை வழங்கப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


ஒரே நாளில் 468 பேர் உயிரிழப்பு


தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்பாக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:


தமிழகத்தில் நேற்று ஆண்கள் 19,272, பெண்கள் 15,013 என மொத்தம் 34,285 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 4,041, கோவையில் 3,632, செங்கல்பட்டில் 1,870, திருப்பூரில் 1,854, ஈரோட்டில் 1,555, மதுரையில் 1,358 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 19 லட்சத்து 11,496 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 15 லட்சத்து 83,504 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 28,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 3 லட்சத்து 6,652 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று ஒரே நாளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 468 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21,340 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2 கோடியே 66 லட்சத்து 41,632 பரிசோதனைகள் நடந்துள்ளன. நேற்று மட்டும் 1 லட்சத்து 71,866 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Post Top Ad